• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சகுனிகள் வரிந்து கட்டுகிறார்கள்

By Staff
|

மகாபாரதத்தில் சகுனி சூதாட அழைத்துத் தருமனைத் தோற்கடித்துக் காட்டிற்கு விரட்டலாம் எனத் துரியோதனனுக்கு ஆலோசனைகூறினான். அந்த ஆலோசனை வேண்டாத விளைவுகளுக்கு வழி வகுத்தது. முடிவில் பாரதப் போர் மூண்டு துரியோதனனும் அவனைச்சேர்ந்தவர்களும் அழிந்தனர். யோசனை சொன்ன சகுனியும் மாண்டான். இது பழைய பாரதக் கதை.

Nedumaranஇலங்கை இனப் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு நார்வே நாடு நன்முயற்சி எடுத்து விடுதலைப்புலிகளையும் சிங்கள அரசையும் போர்நிறுத்தம் செய்ய வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வழி வகுத்தது. சில காரணங்களினால் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தையை மீண்டும்தொடங்கவேண்டும் என நார்வே மட்டுமன்று உலகநாடுகள் அனைத்துமே வற்புறுத்தி வருகின்றன. பிரதமர் மன்மோகன்சிங்தலைமையிலான இந்திய அரசும் அவ்வாறே வற்புறுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் எப்படியேனும் இதைக் கெடுக்க வேண்டும் என்றுதிட்டமிட்டுப் புதிய சகுனிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

கடந்த அக்டோபர் 30ஆம் நாளன்று தில்லியில் அரசியல் தரகரான சுப்பிரமணியசாமி ஒரு மாநாடு கூட்டியுள்ளார். இந்த மாநாட்டில்"இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என். இராம், சி.பி.ஐ.இன் முன்னாள் இயக்குநர் டி. ஆர். கார்த்திகேயன், சிங்களக் கைக்கூலியானடக்ளஸ் தேவானந்தா உட்படப் பலர் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். இலங்கையிலுள்ள தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஏற்றுக்கொண்டு அதனுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை இந்த மாநாடு ஏற்க மறுத்திருக்கிறது.""சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இலங்கையிலுள்ள சகல தரப்புப் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என இந்த மாநாடுஏற்க வலியுறுத்துகிறது என ஒரு தீர்மானத்தை இந்த மாநாடு நிறைவேற்றியுள்ளது.

முட்டாள்களின் சொர்க்கத்தில் இவர்கள் இருப்பதையே இந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்குள்நடைபெற்ற இரு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தில் "புலிகளே ஈழத்தமிழர்களின் உண்மையானபிரதிநிதிகள். அவர்களுடன் மட்டுமே சிங்கள அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்துப்போட்டியிட்ட தமிழ்த்தேசிய அணியைச் சேர்ந்தவர்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். இதன்மூலம் விடுதலைப் புலிகள்தான் தங்களுடைய உண்மையான பிரதிநிதிகள் என்பதை ஈழத்தமிழர்கள் உலகிற்குப் பகிரங்கமாகத் தெரிவித்து விட்டார்கள்.

ஆனால் சுப்பிரமணியசாமி, என். இராம் போன்ற தமிழ்ப் பகைவர்கள் மாநாடு கூட்டி ஈழத்தமிழர்களின் தீர்ப்புக்கு எதிராகத் தீர்மானம்நிறைவேற்றியது என்பது அடாத செயலாகும். அதிலும் அந்த மாநாட்டில் பேசிய என். இராம் இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமானபிரதிநிதி போலத் தன்னைக் கருதிக் கொண்டு ஆணவத்துடன் பின்வருமாறு பேசியிருக்கிறார்.

"" 1991 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கை என்பது தொடர்ச்சியாகவும் எத்தகைய மாறுபாடு இல்லாமலும்நின்று நிலைத்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா 6 பிரதமர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் இலங்கை பற்றிய கொள்கையில்எத்தகைய மாற்றமும் இல்லை என அறிவித்திருக்கிறார்.

உண்மையைத் திரித்துக் கூறுவதில் "" இந்து பத்திரிக்கை போலவே அதன் ஆசிரியர் இராமும் திகழ்கிறார்.இலங்கை இனப்பிரசினை என்பது 1980களில் தீவிரமடைந்தது. 1981-ல் யாழ் நூலகம் சிங்கள வெறியர்களால் எரிக்கப்பட்டது. 1983-இல்கொழும்பில் 3,000க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் விளைவாகத் தமிழ்நாடு கொந்தளித்தது.

எனவே, இந்திய அரசு இப்பிரச்னையில் தலையிட வேண்டிய இன்றியமையாமை உருவாயிற்று. 1980களில் என்ன நடந்தன என்பதை மூடிமறைத்து என். இராம் பேசியுள்ளார். பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறைஎன்பது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது. ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு எதிராக நடத்திய திட்டமிட்ட இனப் படுகொலையைஇந்திரா கடுமையாகக் கண்டித்தார். "அதைப் பார்த்துக்கொண்டு இந்தியா சும்மா இருக்க முடியாது என்ற எச்சரிக்கையும் செய்தார். "எந்தஅன்னிய நாடும் இலங்கையில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். ஈழத் தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைநடத்தும்படி சிங்கள அரசுக்கு ஆணையிட்டார். தன்னுடைய அரசியல் ஆலோசகரான ஜி. பார்த்தசாரதியை அதற்காக அனுப்பி வைத்தார்.

வேறு வழியில்லாமல் ஜெயவர்த்தனா அரசு ஈழத்தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா தயங்கியபோது ஈழத்தமிழ்ப் போராளிகளுக்கு இந்திய இராணுவத்தின்மூலம் போர்ப் பயிற்சி அளித்து ஆயுதம் கொடுக்கத் தவறவில்லை பிரதமர் இந்திரா. அவர் படுகொலை செய்யப்படாமல் போயிருந்தால்இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டும் பல நடவடிக்கைகளை அவர் எடுத்து இருப்பார் என்பதில் ஐயமில்லை.

இந்திராவின் மறைவினால் பிரதமர் பதவியேற்ற இராஜீவ்காந்திக்கு இலங்கை இனப்பிரச்சினையில் மட்டுமன்று மற்ற எந்தப்பிரச்சனையிலும் போதுமான அனுபவமில்லை என்பதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை ஜெயவர்த்தனா திட்டமிட்டு ஏமாற்றினார்.அவர் விரித்த வலையில் இராஜீவ் விழுந்தார். இதன் விளைவாக இந்திய - இலங்கை உடன்பாடு 1987ஆம் ஆண்டுகையெழுத்திடப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சனையில் அவர்களின் சம்மதம் இல்லாமலும் அவர்களின் பங்களிப்பு இல்லாமலும் இராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தனாவும் செய்து கொண்ட இந்த உடன்பாடு என்பது இந்தியாவிலுள்ள பல கட்சிகளாலும் மிகக் கடுமையானகண்டனத்திற்கு உள்ளாயிற்று.

ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை அமளிப்படையாக மாறி ஆயிரக்கணக்கானஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துத் தானும் பேரிழப்பிற்கு ஆளாயிற்று. ஜெயவர்த்தனாவுக்குப் பின்னால் அந்த நாட்டின் குடியரசுதலைவர் பொறுப்பை ஏற்ற பிரேமதாசா இந்திய அமைதிப்படை வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.ஈழத்தமிழர்களும் விரும்பாமல் சிங்களர்களும் வெறுத்து ஒதுக்கக்கூடிய அவமானகரமான சூழ்நிலை உருவாயிற்று.

இதற்கிடையில் பிரதமர் இராஜீவ் பதவி இழந்தார். புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற வி.பி. சிங் இந்திய அமைதிப்படையைத் திரும்பப்பெற்றார். இலங்கை இனப் பிரச்சனையில் அவர் நிலைப்பாடு மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறியது. அதற்குப் பின்னால்பதவியேற்ற பிரதமர்கள் பலரும் இந்தப் பிரச்சனையில் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். பிரதமர் இராஜீவ் செய்த தவற்றைச் செய்யஇவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தினார்களே தவிர சிங்களஅரசுக்கு ஆதரவான நிலையை எடுக்கவில்லை.

மேற்கண்ட உண்மைகளை அடியோடு திரித்தும் மறைத்தும் என். இராம் பேசியிருப்பது என்பது அவருடைய தமிழர் விரோதப்போக்கையே காட்டுகிறது. இங்கு பேசுவதோடு மட்டும் இவர் நிற்கவில்லை. அக்டோபர் 25ஆம் நாளன்று கொழும்புக்குச் சென்று என்.இராம் அங்குக் காமினி திசநாயகாவின் நினைவுநாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

யார் இந்தக் காமினி திசநாயகா? ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையில் அமைச்சராக இவர் இருந்தபோது யாழ்ப்பாணத்திற்குச் சென்றுஅங்கிருந்த மிகப்பெரிய நூலகத்தை எரிக்குமாறு இலங்கை இராணுவத்தை ஏவியவர் காமினி திசநாயகா ஆவார். தென் ஆசியாவிலேயேமிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த யாழ் நூலகத்தை அடியோடு எரித்துச் சாம்பல் ஆக்குவதற்குப் பொறுப்பாளர் காமினிதிசநாயகா ஆவார். தமிழ்ப் பகைவரான காமினி திசநாயகா நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற என். இராம் தானும் ஒருதமிழ்ப் பகைவன் என்பதை நிலைநறுத்திக் கொண்டிருக்கிறார்.

அங்குப் போய் இவர் பேசிய பேச்சு என்பது தமிழர்களுக்கு எதிராகச் சிங்களர் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதேயாகும்."இலங்கையின் ஆளும் கட்சியான இலங்கைக் சுதந்திரக் கட்சியும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றுபட்டு நின்று இலங்கைஇனப் பிரச்சினைக்குப் பொதுக் குறைந்தபட்சத் திட்டம் ஒன்றை அளிக்க வேண்டும். அப்போதுதான் புலிகளை முறியடிக்க முடியும்.1980களில் இந்தியா கையாண்ட கொள்கை தவறானது. வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தியது என்று கூறியிருக்கிறார்.

அதாவது பிரதமர் இந்திராகாந்தி கையாண்ட கொள்கை தவறானது என்று இராம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.இந்திராகாந்தியின் கொள்கை தவறானது என்று குற்றம் சாட்டிய இவரைத் தற்போதைய காங்கிரஸ் அரசு எந்த அளவுக்கு நம்பும் என்பதுகேள்விக்குரியதே.

மேலும் ஒரு படி மேலே சென்று இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதியாகக் தன்னைக் கருதிக் கொண்டு பின்வருமாறுகூறியிருக்கிறார்.

"இந்தக் காலகட்டத்தில் இலங்கை அமைதி முயற்சியில் நேரடியாக இந்தியா பங்கேற்க முடியாது என்றும் இந்தியச் சட்டப்படி பயங்கரவாதஇயக்கம் என அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுடன் சமமாக உட்கார்ந்து இந்தியா பேசமுடியாது என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் இப்பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியா அக்கறைகொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் இராம் அவர்களோ அதற்கு நேர் எதிர்மாறாக ஒரு கருத்தைக் சொல்லியிருக்கிறார்.

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசு பேச முடியாது என்று சொல்லும் இவர், அதே இந்திய அரசு தடை செய்யப்பட்டநாகாலாந்து, மணிப்பூர் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை மறைத்துப் பேசியிருக்கிறார்.மேலும், இந்திய அரசின் சார்பில் இன்னொரு அறிவிப்பையும் என்,இராம் செய்திருக்கிறார். "இந்தியாவிலிருந்து இலங்கையைப் பிரிக்கும்பாக் நீரிணையை அண்டிய பகுதியில் மூன்றாவது கடற்படை உருவாவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது - தனித் தமிழ் ஈழம்உருவாவது, இடைக்கால நிர்வாக சபை யோசனைகள் போன்றவற்றையும் இந்தியா ஏற்காது என்ற அறிவித்திருக்கிறார். இவ்வாறுஅறிவிக்கும் அதிகாரத்தை யார் இவருக்குக் கொடுத்தது?

அது மட்டுமன்று, ஜப்பான் உட்பட இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள பல நாடுகள் கடற்புலிகள் அமைப்பை அங்கீகரித்து அதனுடன் போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ள வேண்டுமென்று சிங்கள அரசை வற்புறுத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் எந்த அதிகாரத்தில் இவர்இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று நாம் ஆராய்வோமானால் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். தமிழுக்கும் தமிழருக்கும் இவர்பிறவிப் பகைவர். மேலும் உயர்சாதித் திமிர் இவரை இப்படிப் பேசவைக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த காரணத்தைச் சொல்ல முடியும்?

தமிழ்ப்பகைவர்களான இந்தச் சகுனிகளைத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால்தான்இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். இந்தியாவிலேயோ, இலங்கையிலேயோ மக்களிடம் அறவே செல்வாக்கு இல்லாத இந்தச் சகுனிகளின்தீய யோசனைகளுக்குச் செவிசாய்க்கும் அரசுகள் துரியோதனன் கும்பலுக்கு ஏற்பட்ட கதியை நினைத்துப் பார்க்க வேண்டும்.

(தென்செய்தி நவம்பர் 15-30 இதழில் வெளியான கட்டுரை)

பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ளவிரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.

தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை - 600 004. தொலைபேசி : 91-44-2464-0575, தொலைநகலி : 91-44-2495-3916

- பழ. நெடுமாறன்(seide@md2.vsnl.net.in)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X