• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களிடம் மன்னிப்புக் கேட்கட்டும்

By Staff
|

Jeyandrar and Jayalalithaஆட்சியில் உயர் பதவி வகிக்கும் அரசியல் தலைவர்கள் மத உணர்வுகளைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். தாம் வகிக்கும் பதவிப்பொறுப்புகளுக்குரிய மதிப்பு, பெருமை ஆகியனவற்றுக்கு இழுக்குத் தேடித் தராமல் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இராசகுருக்களின் தாள் பணிந்து கிடப்பதையே பெறற்கரிய பேறாக மன்னர்கள் கருதினார்கள். அந்தப்பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

பிரதமராக இந்திராகாந்தி இருந்த போது அவருக்கு இராசகுருவாகவும் ஆலோசகராகவும் திரேந்திர பிரம்மச்சாரி விளங்கினார். ஜெயப்பிரகாஷ்நாராயண், ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் அவருடைய சீடர்கள். இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் அளவுக்கு அவர் வளர்ந்தார்.ஜனதாக்கட்சி ஆட்சியில் பல குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்

பிரதமராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது சந்திராசாமி இராசகுருவாக விளங்கினார். பிரதமர் சந்திரசேகருக்கும் அவரே இராசகுரு. இந்தநெருக்கத்தைப் பயன்படுத்திப் பல மோசடிகளைச் செய்ததாக அவர் மீது பிற்காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

குடியரசுத்தலைவராக ஆர். வெங்கட்ராமன், தலைமைத் தேர்தல் ஆணையாளராக டி.என். சேஷன் ஆகியோர் இருந்த போது காஞ்சி சங்கராச்சாரிக்கு இராசகுருஅந்தஸ்தை அளித்தனர். இதன் விளைவாக பிரதமர் முதல் மாநில முதல்வர்கள் வரை அனைவரும் காஞ்சி நோக்கிப் பயணமாகி இராசகுருவின் தாள்பணிந்தனர்.

காஞ்சி சங்கராச்சாரி கைதாவதற்குச் சில நாட்களுக்கு முன்பு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சங்கர மடம் சென்று நின்று பணியும் காட்சி பத்திரிகைகளில்வெளிவந்தது.ஜெயேந்திரர் அமர்ந்திருக்க நாட்டின் குடியரசுத்தலைவர் நிற்கும் காட்சி அனைவரையும் வேதனைப்படுத்தியது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சரியாசனம் வழங்கி அமரவைத்த ஜெயேந்திரர் மராட்டிய முதல்வராகயிருந்த ஷிண்டேயை தரையில் உட்காரவைத்தார்.காரணம் முன்னவர் தன் சாதி. பின்னவர் தாழ்த்தப்பட்ட சாதி.

குடியரசுத்தலைவரிலிருந்து மாநில முதல்வர்கள் வரை பெரும் பதவிகளில் இருப்போர் தமது பொறுப்பிற்குரிய பெருமையைக் காற்றில் பறக்கவிட்டதேன்?இவர்கள் தனிநபர்களாக இருந்து யார் காலில் வேண்டுமானாலும் விழுந்து தொலைக்கட்டும், தன்மானமற்றவர்கள் என்பதை நிலைநாட்டிக்கொள்ளட்டும்.

ஆனால் பெரும்பதவி வகித்துக்கொண்டு அப்பதவிகளுக்குரிய மரியாதையைச் சீரழிக்கிறார்களே என்பதுதான் நமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.பிறநாடுகளின் தலைவர்கள் இப்படியா நடந்துகொள்கிறார்கள்?

Nedumaranஅமெரிக்காவின் குடியரசுத்தலைவராக கென்னடி பதவிவகித்த போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இத்தாலிக்கும்,வாட்டிகனுக்கும் சென்று போப்பாண்டவரைச் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டது. இதில் ஒரு சிக்கலை அதிகாரிகள் கென்னடியிடம் சுட்டிக் காட்டினார்கள்.

கென்னடி உலக வல்லரசான அமெரிக்காவின் அரசுத்தலைவர். ஆனால் அவர் கத்தோலிக்கக் கிறிஸ்துவர். எனவே போப்பாண்டவரைச் சந்திக்கும் போதுஅவர் முன் மண்டியிட்டு வணங்க வேண்டும். ஏனெனில் கத்தோலிக்க மதத்தவரின் மிகப்பெரிய குரு அவர்.அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பதவியின் பெருமையைக் காப்பதா? அல்லது தனது மத மரபினைக் காப்பதா? என்ற கேள்வி எழுந்த போது இத்தாலியப்பயணத்தையே ரத்து செய்தார் கென்னடி.

திரேந்திர பிரம்மச்சாரி முதல் ஜெயேந்திரர் வரை இராசகுருக்களாக விளங்கியவர்கள் குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தப்பட்ட போது தேசம்

அவமானப்பட்டிருக்கிறது.கொலை, களவு, சூது போன்ற கொடிய குற்றங்களைத் தயங்காமல் செய்யும் கபட வேடதாரிகளாகத்தான் இராசகுருக்கள் விளங்கி வந்திருக்கிறார்கள்.இவர்களைத் தாங்களும் வணங்கி மற்றவர்களையும் வணங்கவைத்த அரசியல் தலைவர்கள்தான் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்களாவார்கள்.

பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ளவிரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.

தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை - 600 004. தொலைபேசி : 91-44-2464-0575, தொலைநகலி : 91-44-2495-3916

- பழ. நெடுமாறன்(seide@md2.vsnl.net.in)

இவரது முந்தைய படைப்பு:

1. சகுனிகள் வரிந்து கட்டுகிறார்கள்

2. சற்சூத்திரர்களான சைவ மடாதிபதிகள்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X