For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கராச்சாரியார், வீரப்பன், ஜெயலட்சுமி....

By Staff
Google Oneindia Tamil News

சங்கராச்சாரி கைது செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த அதிர்ச்சியில் வீரப்பன் கொலை, ஜெயலட்சுமி எழுப்பிய பிரச்சனைகள்அனைத்தும் காணமற்போய்விட்டன.

Jayendrarசங்கராச்சாரியார் கைது பக்தர்களை, மத நம்பிக்கை உள்ளவர்களை உலுக்கியுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அழுக்கான உலகத்திலிருந்து தப்பிக்க ஆன்மீகஉலகில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு ஆன்மீக உலகமும் அப்படித்தான் என்ற உண்மையைச் சகித்துக்கொள்ள முடியாதுதான். ஆன்மீகம் இன்றைய மனிதனுக்குத்தேவையான ஒன்றாக இருக்கிறது. உலகமயம் துரிதப்பட்டு அனைத்து மட்டங்களிலும் நெருக்கடிகள் அதிகரிப்பது குடும்ப உறவுகளிலும், தனிமனிதஉணர்வுகளிலும் மேலும் தனிமையையும், அறவாழ்க்கை பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. இதற்கான தீர்வு இன்றைய உலக வாழ்வில்இல்லையென்பதால் மற்றொரு கற்பனை உலகைப் படைத்து அங்கே நிம்மதியைத் தேடும் ஆன்மீக முயற்சிகள் புதிய வேகம் பெற்றுள்ளன. கார்ப்பரேட்நிர்வாகப் பிரிவினரை ஏமாற்றிய சதுர்வேதி போன்ற சமீபத்திய மடாதிபதிகள், குண்டலினி யோகத்தின் புதிய வேகம் போன்றவை அதனைத்தான்காட்டுகின்றன.

ஆன்மீகம் நிறுவனமாகும்போது, இருக்கும் சமூக அமைப்புக்குள், அதிகாரக் கட்டமைப்புக்குள் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. அதிகாரக்கட்டமைப்புக்குள் நுழைந்தவுடன் அதற்கான விதிகள் இயங்கத் துவங்குகின்றன. Power corrupts. Absolute powercorrupts absolutely என்பதற்கேற்ப சங்கராச்சாரியாரின் பயணம் இருந்திருக்கிறது. இந்திய அரசின் தலைமை நிர்வாகிகள் வரை காலில்விழும் அதிகாரம் கொண்டவராக சங்கராச்சாரி வளர்ந்திருந்தார். ஜன கல்யான் போன்ற அமைப்புகளை உருவாக்கி இந்துக்களை இந்துஎன்ற அடிப்படையில் அமைப்பாக்கினார். அயோத்தி பிரச்சனையில் இந்துக்களின் சார்பாக என்று சொல்லிக்கொண்டு முஸ்லீம்களைஏமாற்றும் மாய்மாலத் திட்டத்தை முன்வைத்தார். இந்த அதிகாரப் பயணத்திற்காக மடம் நவீன காலத்திற்கு ஏற்ப வளர வேண்டியிருந்தது.இதன் பெரும்பங்கு சிறைக்குள் இருக்கும் சங்கராச்சாரியைச் சேரும். அவர் மேற்கொண்ட வளர்ச்சி நடவடிக்கைகள் நவீன சமுதாயத்தின்ஊழல் விதிகளை மடத்திற்குள் கொண்டுவந்துவிட்டது. இது தவிர்க்க முடியாதது. ஆன்மீகம் என்ற தனிமனித விவகாரம் சமூகமயமாக்கப்படும்போது, அரசியல் மயமாக்கப்படும்போது அச்சமூகத்தின் சீர்கேடுகளுக்குள் மத நிறுவனம் சிக்கிக்கொள்வது கட்டாயம்ஆகும்.

பணத்தைச் சேர்த்துக்கொள்ள மடம் எடுத்த முயற்சிகள், அதனைச் சுரண்ட மடத்தின் அதிகாரம் உள்ளவர்கள் எடுத்த முயற்சிகள், பாலியல்அத்துமீறல்கள், குற்றங்கள், குற்ற கும்பல்களுடன் உறவு போன்றவற்றை வெளிவரும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. என்னைப்போன்றவர்கள் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அரைகுறையாக தெரிந்த செய்திகள் இன்று சமூகம் அறியும் செய்திகள் ஆகிவிட்டன.அவ்வளவுதான்.

Jayalakshmiஎன்னைப் போன்றவர்கள் அதிர்ச்சியடைந்தது, அதிகாரத்தில் உள்ளவர்கள் சங்கராச்சாரியைக் கைது செய்ய முடிவெடுத்தனர்என்பதால்தான். ஜெவுக்கும் சங்கராச்சாரிக்கும் உள்ள உறவு உலகம் அறிந்தது. இவ்வாறு ஜெ முடிவெடுத்தற்கு பல காரணங்களைச்சொல்கிறார்கள். ஏதோ ஒரு கோவில் காரியத்திற்கு நேரம் குறித்துக் கொடுத்தது போன்ற, ஜெ போன்றவர்களுக்கு மட்டுமே புரிகின்ற,அபத்தமான விவகாரங்களும் அதில் அடங்கும். மற்றொரு விவகாரம், இந்த இரண்டு பேர்களுக்கும் இடையிலான தொழில் விவகாரங்கள்.திமுக தலைவர் கருணாநிதி கிளப்பும் சந்தேகங்கள் இதனைப் பற்றியதே.

சங்கர மடத்தின் குற்ற விவகாரங்கள் ஏதோ புதிதான செய்திகள் அல்ல. முன்னாள் ஜனாதிபதியாக இன்றுள்ள ஒருவரும், சங்கரமடமும்சேர்ந்து உருவாக்கின கல்வி நிறுவனம் ஒன்று செய்த புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை எதிர்த்த விவசாயிகளை ரவுடிகளை வைத்துத்தாக்கியது நான் அறிந்த முதல் செய்தி. இது நடந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பு. நிலக்குவிப்பிலும் பணக்குவிப்பிலும் ஈடுபடுபவர்கள் தவிக்கமுடியாமல் குற்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டாக வேண்டும். இந்தக் கொள்ளையில் ஏற்பட்ட மோதலும், ஜெவுக்கு உள்ள அரசியல்தேவைகளும் இணைந்துகொள்ள இந்த கைது அரங்கேறியிருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்து மத அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகளும், இந்து கட்சியான பாரதீய ஜனதாவும் விடுத்த பந்த் அறிவிப்பு பெரியபாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது நல்ல செய்தி. மதத்தின் பெயரால் நடைபெறும் சமூக விரோத செயல்களின் பங்காளிகள் இந்தஅமைப்புகளும், கட்சிகளும் என்பது அவர்களின் அராஜக நடவடிக்கைகள் மற்றும் பந்த் அறைகூவலால் வெளிப்பட்டிருப்பது மற்றொருநல்ல செய்தி.

ஆனபோதும், ஜெ சொல்வது போல குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் அனைவர் மீதும், எப்போதும் சட்டம் பாயுமா? எப்போதும்சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படுமா? இல்லை என்பதை ஜெவின் அறிவிப்பே காட்டுகிறது. பழைய தாக்குதல் சம்பவங்கள்இப்போதுதான் தோண்டப்படுகின்றன. இது சங்கராச்சாரியாரின் செல்வாக்கை மேலும் சரியவைக்கும் முயற்சிதான்.

சில கேள்விகளை நம்மால் எழுப்பாமல் இருக்க முடியவில்லை. சங்கராச்சாரியாரின் கைதில் எந்த அத்துமீறலும் இல்லை என்பதற்காகவீடியோ ஆதாரத்தை அளித்த ஜெ அரசு வீரப்பன் கொலை பற்றி ஏன் அப்படியொரு ஆதாரத்தை அளிக்கவில்லை? அளிக்க வேண்டும்என்று ஏன் கருணாநிதி கோரவில்லை?. வீரப்பனைச் சுட்டுக்கொல்ல வேண்டிய அவசியம் என்ன? வீரப்பன் கொலை பற்றி மனித உரிமைஅமைப்புகள் எழுப்பிய அடிப்படையான கேள்விகளுக்கு ஏன் அரசு முறையான பதிலளிக்கவில்ல? அவ்வாறு அளிக்க வேண்டும் என்றுஅரசியல் கட்சிகள் ஏன் கோரவில்லை?

Veerappanஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட மந்திரிகள் ஏன் தார்மீகப் பொறுப்பேற்று கூட பதவி விலகவில்லை? அவரின் குற்றச்சாட்டுகளில்உண்மையில்ல என்றால் ஏன் அவர் மீது அவதூறு வழக்குத் தொடுக்கவில்லை? ஜெயலட்சுமி விவகாரத்தை சிபிஐ கையில் எடுக்கக் கூடாதுஎன்று ஜெ அரசு மெனக்கெட்டு அனைத்து கோர்ட்டுகளுக்கும் அலைய வேண்டிய கட்டாயம் என்ன? போலீஸ் துறை பாலியல் சுரண்டல்துறை என்பது பெருமளவு அம்பலமானபின்பும், அதனைக் கண்காணிக்க என்ன நடவடிக்கையை அரசு எடுத்தது? தமிழகத்தில் இருக்கும்மகளிர் ஆணையம் இவ்விஷயத்தில் என்ன செய்தது?

இந்தக் கேள்விகள் எல்லாம் காட்டுவது ஒரு திசையைத்தான். வீரப்பனுக்குப் பின்னுள்ளவர்கள், ஜெயலட்சுமி விவகாரத்தில் சம்பந்தப்பட்டகுற்றவாளிகள், இன்னும் அதுபோன்ற சிக்கிக்கொள்ளாத குற்றவாளிகள், சங்கரமடம் போன்ற மத அதிகார அமைப்புகளின் குற்றங்கள்மற்றும் ஊழல்கள் போன்றவற்றைக் காப்பாற்ற அரசு துணை போகிறது என்பதுதான் அந்த திசை.

இதில் சட்டத்தின் ஆட்சி என்ன வாழ்கிறது? சட்டத்தின் ஆட்சி என்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுவது,அரசியல் லாபங்களுக்காக எதனையும் செய்வது என்று பொருள் சொல்வீர்கள் என்றால், அந்த சட்டத்தின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சிஎன்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இடையே பிரச்சனை வரும்போது சட்டம் வேலை செய்யும், அதுவும் கூடுதல் அதிகாரம் உள்ளவர்களுக்குஆதரவாக என்பதையும், மற்றபடிக்கு குற்றங்கள் மறைத்து மூடப்பட சட்டம் துணை போகும் என்பதையே ஜெயலட்சுமி துவங்கிசங்கராச்சாரி வரையிலான நடவடிக்கைகள் காட்டுகின்றன.

- இ.மதிவாணன்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. குமரி மாவட்டத்தில் அரிய வகை மணல் கொள்ளை
2. பாதரச விஷத்தின் பிடியில் கொடைக்கானல்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X