• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எழுத்தாளர் விமலா ரமணியுடன் சந்திப்பு

By Staff
|

தனது எழுத்தாற்றலால் ஏராளமான வாசகர்களை கவர்ந்திருப்பவர், 600 நாவல்களும், 1000க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதி பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி, சினிமா என்று எல்லா ஊடகங்களிலும் கால் பதித்திருக்கும் எழுத்தாளர் திருமதி விமலா ரமணி அவரைச் சந்தித்த போது...

உங்களுக்குள் எழுத்தார்வம் ஏற்பட்டது எப்படி?

என் தாயார் கதை, கட்டுரைகளை விரும்பிப் படிக்கும் பழக்கமுள்ளவர். கல்கி, லஷ்மி, ஆர்.சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் தொடர்கதைகள்,நாவல்களை சேகரித்து வைத்திருப்பார். அவற்றைப் பார்க்கும் போது நாமும் ஏன் கதை எழுதக் கூடாது? என்றொரு கேள்வி எனக்குள் ஏற்பட்டது.உடனே முயற்சியைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் நான் எழுதி அனுப்பிய கதைகள் பத்திரிகை அலுவலகங்களிலிருந்து திரும்பி வந்தன என்றாலும் நான்சோர்ந்து விடவில்லை. தொடர்ந்து எழுதினேன்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல தொடர்ந்து எழுதி என் எழுத்துக்களை நானே சீரமைத்தேன். இன்றைய சூழலில்,எழுதுவது எப்படி? என்று தெரிந்து எழுத ஏராளமான முன்னோடிகள், புத்தகங்கள் உண்டு. ஆனால் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் அப்படி எந்தவாய்ப்பும் கிடையாது. எனவே எத்தனை முறை என் கதைகள் திரும்பி வந்தாலும் சோர்ந்து விடாமல் திரும்பத் திரும்பத் எழுதிக் கொண்டே இருந்தேன்.சோர்ந்து விட்டால் நம்மைச் சுற்றி சுவர் எழுப்பி விடுவார்கள் என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு சோர்வை விரட்டி உற்சாகத்தோடுஎழுதினேன்.

இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஏதாவது கொள்கை வைத்திருக்கிறீர்களா?

எழுத்தில் கொள்கை, கட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது. அதே நேரம் புதுமை, புரட்சி என்ற பெயரில் நம் பண்பாடு, கலாச்சாரம் பாதிக்கும்வகையில் எழுதியதில்லை. ஒரு பெண் தாலியை கழற்றி எறிவதாகக் கூட கதையில் எழுதியிருக்கிறேன். ஆனால் அப்போது கூட நம் பண்பாடு சிதையாதவகையில் அதற்கான நியாயமான காரண காரியங்களை கதையினூடே வழங்கியிருக்கிறேன்.

முழுமையான பெண் விடுதலை என்பது கிடைத்து விட்டதா? இல்லையா?

பெண் விடுதலை, சுதந்திரம் என்பது அந்தந்தப் பெண்ணின் மனசைப் பொறுத்தது, எடுத்துக் கொள்ளும் விதத்தைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரைபெண்களுக்கு கல்விச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இவை மூன்றும் அவசியம். கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்குகருத்துச் சுதந்திரம் முழுமையாக கிடைத்து விட்டதாகச் சொல்ல முடியாது. ஆண்களுடைய கருத்துக்களையும், முடிவுகளையும் பெண்களிடம் திணிப்பதுதான் இன்னும்ஒரு சில கிராமங்களில் பெண் சுதந்திரமாக இருக்கிறது.

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு குடும்பத்தை ஒரு பெண்ணால்தான் அமைக்க முடியும். நம் கலாச்சாரம் சீரழியாமல் பேணிக்காப்பவர்கள் பெண்கள்தான். ஆனால் அந்தப் பெண்ணை கேவலப்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒரு குறுகிய கூட்டமும் உண்டு. சிலதொலைக்காட்சித் தொடர்கள், நாடகங்கள், விளம்பரங்கள் கூட பெண்ணை சிறுமைப்படுத்தி, கலாச்சார சீரழிவை போதிக்கும் வகையில்எடுக்கப்படுகின்றன. மேல் நாடுகளில் கூட நம் கலாச்சாரத்தை பின்பற்றும் இன்றைய நிலையில் மோகம் என்ற பெயரில் நம்மை நாமே சீரழித்துக்கொள்வது தவிர்க்கப்படுவதும், தடுக்கப்படுவதும் அவசியம்.

பெண்ணிலைவாதம் பற்றிய உங்கள் கருத்து?

அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் பிரபல பெண் ஒருவரின் பேட்டியைப் படித்தேன். என் தேவைகளை நானே நிறைவேற்றிக் கொள்ளும் போது எனக்குக்கல்யாணம் என்பது எதற்கு? என்று ஒரு பதில் சொல்லியிருந்தார். இதற்குப் பெயர் பெண்ணியம் அல்ல. பெண்ணியம் என்பது தாலியையோ பிராவையோகழற்றி எறிவதில் இல்லை. படித்த பெண்கள் கூட பெண்ணியத்தைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மனதைரியம், சாதிக்கும் மனப்பாங்குஇவைதான் பெண்ணியம்.

எழுத்துத் துறை வாங்கித் தந்திருக்கிற பிரபலம் என்கிற பெயர் உங்களுக்குப் பெருமிதம் தருகிறதா?

நிச்சயமாக, தேடல், முயற்சி வெற்றிக்குக் கிடைத்திருக்கிற பரிசல்லவா அது.

பெண் சுதந்திர பாதிப்புக்கு ஆண்கள் மட்டுமே காரணமா?

சமையலறைக்கும், படுக்கையறைக்கும் மட்டுமேயான ஒரு கருவி என மனைவியை நினைக்கும் ஒரு சில கணவர்களால் பெண் சுதந்திரம் என்பதுபாதிக்கப்படலாம். அதற்காக ஆண்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்த விரும்பவில்லை. ஒவ்வொரு பெண்ணும் தன் திறமைகளை வளர்த்துக் கொள்ளமுயற்சிக்க வேண்டும். தடைகளை உடைத்தெறிந்து வெளியே வர வேண்டும். உடமைகளைக் கேட்டுப் பெற வேண்டும். ஒரு சில விசயங்களில் பெண்ணுக்கு எதிரிபெண்ணாக இருப்பதும் மாற வேண்டும்.

விதவைப் பெண்களின் மறுவாழ்வு என்பது...?

விதவைப் பெண்களின் மறுவாழ்வு என்பது அவர்களின் மற்றொரு திருமணத்தில் மட்டுமே இல்லை. நிராதரவாக நிற்கும் அவர்களுக்கு எதிர்காலபாதுகாப்பு என்பது முக்கியம். அது அவர்களின் மறுமணமாகவும் இருக்கலாம்.

- மன்னை பாஸ்கர்

இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X