• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி?- (பகுதி- இரண்டு)

By Staff
|

திருமண நிகழ்வுகள்:

(மணமகன், அருகில் உள்ள திருக்கோயிலுக்குச் சென்று வந்த பின்னர், மணமக்களை உரிய இடத்தில் அமர்த்தி நிகழ்வுகளைச் செய்ய வேண்டும்)

Marriage Celebrationமொத்தம் 17 வகை திருமண நிகழ்வுகள். அதன் விவரம்:

1. திருவிளக்கு வழிபாடு.

வழிபாடு நடைபெறும் இடத்தில் மங்கலப் பெண்டிரைக் கொண்டு விளக்கேற்றச் செய்ய வேண்டும். சோதியாய்ச் சுடராய் ஒளிவளர் விளக்காய் இறைவனைக்காணும் நம் நெறியில் பொருள்களை விளங்கச் செய்வதும், நன்மைக்குக் காரணமாகியதுமான விளக்கினை வழிபட வேண்டும்.

பேரொளிப் பிழம்பான அம்மையப்பனைக் கண்டு, கருதி, கைகூப்பித் தொழ வேண்டும்.. சுடரின் செம்பகுதி இறைவன், உள் ஒளிரும் நீல ஒளி இறைவி. ஆதலால்சுடரில் அம்மையும் அப்பனும் இணைந்து ஒளிருகிறார்கள் என்பது நம்பிக்கை.

"உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக

மடம்படு உணர்நெய் அட்டி உயிரெனும் திரிமயக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே" (திருநாவுக்கரசர் - தேவாரம்)

"கோடாமல் என்றும் குறையாமல் எங்கள் குலம் என்றும்

வாடாமல் வாழ வரம் தருவாய்! மனம் மாயை வழி

ஓடாமல் உள்ளே ஒடுங்கும் தவம் உணர்வறிய

ஆடாமணியொளிச் சோதியே! பூவில் அமர்ந்தவனே! "

என ஓதி, இறைவன் எழுந்தருளியதற்கு அடையாளமாக உச்சியிலும், திருவடியிலும் மலரினை இட வேண்டும்.

"எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி!

எரிசுடராய் நின்ற இறைவா போற்றி

கொல்லர் மழுவாட் படையாய் போற்றி!

கொல்லும் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி!

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி!

கற்றார் இடும்பை காளைவாய் போற்றி!

வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி!

வீரட்டம் காதல் விமலா போற்றி!

(திருநாவுக்கரசர் - தேவாரம்)

Marriage Celebrationஎனப் போற்றி ஓதி, நறுமலர் அல்லது வில்வம் தலிய தளிர் கொண்டு எட்டுப் போற்றிகளையும் "எண்மலர்" வழிபாடாகச் செய்யவேண்டும்.

அப்பொழுதில் மணமக்கள் வேண்டுதல் (இருவரும்):

"இன்ப விளக்காக இருக்கின்ற பெருமானே! இன்று நாங்கள் தொடங்கும் இல்லற வாழ்வு என்றும் இன்ப ஒளி வளர்த்து ஓங்கி இன்புறஅருள்வீராக".

2. நிறைகுடப் புனித நீர் வழிபாடு:

அம்மையப்பர் கலசங்களுக்குச் சற்றுத் தள்ளி வலப்புறமாக வைக்கப்பட்டுள்ள புனித நீர் நிறைகுடத்திற்கு வழிபாடு செய்யும் முறை.

"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்

குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்

தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப

அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே"

(திருநாவுக்கரசர் - தேவாரம்)

என ஓதி நிறைகுட நீரில் எல்லாச் சிவ தீர்த்தங்களும் நிரம்பியதாக ஏற்று வருணனை எழுந்தருளச் செய்ய வேண்டும். நறும்புகை விளக்கொளி காட்டி வழிபடவேண்டும்.

"கடல்களின் அரசே வருணா போற்றி

நன்னீர்ப் பெருங்கடல் பொன்னே போற்றி

நீருக்கதிபதி நிறைவே போற்றி

மகரவாகனம் மகிழ்ந்தாய் போற்றி

புனிதன் சடைஅமர் வனிதை போற்றி

கங்கையென்னும் மங்கை போற்றி

யமுனை நதியெனும் நல்லாய் போற்றி

நருமதை நதியாம் நல்லருள் போற்றி

சிந்து நதியின் சிறப்பே போற்றி

துங்கா நதி நங்காய் போற்றி

காவிரி நதியாய் காப்பாய் போற்றி

வைகை நதியாய் வந்தாய் போற்றி

Marriage Celebrationஆன்பொருனை அரசி போற்றி

தண் பொருனைத் தாயே போற்றி!"

எனப் போற்றி, மலரிட்டக் கற்பூர ஒளி காட்ட வேண்டும்.

மணமக்கள் இருவரும் கூற வேண்டியது:

"உமையொரு பாகன் சடையிடை அமர்ந்த கங்கைப் பெருந்தாயே! வைகை அன்னையே! எங்கள் உடலும் உள்ளமும் உயிரும்சூழலும் குளிர்ந்து என்றும் நலம் விளங்க அருளுக" என மணமக்கள் வேண்டியதும், மணமக்களைப் புனித நீர் நிறை குடத்திற்கு மலரிடச் செய்யவேண்டும்.

நிறைகுட நீரினை, வழிபாட்டுப் பொருட்களின் மேலும், மணமக்கள் மேலும் மாவிலையால் தெளிக்க வேண்டும்.

3. திருநீறு அணிவித்தல்:

"காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் கைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணத் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே" (சம்பந்தர் - தேவாரம்)

என்று திருநீற்றுச் சிறப்போதி, மணமக்கள் அணிந்து கொள்ளத் திருநீறு, சந்தனம், குங்குமம் தர வேண்டும்.

4. விநாயக பெருமான் வழிபாடு

எடுத்துக் கொண்ட செயல் எவ்வித இடையூறுமின்றி நடைபெற இன்றியமையாததான, மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையாரை வழிபட வேண்டும்.

"கங்கையும் பணிவென் திங்களும் விரைத்த கடுக்கையும்

தொங்கலும் அரவும்

தங்குபொற்சடையும் முக்கணும் தாதை தாணு மென்றுணர்ந்த

மென் மலர்க்கை

அங்குச பாசமணிந்து வெற்பு உயிர்த்த ஆரணங்கு அன்னை

என்றுணர்த்தி

வெங்கலிமுழுதும் துமித்தருள் எக்கியசாலை விநாயகரடிபணிவாம்"

என்றோதி, விநாயகப் பெருமானை எழுந்தருளச் செய்ய வேண்டும். பின்னர் உச்சியில் நீர் சொரிதல், உட்கொள்ள நீர் தருதல், திருவடிக் கமலங்களை நீராட்டுதல்,திருமேனியை நீராட்டுதல் ஆகியன செய்ய வேண்டும். நறும்புகை, விளக்கொளி காட்டி, கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

Marriage Celebration"தேவர்க்கு இடையூறு யாவையும் தீர்த்தமைத் தேவா போற்றி!

மூவர்க்கு அரசளித்த தன்மை நற்பொருளே போற்றி!

சேடிவக்கு அடிமையாக்கி சிறியனேன் தம்மை காப்பாய்

மேவிய புகழ்படைத்த விக்கினராசா போற்றி! போற்றி! "

எனப் போற்றி மலரிட வேண்டும்.

"அங்கம் வேதம் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்

செங்கயலார் புனல் செல்வமிகு சீர்கொள் செங்காட்டம் குடியதனுள்

கங்குல் விளங்கெரி ஏந்தியாடும் கணபதியீச்சரம் காறவே"

"மும்மதத்தன் என்றொரு பெயர் தனக்கு மொய் கூந்தற்

கொம்மை வெம்முலைக் கொற்றொடிக் கொடிச்சியை இலைவேல்

கைமலர்ந்தனி இளவற்கும் கஃறெனும் கானத்து

அம்மந்து புக்கு உறுத்தவன் அடிமலர் பணிவாம்"

என்றோதிக் கற்பூரம் காட்ட வேண்டும்.

மணமக்கள் இருவரும் வேண்டிட:

"எக்கிய சாலை விநாயகர் பெருமானே! எங்கள் இல்லற வாழ்வு அனைத்து வகையிலும் என்றும் இனிதே நிறைவுற அருளுக"

5. காப்பு அணிவித்தல்:

முக்கொம்புடைய விரலி மஞ்சளை வெற்றிலையில் மஞ்சள் நூலால் கட்டி பிள்ளையாருக்கு முன்பு வைத்து வழிபாடு செய்க. ஒரு தட்டில்முழுத் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து அதனை மணமகனைப் பிடித்துக் கொள்ளச் செய்து வலது கையில் காப்பினைஅணிவிக்கவும். மணமக்களுக்கு இடது கையில் அணிவிக்கவும்.

"மாறிலா நிறை வளர்ந்தரு புகலியின் மணமீக்

கூறு நாளின் முன்னாளினில் வேதியர் குழாம்

நீறு சேர் திருத் தொண்டரும் நிகரிலாதவருக்கு

ஆறு சூடினார் அருள்திருக் காப்பு நாண் அணிவார்" (பெரிய புராணம்)

எனவும்

"பங்கயனும் மாமகேசர் பாதபூசனை செய்து ஏத்தி

அங்குரந் தெளித்து முன் கைக்கங்கணம் ஆர்த்தல் செய்தார்"

என்றும் காப்பு அணியும்போது ஓத வேண்டும்.

மணமக்கள் இருவரும் கூற வேண்டிய குறள்:

"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (குறள் 43)

(தொடரும்)..

- அஸ்வின் தாயுமானவர்(arivashwin@sancharnet.in)

தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி?- (பகுதி- ஒன்று)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X