For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாதுகாப்பு உடன்பாடு - இந்தியா மறுப்புஇந்தியத் தூதுவர் - கலைஞர்களைக் கொலை செய்ய முயற்சிசந்திரிகாவின் தூண்டுதலே காரணம்

By Staff
Google Oneindia Tamil News

Nedumaranஇலங்கைத் தலைநகரமான கொழும்பில் திசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டு, 19 பேர்கள் படுகாயமடைந்தனர். இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரியின் மனைவியும் காயமடைந்தவர்களில் ஒருவராவார்.

இந்தித் திரைப்பட நட்சத்திரமான சாருக்கான் தலைமையில் நடிகர்கள் செயிப் அலிகான், ஜாவீர்கான், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, செலினா ஜெய்ட்லி உட்பட பலர் கலந்துகொண்டு நடத்திய கலைவிழாவிலேயே குண்டு வெடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் உட்பட பல முக்கிய இந்திய அதிகாரிகளும், இந்தியத் தொழிலதிபர்களும் வீற்றிருந்த முன்வரிசை நோக்கியே குண்டு வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நிருபமா ராவ் காயமில்லாமல் தப்பிவிட்டார்.

முன்னதாக இந்தக் கலைநிகழ்ச்சியை நடத்தக்கூடாது எனப் புத்த பிட்சுகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். புத்த பிட்சுக்களின் கட்சியான ஜாதிக ஹெலா உருமயா இப்போராட்டத்தை ஆதரித்தது.

கலைநிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்திற்கு முன்பாகச் சிங்கள வெறியர்களும் புத்த பிட்சுகளும் கூடிப் பெருங்கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது நள்ளிரவில் மேடையை நோக்கியும் முதல் வரிசையில் அமர்ந்திருந்த இந்தியப் பிரமுகர்கள் நோக்கியும் குண்டுகள் வீசப்பட்டன. நல்ல வேளையாக இந்தியக் கலைஞர்களுக்கோ அல்லது பிரமுகர்களுக்கோ எதுவும் நேராது உயிர் தப்பினார்கள்.

இந்திய நடிகர்களும், இந்தியத் தூதுவர் போன்றவர்களும் கலந்து கொள்ளும் இந்த முக்கிய நிகழ்ச்சிக்குப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை எனச் சிங்கள எதிர்க்கட்சிகள் சந்திரிகா அரசு மீது குற்றம் சாற்றியுள்ளன.

""இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே உள்ள நல்லுறவைச் சீர்கேடடையச் செய்யவே சில தீயசக்திகள் இவ்வாறு செய்துள்ளன. இந்தியத் தூதுவருக்கோ அல்லது கலைஞர்களுக்கோ ஏதாவது நடந்திருப்பின் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும். இருநாடுகளுக்குமிடையே உள்ள உறவு முறிந்திருக்கும், என எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிங்களரின் இந்திய எதிர்ப்பு என்பது நீண்டகாலமாகவே நீடித்து வருவதாகும். நூற்றாண்டுகளுக்கு முன்னால் விவேகாநந்தர் தனது புகழ்பெற்ற அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா வரும் வழியில் கொழும்பில் வந்திறங்கி அங்கிருந்து யாழ்ப்பாணம் வழியாக இராமேசுவரம் திரும்ப இருந்தார். அவர் செல்லும் வழியில் அனுராதபுரத்தில் கூடிய சிங்களர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கல்லெறிந்து கலவரம் செய்தனர்.

1949ஆம் ஆண்டு இலங்கையில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தைச் சிங்கள அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

1962ஆம் ஆண்டில் இந்திய எல்லையில் சீனா ஆக்ரமிப்பு செய்த போது இலங்கை பிரதமர் சிறிமாவோ இந்தியாவை ஆதரிக்க மறுத்தார். நடுநிலை என்ற பெயரால் சீனரின் ஆக்ரமிப்பிற்குத் துணை போனார்.

1971ஆம் ஆண்டில் வங்காளத் தேசப்போர் மூண்டபோது பாகிஸ்தான் இராணுவ விமானங்களும், போர்க்கப்பல்களும் மேற்குப் பாகிஸ்தானில் இருந்து கிழக்கு வங்காளம் செல்லும் வழியில் கொழும்பு வந்து எரிபொருள் நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டன. இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை மீண்டும் இலங்கை மேற்கொண்டது.

1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்பாட்டில் கையெழுத்திட பிரதமர் இராஜீவ் கொழும்பு சென்றபோது அந்நாட்டின் பிரதமர் என்ற முறையில் பிரேமதாசா அவரை வரவேற்க வேண்டும். ஆனால் அவரும் மற்றும் 11 அமைச்சர்களும் இராஜீவிற்கு எதிராகக் கண்டன அறிக்கை வெளியிட்டு வரவேற்பைப் புறக்கணித்ததோடு கொழும்பில் இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தூண்டிவிட்டனர்.

விமான நிலையத்தில் இந்தியப் பிரதமரை வழியனுப்பும் நிகழ்ச்சியின்போது சிங்கள சிப்பாயான விஜயனி விஜித் ரோகண டி சில்வா என்பவரின் இராஜீவ் காந்தியைத் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். இராஜீவின் தலையைப் பிளந்திருக்க வேண்டிய அந்த அடி சற்றுக் குறிதவறித் தோள்பாட்டையில் விழுந்ததால் அவர் உயிர் தப்பினார்.

ஆனால் அந்தச் சிங்கள சிப்பாய் மனநலமில்லாதவன் எனக்கூறி இலங்கை அரசு பூசி மெழுகியது. பெயரளவிற்கு அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. பிரேமதாசா அந்நாட்டின் குடியரசு தலைவராகப் பதவியேற்ற பிறகு சிறையிலிருந்த விஜயனியை விடுதலை செய்தார் என்பது மட்டுமன்று தென்மாகாணச் சட்டமன்ற உறுப்பினராகவும் அவன் தேர்ந்தெடுக்கப்பட உதவினார்.

இப்போது இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்ளத் துடித்த சந்திரிகா அம்முயற்சிக்கு இந்தியா ஆதரவு தரவில்லை என்பதால் இந்திய எதிர்ப்பைத் தூண்டிவிடுகிறார். அதன் விளைவே கொழும்பில் நடைபெற் ற இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் குண்டு வீச்சு நிகழ்ச்சியுமாகும்.

ஒரே கல்லில் இருமாங்காய் அடிக்கத் திட்டமிட்டுள்ளார் சந்திரிகா. இந்திய எதிர்ப்பை முடுக்கிவிடுவதன் மூலம் இந்திய அரசை மிரட்டுகிறார். மறுபுறம் இந்தியாவின் பகைநாடான பாகிஸ்தானுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்ள வழியும் வகுக்கிறார். காலங்காலமாகச் சிங்களர் இந்திய எதிர்ப்பாளர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால் நேருவின் காலத்தில் இருந்து இன்றுவரை சிங்களரைத் தாஜா செய்யும் கொள்கையையே இந்தியா கடைப்பிடித்து வருகிறது.

தமிழ்நாட்டின் நீண்டகாலக் கனவுத்திட்டமான சேதுக்கால்வாய்த் திட்டத்திற்குத் திட்டக்குழு, மத்திய அமைச்சரவை ஆகியவை ஒப்புதல் கொடுத்து அத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட இருந்த வேளையில் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவின் வேண்டுகோளுக்கு இணங்க அத்திட்டத்தை நேரு கைவிட்டார். ""சேதுக்கால்வாய்த் திட்டம் நிறைவேறுமானால் கொழும்புத்துறைமுகத்தின் முக்கியத்துவம் போய்விடும் எனவே அதை நிறுத்துங்கள் என இலங்கை கூறியதை நேரு ஏற்றுத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தார்.

1964ஆம் ஆண்டில் சாஸ்திரி - சிறிமாவோ உடன்பாட்டின் கீழ் 5 இலட்சத்திற்கு மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்குத் திரும்ப அனுப்பப்பட்டனர். 5 தலைமுறைகளுக்கு மேலாக இலங்கையில் வாழ்ந்து ரப்பர் - தேயிலைத் தோட்டங்களைத் தமது கடும் உழைப்பினால் உருவாக்கிய தமிழர்களைச் சாறுபிழியப்பட்ட சக்கைகளாகச் சிங்கள அரசு தூக்கி எறிந்த போது அதை ஏற்றுக்கொண்டு பிரதமர் லால்பகதூர் தமிழர்களுக்குத் துரோகம் செய்தார்.

1974ஆம் ஆண்டு சூலை 8ஆம் தேதி பிரதமர் இந்திரா - சிறிமாவோ உடன்பாட்டிற்கு இணங்கத் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. இதன் விளைவாகத் தமிழக மீனவர்கள் இன்றுவரை பெரும்பாதிப்பிற்கு ஆளாகி வருகிறார்கள். கச்சத்தீவு அருகே வரை செல்லும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படைத்தாக்குதலுக்கு ஆளாகி 300 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். பல நூறு பேர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். பலநூறு கோடி ருபாய் பெறுமான படகுகள் வலைகள் சேதமடைந்துள்ளன. இந்தக் கொடுமை தொடர்கதையாக உள்ளது.

1987ஆம் ஆண்டு பிரதமர் இராஜீவ் - ஜெயவர்த்தனாவுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் விளைவாகச் சிங்களர் நலனைக்காக்கவும் ஈழத்தமிழர்களை வேட்டையாடவும் இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டது. நாளொன்றுக்கு 3 கோடி ரூபாய் செலவு செய்து 2 ஆண்டு காலம் இந்தியப்படை அங்கிருந்தது. 7,000க்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான தமிழர் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஆனாலும் அந்நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்ற பிரேமதாசா இந்தியப் படையை அவமானகரமான முறையில் வெளியேற்றினார். எந்தச் சிங்களரின் நலன்காக்க இந்தியப் படை சென்றதோ அந்தச் சிங்களரால் அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.

தென்னாசியாவில் உள்ள நாடுகளில் வாழும் பலவேறு தேசிய இனங்களில் இலங்கையில் வாழும் தமிழர்களே இந்தியாவை முழுமையாக நேசிப்பவர்கள். இந்தியாவில் உள்ள தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு பூண்டவர்கள் மொழி, கலை, பண்பாடு, வரலாறு போன்றவற்றால் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவர்கள்.

ஆனாலும் இந்திய அரசு தொடர்ந்து ஈழத்தமிழர்களை வெறுத்தொதுக்கி வருகிறது. இந்திய வெறுப்பாளர்களான சிங்களருடன் இணக்கமாகச் செல்ல முயன்று கொண்டே இருக்கிறது. இந்தியத் தூதுவரையும், இந்தியக் கலைஞர்களையும் கொலை செய்யச் சிங்கள வெறியர்கள் முயன்றதைக் கண்ட பிறகாவது தில்லியில் உள்ள தலை கனத்தவர்களுக்குத் தெளிவு பிறக்க வேண்டும்.

பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ளவிரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.

தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை - 600 004. தொலைபேசி : 91-44-2464-0575, தொலைநகலி : 91-44-2495-3916

- பழ. நெடுமாறன்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. சகுனிகள் வரிந்து கட்டுகிறார்கள்
2. சற்சூத்திரர்களான சைவ மடாதிபதிகள்
3. மக்களிடம் மன்னிப்புக் கேட்கட்டும்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X