நடுக்கடலில் திக்திக்! 17 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது துப்பாக்கிச் சூடு! கதறும் இந்திய மாலுமிகள்
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் பதற்றமான சூழலில், 17 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது ஈரான் கடலோரக் காவல் படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாலுமிகள் செல்லும் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடரும் நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி இப்போது ஒரு போர்க் களமாகவே மாறியிருக்கிறது. அமெரிக்கா ஈரான் இடையே நேரடியாகத் தாக்குதல்கள் இல்லை என்றாலும் கூட இன்னுமே ஹார்முஸில் அமைதி திரும்பவில்லை. அங்குப் பதற்றமான ஒரு சூழல் தொடர்ந்து வருகிறது.

இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்
அங்குச் செல்லும் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை டோகோ நாட்டுக் கொடியுடன் சென்ற கைரோன் 7 (Chiron 7) என்ற கெமிக்கல் டேங்கர் கப்பலை வழிமறித்த ஈரான் கடலோரக் காவல் படை, எச்சரிக்கை விடுத்து துப்பாக்கியால் சுட்டுள்ளது. இந்தக் கப்பலில் 17 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய அரசு
இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக இயக்குநர் மன்தீப் சிங் ரந்தாவா கூறுகையில், "ஓமனின் ஷினாஸ் துறைமுகப் பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கப்பலில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே இந்தப் பகுதியில் இந்திய மாலுமிகள் உள்ள கப்பல்கள் குறிவைக்கப்படுவது அதிகரித்துள்ளது.. கடந்த ஏப்ரல் 18ம் தேதி, இந்தியக் கொடியுடன் சென்ற 'சான்மார் ஹெரால்ட்' மற்றும் 'ஜக் அர்னவ்' ஆகிய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதேபோல கடந்த வாரம், ஈரான் புரட்சிகர காவல் படையினரால் மூன்று வெளிநாட்டுக் கப்பல்கள் தாக்கப்பட்டன. இதில் 'யுபோரியா' மற்றும் 'எபமினோண்டாஸ்' ஆகிய கப்பல்களில் மொத்தம் 22 இந்தியர்கள் இருந்தனர்.
கடல்வழி முற்றுகை
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே இந்தப் பகுதியில் மாறி மாறி கடல்வழி முற்றுகையில் ஈடுபட்டுள்ளன. ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களை அமெரிக்கா தடுப்பதும், அதற்குப் பதிலடியாக அமெரிக்காவுடன் தொடர்புடைய அல்லது அந்தப் பாதையில் வரும் பிற கப்பல்களை ஈரான் சிறைபிடிப்பதும் தொடர்கிறது. இதுவே நிலையை அங்கு மோசமாக மாற்றியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் மிக முக்கியமான பகுதி. பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்தப் போரினால், ஆயிரக்கணக்கான மாலுமிகளுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் பாரசீக வளைகுடாவிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவின் தூதரக முயற்சிகளால் இதுவரை 10 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. இருப்பினும், இன்னும் 14 இந்தியக் கப்பல்கள் அங்கே சிக்கியுள்ளன. அவற்றை மீட்க மத்திய அரசு ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்கிறது என அறிவித்த சில மணி நேரங்களிலேயே அதை ஈரான் மூடுவது, சர்வதேசக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களிடையே பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது!














Click it and Unblock the Notifications