• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் வழி திருமணம்- (பகுதி-3)

By Staff
|

Marriage Celebration6. அம்மையப்பர் வழிபாடு

பிள்ளையார் வழிபாடு, காப்பணிதல் செய்த பின்னர் நிறைகுடங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.

"வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக்

கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்

தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச் சுடர்த்திங்கள்

சடையானைத் தொடர்ந்து நின்றென்

தாயானைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி

தேவர்க்கு என்றும்

சேயானைத் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே

சிந்திக்கப் பெற்றேன் நானே. " (திருநாவுக்கரசர் - தேவாரம்)

என்றோதி இறைவனையும்,

"புண்ணியம் செய்தனமே புதுப்பூங்குவளைக்

கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்

பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே" (அபிராமி அந்தாதி)

என்றோதி அம்மையையும் நிறை குடங்களில் எழுந்தருளச் செய்திட வேண்டும்.

"நிலையான் காண் தோற்றவன் காண் நிறையானான் காண்

நீரவன் காண் பாரவன்காண் ஊர் மூன்று எய்த

சிலையவன் காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை

ஒருபாகம் சேர்த்தினான் காண்

கலையவன் காண் காற்றவன் காண்காலன் வீழக் கறுத்தவன்

காண் கயிலாயம் என்னும் தெய்வ

மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான்

காணவன் என் மனத்துளானே"

என்று ஓதி, மலரிட்டு வழிபட வேண்டும். பின்னர் உச்சியில் நீர் சொரிதல் முதலியவற்றைச் செய்ய வேண்டும். நறும்புகை, விளக்கொளி, கற்பூரம் காட்டவேண்டும்.

Marriage Celebration"முன்னியா நின்ற முதல்வா போற்றி

மூவாத மேனி உடையாய் போற்றி

என்னியா எந்தை பிரானே போற்றி

ஏழிசையே உகப்பாய் போற்றி

மன்னிய மங்கை மணாளா போற்றி

மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி

கன்னியர் கங்கைத் தலைவா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி"

(திருநாவுக்கரசர் - தேவாரம்)

என்று இறைவனையும்

"பூமேவு குழல் போற்றி, பொற்புமிகு கருணை மொழி வதனம் போற்றி

மாமேவும் அறம் வளர்க்கும் வண்மை செறி திருக்கரம் ஒண்வசம் போற்றி

கோமேவும் மூவுலகும் ஈன்று சிறிதும் தளராக் கொங்கை போற்றி

தூமேவும் நான்மறைச் செஞ்சிலம்பு அலம்பும் அகிலாண்டேசுவரிதாள் போற்றி"

என்று இறைவியையும்

"பன்னிரு கரத்தாய் போற்றி

பசும்பொன் மாமயிலாய் போற்றி

முன்னிய கருணை ஆறு

முகப்பரம் பொருளே போற்றி

கன்னியர் இருவர் நீங்காக்

கருணை வாரிதியே போற்றி

என்னிரு கண்ணே கண்ணுள்

இருக்குமா மணியே போற்றி"

என்னும் போற்றி கூறி முருகப் பெருமானையும்- தளிரும் மலரும் தூவி வழிபட வேண்டும்.

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்த ஆரமுத

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையானேன் தளக்குச்

செம்மையே ஆய சிவபாதம் அளித்த

செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்து அருளுவதினியே" (திருவாசகம்)

என்றோதி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

மணமக்களிடம் சிறிது மலரினைக் கொடுத்து,

"இன்ப வடிவாகிய இறைவனே! அருள் வடிவாகிய இறைவியே! எங்கள் இல்லற வாழ்வு அன்பும், அருளும் பெருகி மலரஅருளுக" என வேண்டி மலரிடச் செய்ய வேண்டும்.

7. எரியோம்பல்:

Marriage Celebrationவேள்விக் குண்டத்தின் நாற்புறமும் தருப்பைகளை வைக்க, பத்துத் திசைகளிலும் உள்ள காவலர்களுக்குத் திருநீறு, சந்தனம், மஞ்சளரிசி குங்குமம், மலர்கள் இடவேண்டும்.

"நீறணி பவளக்குன்றமே நின்ற நெற்றிக் கண் உடையதோர் நெருப்பே

வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா

ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத்தரசே

ஏறணி கொடியெம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசைமாறிசையே!"

என்று ஓதி, வேள்வி நெருப்பில் முழுமுதற் பொருளாகிய சிவபரம் பொருளை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

மணமக்களிடம் மலர்களைக் கொடுத்து

"கதிரோன் முதலான கோள்களே, கார்த்திகை முதலான வின்மீன்களே, நாங்கள் இல்லற வாழ்க்கை தொடங்கும் இந்த நல்லநேரத்தில் உங்கள் இன்ப ஒளியை எமக்கு அருள்வீராக"

என்று ஒன்பான் கோள்களை வழிபடச் செய்ய வேண்டும்

மீண்டும் மணமக்களிடம் மலர்களைக் கொடுத்து:

"தன்னை அடைந்தவற்றைத் தன்மயாக்கும் எம் பெருமானே எங்கள் வாழ்வில் வந்து பொருந்துகின்ற அனைத்தும் என்றும்இன்பமாகவே மலர அருள்வீர்களாக" என்று வேண்டச் செய்ய வேண்டும்.

"செம்மலரான் உமையாள் குண்டத்துச் செந்தீயிட்டு

நிறை ஓமம் காட்டம் உரித்துச் சேர்ந்து பொம்மலுற்று

அடிசிருக்கு சிருவத்தால் நெய்பூரிப்ப விம்மலுற்று

எழுந்த தம்மா வேள்வித் தீ வலம் சுழித்தே" (திருவிளையாடற் புராணம்)

என்று ஓதி பின்னர் திசைக் காவலர்களுக்கு நறும்புகை, விளக்கொளி காட்ட வேண்டும்.

கற்பூரம் காட்டி திருவருட் சக்தியை நிறைகுடத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

8. தாய் தந்தையர் வழிபாடு

மணமக்களைத் தத்தம் பெற்றோரின் பாதங்களை நீராட்டிப் பால்விடச் செய்து, சந்தனம், மஞ்சளரிசி, குங்குமம் இடச் செய்து, மலரிடச் செய்க. பின்னர் அவர்கள்பாதங்களைத் தொட்டு வணங்கச் செய்ய வேண்டும். அப்பொழுது பெற்றோர்களிடம் மஞ்சளரிசியும் மலரும் கொடுத்து ஆசிர்வதிக்கச் செய்திட வேண்டும்.

மணமகன் வழிபடும்பொழுது:

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்

மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க

ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்

தோன்றாந் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே" (திருநாவுக்கரசர்)

என்றும்

மணமகள் வழிபடும்பொழுது:

Marriage Celebration"அப்பன் நீ! அம்மை நீ! ஐயனும் நீ!

அன்புடைய மாமனும் மாமியும் நீ!

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ!

ஒரு குலம் சுற்றம் ஒர் ஊரும் நீ!

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ!

துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ!

இப்பொன் நீ! இம்மணி நீ! இம்முத்தும் நீ!

இறைவன் நீ!ஏறு ஊர்ந்த செல்வன் நீ!"

என்றும் ஓத வேண்டும்.

9. கொடுப்பதும் கொள்ளுதலும்

மணமகளின் பெற்றோர்கள் கூற வேண்டியது:

"எங்கள் அன்புத் திருமகள் (மணப்பெண்ணின் பெயரைச் சொல்லி) தங்களுடைய பண்புசால் திருமகன் (மணமகன் பெயரைச் சொல்லி)திருமணம் செய்தளிக்கிறோம்"

மணமகன் பெற்றோர் கூற வேண்டியது:

"எங்கள் பண்புசால் மகன் (மணமகன் பெயரைச் சொல்லி) தங்களுடைய அன்புத் திருமகள் (மணமகள் பெயரைச் சொல்லி) திருமணம்செய்து கொள்கிறோம்."

"கொடுப்பதும் கொள்வதும்" நிகழும்போது ஒரு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுக்க வேண்டும்.

10. மங்கல நாண் அணிவித்தல்

ஒரு தட்டில் முழுத் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, அதன் மேல் திருமாங்கல்ய நாணை வைத்து அவையோரிடம் ஆசி பெறவேண்டும்.

அ) "தண் கமலத்து இருந்து ஈசன் அடிக்கமலம் மனக்கமலம் தன்னில்

வைத்து வண் கமலக் கண்ணானை மணவாளன்

எனப்பெறுவான் மாதவம் செய்து

ஒண் கமலாயன் எனும் பேரொளி ஆர்த்த திருவாரூர் உகந்தணிந்த

பெண் கமலம் கைக்கமலம் பிடித்த ஒளிதனைத் தொழுது வாழ்வோம்"

ஆ) "மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னிக்

குணிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடை மேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே"

என்று ஓதி அம்மையப்பரைத் திருமாங்கல்யத்தில் எழுந்தருளச் செய்து, நறும்புகை, விளக்கொளி காட்ட வேண்டும்

மணமக்களிடம் மலர்கள் கொடுத்து,

"அருள் வடிவாக இருக்கும் இறைவனே! எங்கள் வாழ்வின் அடையாளமாக இருக்கின்ற இந்தத் திருத்தாலியிலே என்றென்றும் மகிழ்வுடன்எழுந்தருள்வீராக" என்று வேண்டுடி மலரிட்டு வணங்கச் செய்ய வேண்டும்.

வழிபாடுசெய்த திருத்தாலியை அனைவரிடம் காட்டி வணங்கச் செய்து, நல்ல நேரத்தில் மணமகனை மணமகளுக்குத் திருமங்கலநாணை அணிவிக்கச் செய்ய வேண்டும்.

(தொடரும்)..

- அஸ்வின் தாயுமானவர்(arivashwin@sancharnet.in)

தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி?- (பகுதி-2)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more