• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சங்கராச்சாரி பற்றி பாரதி!

By Staff
|

திருக்குறள் ஆராய்ச்சியில் நாட்டமுடைய தமிழறிஞர் ஒருவருக்கு, சைவ மடம் ஒன்றில் முப்பாலுக்குமான உரை ஒன்று ஓலைச்சுவடிகளில் இருப்பது தெரியவந்தது.அதனை ஆராய்ச்சியின் பொருட்டும், அச்சில் நூலாகக் கொண்டு வரும் நோக்கத்தோடும், அந்த ஓலைச் சுவடிகளைத் தந்து உதவுமாறு மடத்தின் தலைவருக்குக்கடிதம் எழுதினார்.

" மடத்தில் பொருளும் காமமும் இருக்கின்றன. அறம் இல்லை. அறம் காணாமல் போய் வெகு நாள்களாகிவிட்டன. தேடிக் கொண்டிருக்கிறோம்.அகப்பட்டால் அனுப்பி வைக்கிறோம்" என்று மடத்தின் தலைவரிடமிருந்து பதில் வந்தது.

Bharathi"மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் இந்த நகைச்சுவைத் துணுக்கை மேடைகளில் சொல்வது வழக்கம். தமிழகத்தில் நடக்கும் செய்திகளைப்பார்த்தால் இன்று இதில் நகைக்கு இடமில்லை. வருந்த, கோபம் கொள்ளக் காரணங்கள் உண்டு" என்று இந்த நகைச்சுவைத் துணுக்கை எடுத்துக்காட்டி,இன்றைய (2004 இறுதி) தமிழக நிலைமைக்கு வருந்துகிறார் திசைகள் மின்னிதழின் ஆசிரியர் திரு.மாலன்."பொட்டிருந்தாலும் அவன் பகுத்தறிவாளனே! பொட்டில்லாவிட்டாலும் அவன் பக்திமானே!" என்ற பாரதியைப் பற்றிய கந்தர்வனின்கவிதை அர்த்தமுள்ளது. பாரதி ஒன்றும் நாத்திகனல்லன். ஆனால், சாமியின் பெயரால் நடக்கும் கோமாளிக் கூத்துகளை எதிர்ப்பதில்,பகுத்தறிவுவாதிகளுக்குக் கொஞ்சமும் அவன் குறைந்தவனல்லன் என்பதை அவனது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் காணமுடிகிறது.

இன்றைய தமிழகத்தில் சங்கராச்சாரி எனும் ஒரு மடத்தலைவர் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, வழக்குமன்றங்களின்வாடிக்கையாளராகியிருப்பது கண்டு, பக்தகோடிகள் சிலர் பதைக்கிறார்கள். சாதீய அரசியல் நடத்த நினைக்கும் சிலர் எதேதோகதைக்கிறார்கள் மதத்தில் அரசியல் நுழைந்துவிட்டதென்று! இவர்கள்தாம் இந்தப் புண்ணியவான்களுக்கு ஆதிமூலமான கண்ணியவான்கள்என்பது தெரியாததுபோல!

சரி, வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள் திறமையாக வாதாடி உண்மைகளை வெளிக்கொண்டு வரட்டும். இந்த வழக்குப் பற்றி எல்லாரும்பெரிய மனிதர்கள் எல்லாரிடமும் கருத்துக் கேட்கிறார்கள். நாமும் நமது மகாகவி பாரதியிடம் கேட்டுப் பார்த்தோம்.

இதோ அவனது கருத்துக்கள் :

கேள்வி: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரை "மற்ற சாதாரணக் கைதிகளைப் போல நடத்தக் கூடாது, உரிய மரியாதைதரப்படவேண்டும்" என்று சிலர் கேட்பது பற்றி...?

பாரதியின் பதில்: "சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரம் சொல்லிடு மாயின் அது

சாத்திரமன்று! சதியென்று கண்டோம்"

கேள்வி: ஜாமீன் வழங்குவது பற்றிய தமது தீர்ப்பை அடுத்த நாள் காலை தருவதாகச் சொன்ன நீதிபதியிடம், சங்கராச்சாரி, "நாளை காலைராகுகாலம் கழித்துத் தீர்ப்பை வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது பற்றி...

பாரதியின் பதில்: "இந்த மூட பக்தியிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள், நட்சத்திரம், லக்னம்முதலியன பார்த்தல். சவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்கும் கூட நம்மவர் மாஸப்பொருத்தம், பட்சப்பொருத்தம், திதிப்பொருத்தம், நாள்பொருத்தம், நட்சத்திரப்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டி யிருக்கிறது....மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில்நம்மவர் செலவிடும் பொருள்விரயத்துக்கும் கால விரயத்துக்கும் வரம்பே கிடையாது!

கேள்வி: வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்" என்று சொன்ன சங்கராச்சாரி, பக்தி வேலை காரணமாகவும், பத்திரிகைவேலை காரணமாகவும் தம்மிடம் வந்த பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக எழுத்திருக்கும் குற்றச்சாட்டு பற்றி...?

பாரதியின் பதில்: "அட பரம மூடர்களா! ஆண்பிள்ளைகள் தவறினால், ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்கமுடியும்?... ஸ்திரீகள்புருஷரிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், புருஷர்கள் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்தவேண்டும். நம்மைப் போன்றதொருஆத்மா நமக்கு அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன், அரசனாயினும், குருவாயினும், புருஷனாயினும், மூடனைத்தவிர வேறில்லை"

Jayendrar"கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"

ஆண்களெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,

அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?"

கேள்வி : சங்கராச்சாரி விதவைப்பெண்களை வீண் தரிசுநிலம் என்கிறாரே...?

பாரதியின் பதில்: இஷ்டமில்லாத புருஷனை ஸ்த்ரீகளுக்கு விவாகம் செய்துவைக்கக் கூடாது. விவாகம் செய்து கொடுத்தபின் கருத்துவேறுபட்டால், புருஷனைவிட்டு நீங்கவும் இடம்கொடுக்க வேண்டும். புருஷன் இறந்தபின் ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்துகொள்வதைத்தடுக்கக் கூடாது.

கேள்வி: முன்னாள் அமைச்சரும் பொதுவாழ்வில் தூய்மை காத்தவருமான கக்கன் அவர்களின் ஊரில், தாழ்த்தப்பட்டவர்களின்கோவிலுக்குப்போன சங்கராச்சாரி, அவர்கள் காலில் விழுந்து கூடத் தொட்டுவிடாமல் தனது ஆடையை இழுத்துக் கால்மேல் போட்டுக்கொண்டது பற்றி...?

பாரதியின் பதில்: தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமைச்

சூதுசெய்யும் நீசரைப் பணிந்திடுவார்"

"வந்தே மாதரம் என்று வணங்கியபின்

மாயத்தை வணங்கு வாரோ?"

இந்தியாவில் விசேஷக் கஷ்டங்கள் இரண்டு. பணமில்லாதது ஒன்று, ஜாதிக்குழப்பம் இரண்டாவது. இங்ஙனம் ஜாதிக் கொள்கை வேரூன்றிக்கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்துவம், ஸஹோதரத்வம் என்னும் கொள்கைகளை நிலை நிறுத்துவதென்றால் அது ஸாதாரணவேலையா?

"ஜாதி மதங்களைப் பாரோம் உயர்

ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின்

வேதியராயினும் ஒன்றே அன்றி

வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே!"

கேள்வி: பொதுவாழ்வில் பீடாரோகணப் பொன்விழா கண்ட சங்கராச்சாரி, அதற்காக வந்த தங்க நாணயங்களை மறைத்தது உட்படப்பல்லாண்டுகளாகப் பற்பல குற்றச்சாட்டுகளை சுமத்திய கோவில் அலுவலர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டுவிட்டாரே...?

பாரதியின் பதில்: "தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய

ஆவி பெரிதென் றெண்ணிக் கிளியே அஞ்சிக் கிடந்தா ரடீ!"...

"சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ என்பதுபோல்

வந்தே மாதர மென்பார்! கிளியே!

மனத்தி லதனைக் கொள்ளார்"

"கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லதென்று பூசாரி யோசனை பண்ணுகிறான்.பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. அப்படியிருக்கப் பல பூசாரிகள், தம்மிடம் தெய்வாம்சம்இருப்பதுபோல நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம்பிடுங்குகிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் எத்தனைகாலம் ஒருமோசக்கார மனிதனை மூடிவைத்து அவனிடம் தெய்வம் காட்ட முடியும்? ஆகையால் இந்தப் பூசாரிகளுடைய சாயம் வெளுத்துப்போகிறது!"

(இந்தக்கருத்துக்கள், கட்டுரை/கவிதைகளில் பாரதியேகூறியது! உண்மைவெறும் புகழ்ச்சியில்லை! கேள்விகள் மட்டுமே நம்முடையது!ஆதாரம் கவிதைகள், பாரதிதமிழ் வசனத் திரட்டு-NBT 1978)

- நா.முத்து நிலவன்(muthunilavan@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

1. நன்றி, சங்கரா! நன்றி!!

2. கிராமத்து ஞானபீடம்

3. பேடிக்கல்வி

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X