• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராசீவ் கொலை வழக்கு: இன்னும் முடியவில்லை?

By Staff
|

Subaveeஇராசீவ் காந்தி கொலைவழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடு செல்லவிருந்த சந்திராசாமியைத் தடுத்து நிறுத்த வேண்டும்என்று நீதிமன்றத்தில் மனுச் செய்த மத்திய குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) அவருக்கு இராசீவ் கொலையில் தொடர்பு உள்ளமைக்கானசான்றுகள் இருப்பதாகத் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஆக, இராசீவ் கொலை வழக்கு விசாரணை இன்னமும் முற்றாக முடியவில்லை என்பதையும், அதில் தொடர்புள்ளவர்கள் பலர் வெளியில்சுதந்திரமாக உலவிக் கொண்டுள்ளனர் என்பதையும்தாம் புலனாய்வுத் துறையின் மனு வெளிப்படுத்துகின்றது.இந்த உண்மையை ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நாம் வெளிப்படுத்தினோம். "26 தமிழர் உயிர்க்காப்பு வழக்கு நிதிக்குழு வின் சார்பில் மே1998 இல், தோழர் விடுதலை இராசேந்திரன் எழுதிய "இராசீவ் படுகொலை - மறைக்கப்பட்ட உண்மைகள் என்னும் நூல்வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள பழ. நெடுமாறன், ""உண்மைக் குற்றவாளிகளை மறைக்கும் நோக்கத்தில்தான்,தொடக்கத்திலிருந்து எல்லாமே நடத்தப்பட்டன. தமிழீழத்தில் நடைபெற்றுவரும் விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தில் பரவவிடாமல் தடுக்கக் கூடிய கருவியாக இராசீவ் கொலை வழக்கைத் தில்லி பயன்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூற்றுஎவ்வளவு உண்மையானது என்பதையே இன்றைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. சந்திராசாமியைப் பற்றிய பல செய்திகள் அந்நூலில்உள்ளன.

யார் அந்தச் சந்திராசாமி?

- நரசிம்மராவ் ஆட்சியில் கொடிகட்டிப் பறந்தவர்.

- அன்றைய தலைமை அமைச்சர் சந்திரசேகருக்கு வழிகாட்டி

- அனைத்து நாடுகளின் ஆயுத வணிகரான ஆண்டன் கசோகியின் நெருங்கிய நண்பர்

- வி.பி. சிங் மகனுக்கு, செயின் கிட்ஸ் தீவில் உள்ள வங்கியில் இரகசியக் கணக்கு இருப்பதாகப் போலி ஆவணங்களை உருவாக்கியவர்.

- அந்நியச் செலவாணி வழக்கு உட்படப் பல வழக்குகளில் சிக்கியிருப்பவர்.

இப்படிப்பட்ட சந்திராசாமிக்கு, இராசீவ் கொலையில் தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் பலவற்றை வெளிப்படுத்தி, அவரைஅவ்வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று அன்றைய "அவுட்லுக் உள்ளிட்ட பல ஏடுகள் எழுதின. ஆனால் நிரசிம்மராவ் அரசாங்கம் என்னசெய்தது தெரியுமா?

சந்திராசாமி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது இடைமறித்துக்கேட்கப்பட்ட தகவல்கள் கொண்ட பல கோப்புகள் காணாமல் போய்விட்டதாக அறிவித்தது.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கோப்புகள், அவற்றுள் அடங்கியிருந்த முக்கியமான தகவல்கள் பற்றிய அனைத்து விவரங்களையும்விடுதலை இராசேந்திரன் தன் நூலில் முழுமையாக விளக்கியுள்ளார்.இராசீவ் கொலை நடந்த அன்று, சந்திராசாமியும், சுப்பிரமணியசாமியும் எங்கே போனார்கள், என்னென்ன செய்தார்கள் என்பனவெல்லாம்அந்தக் கோப்புகளில் இருந்தன. கொலையாளிகளுக்குப் பணம் கொடுத்ததும் சந்திராசாமிதான் என்னும் செய்தியும் "தொலைந்து போனகோப்பில் இருந்தது.

இராசீவ் கொலை வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட ரங்கநாத், செயின் விசாரணைக் குழு (ஜெயின் கமிசன்)முன் அளித்த வாக்குமூலத்தில், ""சந்திராசாமி, மார்கரெட் ஆல்வா, கருநாடகக் காங்கிரசுத் தலைவர் அசுவத் நாராயணா ஆகியோருடன்தனக்கு நெருக்கமான தொடர்பு உண்டு என்று சிவராசன் அடிக்கடி கூறுவார். பெங்களூரிலிருந்து தப்பித்துச் செல்லச்,சந்திராசாமியிடமிருந்து தகவலை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாகவும், சந்திராசாமி தன்னை தில்லிக்கு அழைத்துப் போய், அங்கிருந்துவெளிநாடுகளுக்கு அனுப்பி விடுவார் என்றும் சிவராசன் என்னிடம் கூறினார் என்று கூறியுள்ளார்.

இவ்வளவு வலிமையான ஆதாரங்கள் இருந்தும், சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி போன்ற மோசடி ஆசாமிகளைப் புலனாய்வுத் துறை ஏன்இவ்வளவு காலம் விட்டு வைத்துள்ளது என்ற வினாக்கள் நம்மைக் குடைகின்றன.

இப்போதாவது புலனாய்வுத் துறையின் பார்வை சரியான திசையில் சென்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.என்னவோ தெரியவில்லை, "சாமி களுக்கும், சிறைக் கம்பிகளுக்கும் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டவர்களும் கூட எட்டு ஆண்டு கள் சிறைவாசம் முடிந்தே வெளியேறினர். இப்போதுசிறையில் உள்ள எண்மரும், 13 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு உள்ளனர்.இவ்வழக்கு, "தடா சட்டத்தின் கீழ் வராது என்று உச்ச நீதிமன்றமே கூறிய பின்னரும், "தடா சட்ட விதிகளின்படியே, துன்புறுத்திப்பெறப்பட்ட அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர்கள் சிறைத் துன்பத்தைப் பெற்றுள்ளனர்.

சிறையில் எரிந்து போன அவர்களின் வாழ்வின் வசந்தங்களை இனி யாரால் திருப்பித் தரமுடியும்?எனவே இந்நிலைக்கு அவர்களை உள்ளாக்கிய, அன்றைய சிறப்புப் புலனாய்வுக் குழுத்தலைவர் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறையில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்களுக்கும், ஏற்கனவே எட்டு ஆண்டுகள் சிறையில்இருந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

உடனே விடுதலை செய்க!

இராசீவ் கொலை வழக்கில், சிறப்பு நீதிமன்றம், உலக வரலாற்றில் இல்லாத கொடுமையாகக், குற்றஞ் சாற்றப்பெற்ற 26 பேருக்கும் தூக்குத்தண்டனை என்று தீர்ப்பளித்தது.

அதன்பின் உச்ச நீதிமன்றம் அவர்களுள் 18 பேரை விடுதலை செய்தும், நால்வருக்கு வாழ்நாள் தண்டனை, நால்வருக்குத் தூக்குத்தண்டனை அளித்தும் தீர்ப்பளித்தது. அந்நால்வருள் ஒருவராகிய நளினியின் தூக்குத் தண்டனை, அன்றைய தமிழக அரசால், வாழ்நாள்தண்டனையாக மாற்றப் பெற்றது. பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் தூக்குமேடையை எதிர்நோக்கியே இன்றும் உள்ளனர்.

இந்நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுத் துறை, சந்திராசாமி உள்ளிட்ட சிலருக்கு, இராசீவ் கொலை வழக்கில் தொடர்பிருப்பதாகக்கூறியுள்ளது. எனவே, அக்கொலை வழக்கு விசாரணை முடிவடையாத நிலையிலேயே உள்ளது என்பது தெளிவாகிறது.

விசாரணை முடியாமல் எப்படித் தண்டனை வழங்க முடியும்?

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவரும் உடனே விடுதலை செய்யப்பட்டு,முறைப்படியான விசாரணையை மீண்டும் தொடக்குவதுதானே சரியாக இருக்கும்!

- சுப.வீரபாண்டியன் (seide@md2.vsnl.net.in)

இவரது முந்தைய படைப்பு:

1. காடுகள் கலங்குகின்றன

2. பாஞ்சால நாட்டிற்கொரு நீதி பைந்தமிழ் நாட்டிற்கொரு நீதியா?

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X