இன்னும் 12 நாள் தான் இருக்கு.. வெடிக்க போகுது "ஆயில்" குண்டு.. ஈரான் கையில் எடுத்த முக்கியமான மேட்டர்
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே இன்னும் பதற்றமான போக்கு தொடர்கிறது. இதற்கிடையே ஈரான் ஒரு இக்கட்டான சூழலில் மாட்டி தவிக்கிறது. ஒரு பக்கம் கார்க் தீவில் இருந்து வரும் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடரும் நிலையில், இன்னொரு பக்கம் அமெரிக்காவின் முற்றுகையால் அதை விற்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது ஈரான்!
ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி இப்போது மரணப் பிடியில் சிக்கியுள்ளது. ஒருபுறம் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை, மறுபுறம் நிரம்பி வழியும் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் என ஈரான் இரட்டை முனைக் கத்தியில் நடக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சுமார் 30 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த 'நாஷா' என்ற பழைய எண்ணெய்க் கப்பலை ஈரான் மீண்டும் தட்டியெழுப்பியுள்ளது.

ஈரான்
ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் இடமான கார்க் தீவில், சுமார் 3 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெய்யைச் சேமித்து வைக்க முடியும். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையால், ஈரானால் எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதாவது உற்பத்தி தொடர்கிறது. ஆனால், அதை விற்க முடியவில்லை.
கார்க் தீவில் இன்னும் 1.3 கோடி பேரல்கள் சேமிக்க மட்டுமே இடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. தினமும் 10 லட்சம் பேரல்கள் வீதம் எண்ணெய் எடுக்கப்படும் நிலையில், இன்னும் 12 முதல் 13 நாட்களில் ஈரானின் ஒட்டுமொத்த சேமிப்புக் கிடங்குகளும் 'ஹவுஸ்புல்' ஆகிவிடும்!
ஏன் சிக்கல்
சேமிப்புக் கிடங்குகள் நிரம்பிவிட்டால், எண்ணெய் கிணறுகளை மூட வேண்டிய கட்டாயம் ஈரானுக்கு ஏற்படும். நம்மில் பலரும் கூட சேமிப்பு கிடங்கு மூடிவிட்டால் நிறுத்துவது தானே சரியாக இருக்கும் என்று நினைப்போம். ஆனால், கச்சா எண்ணெய் கிணற்றை மூடுவது அவ்வளவு ஈஸியான ஒரு வேளை இல்லை. ஒரு முறை மூடினால் அதை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவது கடினம்
மேலும், கிணறுகளை மூடினால் நிலத்தடி நீர் உட்புகுந்து கிணறுகள் நிரந்தரமாகப் பாழாகிவிடும். இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்கவே, பல ஆண்டுகளாகச் சும்மா கிடந்த நாஷா என்ற கப்பலை ஒரு மிதக்கும் சேமிப்புக் கிடங்காக ஈரான் மாற்றுகிறது. இன் மூலம் மேலும் சில நாட்களுக்கு ஈரானால் சமாளிக்க முடியும். சில நாட்கள் தான் என்றாலும் தற்போதுள்ள சூழலில் அவை ரொம்பவே முக்கியமானதாக இருக்கும்!
அமெரிக்கா
ஈரானின் நிலைமையை அமெரிக்காவும் உற்றுக் கவனித்து வருகிறது. அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஏற்கனவே இது தொடர்பாக எச்சரித்திருந்தார். ஈரான் இப்போது அதன் சேமிப்பு எல்லையைத் தொட்டுவிட்டது என்ற ஸ்காட் பெசன்ட், ஈரானால் இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
உலக நாடுகள் மத்தியில் நாங்கள் எதற்கும் தயார் என ஈரான் காட்டிக் கொண்டாலும், சாட்டிலைட் போட்டோக்களை வைத்துப் பார்த்தால் கார்க் தீவில் மூன்று கப்பல்கள் 50 லட்சம் பேரல்களை ஏற்றிக் கொண்டு நகர முடியாமல் தவிப்பது தெளிவாகத் தெரிகிறது. இது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, ஈரானின் பொருளாதாரத்தின் கழுத்தை நெரிக்கும் திட்டமிட்ட பொருளாதார யுத்தம்!
திணறும் ஈரான்
இன்ஜின்களை அணைக்கவும் முடியாமல், கியரை மாற்றவும் முடியாமல் தவிக்கும் ஒரு வாகனத்தைப் போல இருக்கிறது ஈரானின் நிலை. 'நாஷா' கப்பலை மீட்டெடுத்தது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே.. அமெரிக்காவின் முற்றுகை நீடித்தால், ஈரான் தனது எண்ணெய் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கும்.. அது அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும். மேலும், இது சர்வதேச பொருளாதாரத்திலும் மிகப் பெரிய சிக்கலை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது.














Click it and Unblock the Notifications