• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போது அணையும் தருமபுரி நெருப்பு?

By Staff
|

"எதற்கும் அஞ்சாதவர், எவர் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்காதவர் என்றெல்லாம் போலிப் புகழ் மாலைகள் நம் தமிழக முதல்வர் தோளில் சூட்டப்படுகின்றன.

ஆனால், 2000ம் ஆண்டில் நடைபெற்ற, தருமபுரி மாணவியர் உயிருடன் எரிப்புக் கொடூரத்தில், ஜெ. அரசு எவ்வாறு நடந்து கொள்கின்றது என்பதைக் கவனித்தால், ஜெயலலிதாவின் நேர்மையும், அஞ்சாமையும் எப்படிப்பட்டவை என்பது புரிந்துவிடும்.

ஐந்தாண்டுகளுக்கு முன், கொடைக்கானல் "பிளசன்ட் ஸ்டே விடுதி தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு தண்டனையை நீதி மன்றம் வழங்கியது. உடனே திட்டமிட்ட கலவரங்கள் தொடங்கின.

தருமபுரிக்கருகில், கல்லூரி மாணவியரின் பேருந்து ஒன்று தீயிடப்பட்டது. உள்ளேயிருந்த மாணவியர் வெளியில் வர இயலாதவாறு, பேருந்தின் வெளிக் கதவைத் தாழிட்டு விட்டுத் தீ மூட்டினர் அந்தக் கொடுமையாளர்கள். வேறு வழியின்றி, உள்ளேயே எரிந்து சாம்பலாயினர் சில மாணவிகள்.

கல்லூரிக்கு அனுப்பப்பட்ட பெண், கருகிச் சாம்பலாகி வருவாள் என்று எந்தப் பெற்றோர் எண்ணியிருப்பார்கள்? அந்த மாணவியரின் குடும்பங்கள் அழுது தீர்த்தன. நாகரிகமான மனிதர்கள் அனைவரும் அந்தக் காட்டு விலங்காண்டித்தனக் கயமையைக் கண்டித்தனர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடந்து கொண்டிருந்த போது, ஆட்சி மாறியது. அம்மையார் அரியணை ஏறினார். அவ்வளவு தான் காட்சிகள் மாறின, சாட்சிகள் தடம் புரண்டனர், வழக்குக் கிடப்பில் போடப்பட்டது.

உயிருடன் எரிக்கப்பட்ட கோகிலவாணி என்னும் மாணவியின் தந்தை வீராசாமி, உயர்நீதி மன்றத்தில் இப்போது வழக்குத் தொடுத்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி வி.கனகராஜ், கால தாமதம் பற்றிக் கடுமையாகவே விசாரணை நடத்தியுள்ளார்.

மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பான ஆவணங்கள் எல்லாம் தொலைந்து போய் விட்டன என்று அரசு தரப்பில் "மிகப் பொறுப்பான விடை தரப்பட்டுள்ளது.

பசிக்கு உணவைத் திருடிச் சென்ற குப்பன், சுப்பன் வழக்கு "ஆவணங்களை எல்லாம் பத்திரமாகப் பாதுகாத்துப் பல ஆண்டுகள் வழக்கு நடத்தும், நம் "திறமை மிகுந்த காவல் துறையால், ஒரு கொடூரமான கொலை வழக்கு ஆவணங்களை எவ்வளவு எளிதில் தொலைத்து விட முடிகிறது!

நீதிபதி விடவில்லை. இன்னும் மூன்று நாள்களுக்குள் அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்திற்கு வரவேண்டும், இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அடடா, என்ன வியப்பு.... இரண்டே நாள்களில் "தொலைந்து போன கோப்புகள் எல்லாம் கிடைத்து விட்டன. இங்கேதான், ஜெ. அரசின் நேர்மையும், வழக்கு நடத்தும் திறமையும் வெளிப்பட்டுள்ளன.

வழக்குப் பதிவு செய்யப்பட்ட முறை, நடத்துவதில் உண்டான செயற்கைத் தாமதம் எல்லா வற்றையும் நீதிபதி கடிந்து கொண்டுள்ளார். இன்றைய உள்துறைச் செயலாளர், இரண்டு முன்னாள் உள்துறைச் செயலாளர்கள், ஒரு காவல்துறை மூத்த அதிகாரி ஆகிய அனைவரின் பொறுப்பற்ற தன்மைகளும் நீதிமன்றத்தால் கண்டிக்கப் பட்டுள்ளன.

இங்கே மட்டுமன்று, எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கின்றன. குசராத்தின் கோரக் கொலைகளை மோடி அரசாங்கம் எப்படி மூடி மறைத்தது என்பதை நாம் அறிவோம். "அனைத்துலக மன்னிப்பு அவை , அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றில், குசராத்து அரசை மிகக் கடுமையாகக் கண்டித் துள்ளது.

""அருகில் நன்று வேடிக்கை பார்த்த குசராத்துக் காவல்துறையினர், பாலியல் வன்முறைகளைத் தடுக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று அந்த அறிக்கை குற்றம் சாற்றியுள்ளது. குசராத்தில், ஏறத்தாழ 4000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் பாதியை அரசு மூடிவிட்டது என்பது அவ்வறிக்கை தரும் செய்தி.

கொலைகளைப் பற்றிய விசாரணைகளோடு மட்டுமல்லாமல், வேடிக்கை பார்த்த காவல்துறையினரரின் மீதும் விசாரணை தொடங்க வேண்டும் என்று அறிக்கை கோருகின்றது.

1984ஆம் ஆண்டு, இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடன், காங்கிரஸ் ஆட்சியில், சீக்கியர்கள் எப்படி வேட்டையாடப்பட்டனர் என்பதையும் நாடு அறியும். இருபது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்னும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை. அது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஆய்வுக்குழு, தன் அறிக்கையை அரசிடம் கொடுத்துவிட்டது. ஆனால் அரசு அதனை இன்னும் வெளியிடவில்லை.

மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் பற்றியெல்லாம் நிறையப் பேசும், காங்கிரஸ் கட்சியும், அதன் அரசும் 1984ஆம் ஆண்டுக் கலவரம் பற்றியும், சீக்கியர்கள் தாக்கிக் கொல்லப் பட்டது பற்றியும் ஏன் பேச மறுக்கிறது?

சட்டம், ஒழுங்கு, நீதி எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும்தான், தங்களுக்கில்லை என்று எல்லா அரசுகளும் கருதுகின்றன.

நீதி கேட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தால் மட்டுமே இனி நியாயம் கிடைக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X