For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

மனிதன் எதையுமே முழுமையாக ரசிப்பதில்லை-
இனியவை அனைத்தையும் ஒரு சேரப் பருகத் துடிக்கிறான்-

இளநீரைப் பறிக்க தென்னையையே சாய்க்கிறான்-
மாங்கனியைப் பறிக்க மரக்கிளையை முறிக்கிறான்-

அவனுக்கு அனைத்திலும் குரூரத்துடன் கூடிய ஆசை.
அனைத்து இனிமைகளையும் அடுத்தவர்கள் தட்டிப் பறிக்குமுன்
தான் மட்டுமே அள்ளி விழுங்க வேண்டும் எனும் பேரவா-

சாப்பிடும் போதும் சரி-
பருகும் போதும் சரி-
அவன் வன்மம் அப்பட்டமாக வெளிவருகிறது-

அவனால் தன் ஏக்கத்தைக் கூட விழிகளுக்குள் திணித்து
மறைக்க முடிவதில்லை.

அவனால் தனித் தனியாகப் பிரித்து ருசிக்க முடியாததாலேயே
எந்த ருசியுமே இறுதிவரை அவனுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.

குளிரில் கனல் மூட்டிக் கொள்கிறான்-
கோடையில் குளிர்சாதனம் கோருகிறான்-

இருப்பதில் இருப்பதில்லை அவனுக்கு திருப்தி-
இல்லாததை உருவாக்குவதில் இருத்தலோடு அவனுக்கு எப்போதும் போட்டி-

விளக்கு இருட்டைத் தேடுவதாக இருந்தால் தேவலை
இருட்டை விலக்குவதாக இருக்கும் போது மட்டுமே
தொல்லை எல்லையை மீறுகிறது,

இரவும் நிலவும்
என் அண்டைவீட்டுக்காரர் புல்லாங்குழலில்-
ஜதி கெட்டு

ஆங்கில மொழிபெயர்ப்பை வாசிக்க விரும்புபவர்களுக்கு
Night, and The moon
My neighbours, playing on his flute -
out of tune
Kojo
இரவு முழுமையாக இருப்பதால் தான் நிலவு
அழகாக இருக்கிறது.

எப்போது போர்கடுமையாக இருக்கிறதோ
அப்போது தான் வெற்றி மகிழ்ச்சியாக இருக்கும்.-

அசாத்தியமான வெற்றியை கைகளுக்குள் கொண்டு வரும்போதுதான்
மனத்தில் இனிமை வழியும்-

நிலவுக்கு இருக்கும் அழகிற்கு இருட்டுதான் மூலகாரணம்-
இருட்டு தீவிரமடைய தீவிரமடையத்தான் நிலவின் நுட்பமான கிரணங்கள்
சிலிர்க்க வைக்க முடியும்.

கோஜோ சொல்லும் நிலவு
நிச்சயம் முழு நிலவாகத்தான் இருக்க முடியும்-

கவிதையை வாசிக்கும் போது-
மலைக்கான நெடிய பயணம்
மலையுச்சியிலிருந்து தொடங்குவதைப்போல
நம் இலட்சியம் நிலவு என்றதும் பெளர்ணமியிலிருந்து தொடங்கட்டும்.

நிலவின் அழகு இரவின் நிசப்தத்தில் அடங்கியிருக்கிறது-
பகலில் நாம் தேவையில்லாமல் தேய்ந்து கொண்டிருக்கிறோம்--
அன்று நிகழ்த்தியவற்றை இரவில்
நினைத்துப் பார்த்தால் எவ்வளவு வியர்த்தம் எனத் தெரியும்.

உதயத்தைக் கவிதைகள் பாடுகின்றன-
மனிதன் - ஆனால் சபித்துக் கொண்டே இருக்கிறான்-
அவன் தன் நிம்மதியை இரவின் கருப்பைக்குள் தேடுகிறான்.

பதற்றமில்லாத போது நிசப்தமான இரவு-
நிர்மலமான இரவு-
உலகமே நின்று போனது போன்ற நிதானம் - அமைதி - நிம்மதி.

வெளிச்சம் தீவிரமாக வேண்டுமெனில் காதுகள் மூட வேண்டும்-
இசை தீவிரமாக வேண்டுமெனில் கண்களை மூட வேண்டும்-

முழுநிலவு மாதத்தில் ஒரு முறை வாய்த்தாலும்-
எத்தனை முழு நிலவுகளை வாழ்நாளில் முழுமையாக ரசித்திருக்கிறோம்-

நாம் பிறை கண்டவர்கள் - நிலாக் கண்டவர்கள் இல்லை -
இன்று மேகங்கள் முந்தானையால் மூடாத முழுநிலவு-

இதை ரசிக்கும் போது
எவ்வளவு இனிமையாக வாசித்தாலும்
அண்டைவீட்டுக்காரர் புல்லாங்குழல் அபசுரம்தான்-

புல்லாங்குழலை எப்போது வேண்டுமானால் வாசிக்கலாம்-
முழுநிலவை வசதிபோல் வாசிக்க முடியுமா?

(தூறல் வரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X