• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயக்குநர் சேரனுடன் ஒரு சந்திப்பு

By Staff
|
Cheran

இன்றைய தமிழ்த் திரை உலகம் பயணிக்கும் பாதை, குறீத்து இரு வேறு கருத்துக்கள் இருந்தாலும் சமூக அக்கறையை மையமாகவைத்துச் சிந்தித்தால் நம் மனதில் மிஞ்சுவது விவரிக்க முடியாத வேதனை மட்டுமே. கடைக்கோடியில் இருக்கும் பாமரனுக்கும்எளிதில் புரியும்படி எதையும் எடுத்துக் சொல்ல மிகச் சரியான ஊடகம் திரைப்படம். அந்தச் சரியான ஊடகம் தவறான பாதையில்பயணிப்பதன் விளைவுகளை வெகு சீக்கிரத்தில் நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதே சமூகச் சிந்தனையாளர்களின் கருத்து.

எனினும் ஒட்டு மொத்தத் திரை உலகையும் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு ஆங்காங்கே அவ்வப்பொழுது ஒரு சிலயதார்த்தவாதிகளும், சமூகப் பார்வை கொண்ட படைப்பாளிகளும் இத்துறையிலும் இருக்கிறார்கள், முளைக்கிறார்கள். அந்த ஒருசிலரில் ஒருவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய யதார்த்தப் படைப்பாளி இயக்குநர் சேரன் என்பது, அவரது படையல்களைருசித்தவர்களுக்குத் தெரியும்.

அவரது சமீபத்திய படைப்பானஆட்டோகிராஃப் படத்தின் 200வது நாள் வெற்றியை எளிமையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தசேரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடியதன் தொகுப்பு :

Cheranஉங்களுடையஆட்டோகிராஃப் படத்தின் வெற்றிக்குக் காரணம் வித்தியாசமான படைப்பா? அல்லது ரிஸ்க்எடுத்துப் பார்க்கலாம் என நினைத்ததன் விளைவா?

என்னுடைய முதன்மையான நோக்கம் வித்தியாசமாகப் படைக்க வேண்டும் என்பதுதான். அதற்காக நான் எடுத்துக் கொண்டமுயற்சி அதிகம். மேல் நாட்டுப் படங்களையும் அதில் உள்ள யதார்த்தத்தையும் பார்க்கும் போது அதுபோல நம்மால்தரமுடியவில்லையே என்று ஆதங்கப்படுவேன். நம்மூரில் கலை என்பது பொழுதுபோக்கு அம்சம் என்று மாறி விட்டது. அதற்குள்நாமும் மூழ்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு வெறி வந்து விடுகிறது. அதன்விளைவு தான் ஆட்டோகிராஃப்.

அவரவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தேடிக் கண்டு பிடித்து நினைவு கூர்ந்தாலேபோதும். இன்றைய உலகில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறவு, பந்தம், பாசம் என்பது வேறு வேறாக இருக்கிறது. அதைஅப்படியே யதார்த்தம் மாறாமல் செய்தாலே போதும் வெற்றி கிடைக்கும். நம் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைமூடி மறைக்காமல், பூசி மெழுகாமல் அப்படியே எடுத்துச் சொன்னேன். நான் எதிர்பார்த்தை விட அதிக வெற்றி கிடைத்தது. இதுமுழுக்க முழுக்க யதார்த்தத்திற்கு கிடைத்த வெற்றி தான்.

நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒவ்வொருவரும் ஒரு படத்தை ஒரு முறை பார்த்தாலே போதும். எல்லா படங்களும்நூறு நாட்கள் ஒடும். ஆனால் உண்மை அப்படியில்லை. மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர்தான் திரைப்படம்பார்ப்பவர்கள். இந்த 30 சதவீதத்திலும் பல்வேறு ரசனைப் பிரிவினர் உண்டு. அதில் கவர்ச்சியை விரும்பும் பிரிவு ஒரு சிறுஅளவுதான். அனைத்து ரசனைப் பிரிவைச் சேர்ந்த இந்த 30 சதவீத மக்களின் ரசனைக்கான படமாக ஆட்டோகிராஃப் அமைந்தது.காரணம், அது அவர்களின் வாழ்க்கையோடு ஒத்துப் போனது தான்.

வாழ்க்கையில் வெற்றியின் ரகசியமாக நீங்கள் நினைப்பது?

மரம், செடி, கொடிகள் கூட வளராமல் சாவதில்லை. எந்த ஒரு ஜீவராசியும் வளராமல் மண்ணில் புதையுண்டு போவதில்லை.அதுபோல ஒவ்வொரு மனிதனும் தன்னுள் வளர்கிறான். அவனுடைய தேடல், முயற்சியைப் பொறுத்து வளர்ச் சியும் வெற்றிவீதமும் மாறுபடுகிறது. ஒரு சினிமாக்காரன் என்ற முறையில் ஆட்டோகிராஃப் படத்தைக் கூட நினைத்தவுடன் செய்துவிடவில்லை. திட்டமிட ஒரு வருடம், படப்பிடிப்பிற்கு ஒரு வருடம் என்று வேறுபட்டச் சூழலுக்கு ஏற்ப மாறி மாறி செய்யஏகப்பட்ட நேரம் ஒதுக்கினேன். அந்தக் காலத்திற்கு பின்னோக்கிச் செல்ல நிறைய சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.தேடல், முயற்சியுடன் படத்தின் பின்னணிக் காட்சிகளை பொறுத்திருந்து எடுத்ததால்தான் வெற்றி கிடைத்தது.

தமிழில் இது போன்ற படங்கள் ஏன் தொடர்ந்து வருவதில்லை?

வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் இன்றைய திரை உலகம் என்பது வணிகமயமாக மாறிவிட்டது. மனிதமூளைக்கு ஒரு விசயத்தை பழக்கி விட்டால் எளிதில் மறக்க முடியாது.

ஒருவர் மட்டும் இழுத்தால் தேர் நகராது. ஊர் கூடி இழுத்தால்தான் நகரும். அது போல இன்னும் நிறைய பேர் முன் வந்தால் நீங்கள்நினைப்பது போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவரும்.

உங்கள் படத்தின் மீதான எதிர் விமர்சனம்எதுவும் வந்ததுண்டா?

Cheranபெரிய அளவில் எதுவும் இல்லை. ஒரு குடும்பத்தின் கணவன், மனைவி இருவரும் உட்கார்ந்து தங்கள் கடந்த கால காதல்வாழ்க்கையை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு பேசக் கூடிய அளவிற்கு பக்குவத்தை இந்தப் படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.எதிராக விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒரு சிலர் விமர்சித்தார்கள்.

ஆட்டோகிராஃப் மட்டுமல்லாமல் உங்களது அடுத்த படத்திற்கும் டூரிங் டாக்கீஸ் என்ற ஆங்கிலத் தலைப்புவைக்கக் காரணம்?

சூழலும், நெருக்கடியுமே அப்படித் தலைப்பு வைக்க வழி வகுத்து விடுகிறது. திரை உலகின் சில கட்டாயக் காரணங்களுக்காவும்அப்படி நிர்பந்திக்கப்பட்டேன்.

இத்துறையில் ஈடுபட விரும்பும் புதியவர்களுக்கு...?

ஒரு திரைப்படத்தை இயக்க குறைந்த பட்சம் 30 ஆண்டு வாழ்க்கை அனுபவம் தேவை. குடும்பம், உறவு, பந்தம், பாசம்,வாழ்க்கை தொடர்பான பல்வேறு சூழல்களை அனுபவித்து உணர்ந்திருக்க வேண்டும். அவசர உலகத்திற்குள் அடிமையாகிஅனுபவம் இல்லாமல், பெற்ற அனுபவத்தைச் சொல்லத் தெரியாமல் திரைப்படத்தை இயக்க முடியாது. சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு கலைஞனும் அனுபவத்தோடும், உணர்வுடனும், தொழில் நேசிப்புடனும் ஈடுபட்டால் வெற்றி தொட்டு விடும்தூரம் தான்.

ஆவணப் படங்களுக்கும் வெகு ஜனப் படங்களுக்கும் உள்ள இடைவெளி குறித்து...?

அந்த இடைவெளி தகர்க்கப்பட வேண்டும். நல்ல படம் செய்யும் இயக்குநர்கள் ஆவணப் படங்கள் செய்யும் நிலை வர வேண்டும்.அரசும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அத்தகையப் படங்களை எடுக்க முன் வர வேண்டும்.

உங்கள் கனவு...?

மூளை மழுங்கச் செய்யும் படங்கள் வராமல் தடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு நடிகனை, ஒரு கலைஞனை அவனுடையதிறமை, ரசனையின் மூலம் அங்கீகரிக்க வேண்டும்.

- மன்னை பாஸ்கர்(kb_chandran@yahoo.com)

இவரது முந்தைய படைப்புகள்:

1. அஞ்சு நிமிஷம்

2. குழப்பம்

3. இன்டர்வியூ

4. சாலமன் பாப்பையாவுடன் ஒரு சந்திப்பு

5. தமிழ்க் கவிஞர்கள் தகுதியற்றவர்களா?

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mr_anusiram@yahoo.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X