For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவாளர் சோ அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

By Staff
Google Oneindia Tamil News

திரு சோ அவர்களே!

தாங்கள் முதன்முதலில் தமிழக மக்களுக்கு ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானீர்கள். அன்றைய நாட்களில் உங்கள் நடிப்பு வயிறுகுலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும்படியான நல்ல நகைச்சுவை நல்கியது என்பது உண்மை. அந்தத் திறமைக்குப் பெரிதும் உதவியது உங்களதுஅசாதரணமான கண்கள் என்பதும் உண்மை. அதன்பின் நாடகத்துறையில் நுழைந்தீர்கள். உங்கள் நாடகங்கள், வெறும் பொழுதுபோக்குஅம்சங்கள் மட்டுமே என வரையறுத்து ஒதுக்கிவிட இயலாதவாறு, தீவிர அரசியல் விமர்சனப் "புரட்சி நாடகங்கள்" என்னும் நிலைக்குஉயர்ந்து, அத்துறையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை. அத்தகையதாங்கள், நடிப்புத்துறையிலேயே நிலைகொண்டிருந்திருந்தால், இன்று அத்துறையில் இமாலய சாதனை படைத்திருப்பீர்கள்.

கலைத்துறை செய்த பாவமோ அல்லது தமிழக மக்களாகிய நாங்கள் செய்த பாவமோ, தாங்கள் பத்திரிக்கைத் துறையில் கால் பதிக்கமுடிவெடுத்து திடீரென நுழைந்தே விட்டீர்கள். அதிலும் எப்படி நுழைந்தீர்கள்? பத்திரிக்கை தொடங்குவதற்கான ஆசையை அல்லதுதேவையை வெளிப்படுத்தி, இத்துறையில் எவ்வாறு வளரப்போகிறோமோ எனும் ஒரு மெல்லிய அச்ச உணர்வோடு, பத்திரிக்கையைவாங்குவதற்கான பணிவான வேண்டுதல்களோடு, இப்படி ஏனைய சாதராணமானவர்கள் வழிமுறைகளில் தாங்கள் நுழையவில்லை.அனுமன் மலையை ஒரு கரத்தில் அனாயாசமாக சுமந்துகொண்டு பெருங்கடலைத் துச்சமாகத் தாண்டும் காட்சிபோல் மிகப் பெரியஉருவகத்தை உருவாக்கிக்கொண்டே தடாலடியாக நுழைந்தீர்கள். தங்கள் பத்திரிக்கை, அதுவரை தமிழக மக்களுக்கு அவ்வளவாகபரிச்சயப்படாத "புலனாய்வு இதழியல்" என்ற வகையிலும், இன்னும் ஓர் படி மேலே சென்றும், அதுவரை பல்லாண்டுகள் உழைத்துபத்திரிக்கை "ஜாம்பவான்கள்" என்று இடம் பிடித்திருந்தவர்கள் மத்தியில் உங்களை அமரவைத்ததோடு, அவர்களில் சிலரை அதிரவும்வைத்தது.

Cho அன்று அனைத்துத் தமிழகத்தின் பத்திரிக்கையாளர்களும் தாங்கள் எந்தத் தளத்திலிருந்து அல்லது எதன் சார்பாக தங்கள் எழுத்துக்களைத்தருகிறோம் என நேரடியாகவோ அல்லது சற்று இலைமறை காயாகவோ தெளிவுபடுத்தியே தங்கள் பத்திரிக்கைப் பணியினைச்செய்தார்கள். ஆனால் தாங்களோ, ஏனைய பத்திரிக்கையாளர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டுள்ளதாகவும், தங்களுக்கென்று ஒருதனித்தன்மை உள்ளதாகவும், தாங்கள் எந்தச் சார்புநிலைக்கும் உட்படாததால், எவரையும் எதையும் துணிந்து விமர்சிக்கும் நோக்கும்,போக்கும் உள்ளவராகவும் விளம்பரப்படுத்திக் கொண்டீர்கள். ஆரம்பநாட்களில் இந்த உங்கள் விளம்பரத்திற்குச் சற்று வலுவும், பொருளும்இருக்கத்தான் செய்தது. எனவே நடுவு நிலைச் செய்திகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த பலரும் உங்களை உச்சாணிக் கொம்பில் கொண்டுநிறுத்தினர். உங்கள் எண்ணத் தராசு வள்ளுவன் கூறியபடி "சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல்" அமைந்து, அதன் வாயிலாக நீதிதேவதை,தமிழகத்தின் தெருக்களெங்கும் தரிசனம் தருவாள் என எதிர்பார்த்தனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

உங்கள் திறமையால் - (நன்றாக நினைவில் கொள்ளவும், நேர்மையால் அல்ல திறமையால்) - அவர்கள் எதிர்பார்ப்புகளை லாவகமாகக்கையாண்டு உங்கள் பத்திரிக்கை விற்பனையைக் கணிசமாக்கிக் கொண்டீர்கள். இந்திய அரசியல் சாசனம் எழுத்துச் சுதந்திரத்தைஎல்லோர்க்கும் அடிப்படை உரிமையாக மிகத் தெளிவாக வழங்கி மகிழ்கிறது. அதன்பின்னும் உங்களைப் போன்றோர் ஏன் வீண் முகமூடிஅணிந்து "உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று" எழுத வேண்டும் என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது.

பாரதி போன்ற உயர்ந்தவர்களால் போற்றப்பட்ட பல சமுதாய பார்வைகளிலாகட்டும் (உம். "பெண்ணியம்") அல்லது சமகால அரசியல்விமர்சனங்களிலாகட்டும் உங்கள் எழுத்துக்களில் மிளிர்வது உங்கள் விவாதத்திறமையும், அறிவு மேதைமையுமே தவிர உண்மையானநேர்மை கிஞ்சித்துமில்லை. மற்ற சார்புநிலை எழுத்தர்கள் இத் திருப்பணியைச் செய்தால், அது அவர்களுக்கு உரிய கைக்கட்டு அல்லதுஇக்கட்டு என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் தாங்கள் மிகப் பெரிய நடுநிலையாளர் என்றும், பத்திரிக்கை தர்மத்தைக் காப்பாற்றவேஅவதாரமெடுத்த அவதார புருஷர் என்றும், ஒரு மாயை தோற்றுவிக்கப்படுவதால்தான் உங்களை இந்த அளவுக்கு விமர்சிக்கவேண்டியதாகிறது.

இன்று தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் காஞ்சி சங்கரமட விவகாரத்தை எடுத்துக்கொண்டாலே தங்கள் எழுதுகோலின் நடுவுநிலைஎத்துணைக் கேலிக்கூத்து என்பது புலனாகும். நான் மடத்தின் உள் விவகாரங்களில் செல்ல விரும்பவில்லை. எவையெவைஉண்மையென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். ஆனால், இந்து மதத்தினுடைய ஏகபோக தத்துவ, ஆன்மீக மற்றும் அதிகார மையமாகத்தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் ஒரு மிகப்பெரிய மடம், இன்று இந்து மதத்தினுடைய ஆரம்ப அடிப்படை ஒழுக்க நெறியிலேயேஓரளவுக்காவது பிறழ்ந்துதான் செயல்பட்டிருக்க வேண்டும் என்று, விருப்பு வெறுப்பற்ற சாதாரண மக்கள் ஏறத்தாழ முடிவுக்கே வந்துவிடும்அளவுக்கு, மடத்தின் செயல்பாடுகள் அமைந்திருந்திருக்கிறதே! இது என்ன ஒரே ஒரு இரவிலா நடந்துவிட்டது?

இத்தகைய ஒரு மிகப்பெரிய ஸ்தாபனத்தினுடைய செயல்பாடுகளில், சிறு சறுக்கல் தொடங்கிய உடனேயே, அதனுடன் சற்றேனும்நெருக்கமுள்ள தங்களைப் போன்ற பத்திரிக்கையாளருடைய தார்மீகக் கடமை என்ன? இதுவரை இதுபற்றி எழுத உங்கள் எழுதுகோல்தவறியதின் காரணம் என்ன? எனது கவனத்திற்கு வரவில்லை எனக் கூற முற்படுவீர்களானால் - (தாங்கள் சார்ந்துள்ள அதே பத்திரிக்கைத்துறை சார்ந்த திருமதி அனுராதாரமணன் இம்மடத்தின்மீது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தான் குற்றம் சுமத்தியிருப்பதாக கூறுவதையும்கருத்தில் கொள்ளவேண்டும்) - தாங்கள் பத்திரிக்கை நடத்துவதற்கான அடிப்படை தகுதியையே இழந்தவராவீர்கள். உங்கள் திறமையில்நம்பிக்கை வைத்துள்ள பலர் நிச்சயமாக இந்தக் கூற்றை ஏற்கவும் மாட்டார்கள். எனவே எஞ்சியிருப்பது "தெரிந்ந்தும் எழுதவில்லை"அல்லது "எழுத விரும்பவில்லை" என்பதுதான். அவ்வாறானால் அதற்குரிய காரணத்தை விளக்கவேண்டிய பொறுப்பு உங்களைச்சார்ந்ததாகிறது.

வேறு எந்த அமைப்பிலும் தவறு ஏற்பட்டாலோ அல்லது ஏற்பட வாய்ப்பிருந்தாலோ தங்கள் எழுதுகோல் எந்த அளவுக்கு, அந்தஅமைப்பின் மீது கேலிச் சித்திரமாக, கட்டுரையாக குறைந்தபட்சம் ஒரு கேள்வி--பதிலாகவேனும் பாய்ந்திருக்கும் என்பதை உணர்ந்தவர்கள்,உங்கள் இந்த நீண்ட கால இருட்டடிப்பில் உள்ள உங்கள் சார்புநிலையை எண்ணி வேதனைப்படாமல் அல்லது விமர்சிக்காமல்இருக்கவேண்டும் என தாங்களே எதிர்பார்க்க மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். எனவே தங்களுக்கு எனது வேண்டுகோள் ஒன்றுதான்.

தாங்கள் உடனடியாக நீங்கள் விரும்புகின்ற அடிப்படைத் தளத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தி அதன் சார்பாகத்தான் எழுதப்போவதாகஅறிவித்துவிடுங்கள். அரசியல் கட்சிகளுக்காகவும், இயக்கங்களுக்காகவும் அவ்வளவேன்? இன அமைப்புகளுக்காகக் கூடபத்திரிக்கைகள் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு மட்டும் அந்த உரிமையை யாரும் மறுத்துவிடப் போவதில்லை.அவ்வாறின்றி இன்னும் உங்களை நடுநிலையாளராகவே காட்டிக்கொள்ள விரும்புவீர்களானால், சற்று வாதத்திறமையைஒதுக்கிவைத்துவிட்டு, ஆத்மார்த்தமாக உங்களை நீங்களே ஒரு "சுய சத்தியப் பரிசோதனைக்கு" உட்படுத்திக் கொள்ளுங்கள். இந்தச் சுயஆய்வு ஒருவேளை இனியேனும் உண்மையான நடுநிலையாளராக செயல்படத் துணைபுரியலாம். மேலும் "பலர், என்னை என்எழுத்துக்காக மட்டும் விமர்சிக்காமல், இன அடிப்படையிலேயே விமர்சிக்கிறார்கள்" என்ற தங்களின் மனக்குறை நீங்கவும் இச் சுய ஆய்வுபயன்படலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

- மன்னை மாதேவன்([email protected] )

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X