• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

தூரங்கள் என்பன... தமிழன்பன் சிறப்புப் பேட்டி

By Staff
|

Tamilanbanஈரோடு தமிழன்பன்..

இவர் பேசுவதே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கிறது. மழை நேரத்து ஜன்னல் ஓரம் மாதிரி, அத்தனை சுகம்.

தொலைக்காட்சியில் செய்தி வாசித்தாலும், மேடைகளில் கவிதை வாசித்தாலும் இந்த ஈரோட்டுக் கவிஞர் வெறும்வார்த்தைகளை கொட்டுவதில்லை, அதில் கொங்கு நாட்டு செந்தேன் தடவியே தருவார்.

ஜப்பானிய ஹைகூவை தமிழில் தாலாட்டிக் கொண்டிருப்பவர். தமிழில் அதிக அளவில் கவிதைத் தொகுப்புகளைவெளியிட்ட முதல் கவிஞரும் இவர் தான். இவரது படைப்புகள் மொத்தம் 29.

லீமெரிக் எனப்படும் கவிதை வடிவில் தமிழன்பன் ஸ்பெஷலிஸ்ட். தமிழில் லீமெரிக் வகை கவிதைகளைகொண்ட கவிதைத் தொகுப்பை ("சென்னிமலை கிளியோபாட்ராக்கள்") முதன் முதலாக வெளியிட்டார்.

ஒரு பயண நூலையே முழுமையான கவிதை வடிவில் "உன் வீட்டில் நான் வந்திருந்தேன்". என்ற தலைப்பில்கொடுத்த தமிழன்பன், "கனா கண்ட வினாக்கள்" என்ற நூல் மூலம் கேள்விகளால் வேள்வி நடத்தினார்.

கேள்விகளே பதில் தேடுவதாய் அவர் செய்த அட்டகாசமான, வித்தியாசமான முயற்சி அது

.தமிழன்பன் குறித்து சமீபத்தில் ஜெயகாந்தன் ஒரு விழாவில் இப்படிக் கூறினார்:

பாரதியாருக்குப் பின்னர் யாருடைய கவிதைகளையும் நான் படித்ததில்லை. ஆனால் தமிழன்பன் போன்றோர்நல்ல கவிதைகளை படைக்கிறார்கள் என்பதை அறிந்தபோது, கவிதை வளர்ந்து கொண்டுதான் உள்ளது, நாம் தான்இத்தனை காலம் அவற்றைப் படிக்காமல் விட்டு விட்டோம் என்று கவலைப்பட்டேன்.

இத்தனை சிறப்பு கொண்ட கவிஞர் தமிழன்பன் சமீபத்தில் தனது வணக்கம் வள்ளுவம் என்ற கவிதைத்தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறார்.

அவரை தட்ஸ்தமிழ் வாசகர்கள் சார்பில் வாழ்த்தி சிறப்புப் பேட்டி கண்டோம்.

அதென்ன வணக்கம் வள்ளுவம்?

கேள்வியை உள்வாங்கிய வேகத்தில் தமிழன்பனிடம் இருந்து அருவியாய் வருகிறது பதில்,

இது ஒரு படைப்பின் மீதான படைப்பு. குறளை அடிப்படையாகக் கொண்ட ஒரு எடுத்துரைப்பு. விவாதங்கள்,நாடகப் பாங்கான கவிதைகள் உள்ளடக்கிய ஒரு நூல். மொத்தம் 22 கவிதைகள்.

குறளில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை வள்ளுவரிடமே விளக்கம் கேட்டுப் பெறும் ஒரு முயற்சிதான் வணக்கம்வள்ளுவம். இதில் வள்ளுவரும் ஒரு பாத்திரமாக வருகிறார், கேள்விகள் கேட்கிறார், உரையாடுகிறார்.

ஒரு குறளில், அறிவிலாதவரின் நட்பு கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.நட்புக்கு அறிவை அளவுகோலாக வைக்கலாமா என்பதில் முரண்பாடு எனக்கு. காரணம், அறிவுடையவர் பலர்இன்று உண்மையான நட்புடன் பழகுகிறார்கள் என்று கூற முடியாதே.

எனவே அறிவை அளவுகோலாக வைக்கலாமா என்று வள்ளுவரிடம் கேட்டு விளக்கம் பெறுவதாக ஒருகவிதையில் சொல்லியுள்ளேன்.

இதுபோல குறள்களில் காணப்படும் பல சந்தேகங்களை திறனாய்வு செய்யும் நூல்தான் வணக்கம் வள்ளுவம். இதுகுறளின் மீது எழுதப்பட்ட உரை நூல் அல்ல.

Tamilanbanஒன்னேக்கால் அடியில் குறளைப் படைத்த வள்ளுவருக்கு 2 குழந்தைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒருகற்பனை செய்துள்ளேன். அந்த கற்பனையும் கவிதை வடிவமாக இதில் இடம் பெற்றுள்ளது.

திருக்குறளைப் பொருத்தவரை எத்தனையோ பேர் உரை எழுதியிருக்கிறார்கள். இதற்குக் காரணம், குறளின் மூலக்கருத்து யாருக்கும் புரியாமல் போனதால்தான். இன்னும் கூட குறளின் மூலக் கருத்து புரியாத காரணத்தால்தான்தொடர்ந்து விளக்கவுரைகள் வந்து கொண்டே உள்ளன.

ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லி வருகிறார்கள். அந்த கருத்துக்கள்தான் பரவிக் கொண்டு வருகின்றன.ஆனால் மூலம்? அது யாருக்கும் புரிபடவில்லை, மூலத்தைப் புரிந்து கொண்டால் நம்மையேப் புரிந்து கொண்டுவிடுவோம்.

அதேபோல திருக்குறளில் எது முதலில் எழுதப்பட்டது, எது கடைசியில் எழுதப்பட்டது என்பது தெரியாது.அதையும் வள்ளுவரிடம் வினவியுள்ளேன். எது முதலாக இருந்திருக்கும், எது கடைசியாக இருந்திருக்கும்.கடைசிக் குறள் எழுதும்போது வள்ளுவரின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எனது கற்பனையில்கூறியுள்ளேன்.

இந்தக் கவிதைகள் அனைத்தும் முதலில் வள்ளுவம், பின்னர் முத்தாரம் ஆகியவற்றில் தொடராக வெளிவந்தவை.இந்த நூல், ஆங்கிலத்திலும் பேராசிரியர் சங்கரநாராயணன் என்பவரால் "சல்யூடேஷன்ஸ்" என்ற பெயரில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றார் தமிழன்பன்.

இன்றைய கவிதை உலகம் எப்படி உள்ளது?

தமிழன்பன்: இன்றைக்கு நிறையப் பேர் புதுக் கவிதைகள் எழுதுகிறார்கள். இது வரவேற்கப்பட வேண்டியதுதான்.

புதுக் கவிதைகள் எழுதுவது இன்றைய காலத்தின் மரபு. அந்தக் காலத்தில் ஆசிரியப் பா, நிலை மண்டில ஆசிரியப்பா, வெண்பா என்று எழுதினார்கள். அது அந்தக் காலத்தின் கவிதை மரபு.

இப்போது புதுக் கவிதைகள் பெருகி விட்டன, அதனால் மரபுக் கவிதைகள் மறைந்து கொண்டிருக்கின்றன என்றுகூற முடியாது.

கவிதை எழுத ஆர்வம், முயற்சி, பயிற்சி, இடையறாத தேடல் எல்லாம் இருக்க வேண்டும். ஆர்வம் உள்ளஎல்லோருமே கவிதை எழுதலாம். அதே சமயம், கவிதை எழுத தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

ராவண காவியம் என்ற நூலுக்கு பேரறிஞர் அண்ணா முன்னுரை எழுதும்போது, அதை புதுக் கவிதை என்றுதான்அழைத்தார். இத்தனைக்கும் ராவண காவியத்தில் இடம் பெற்றிருந்தவை அனைத்துமே மரபுக் கவிதைகள். எனவேவடிவம் எப்படி இருக்கிறது என்பதை விட அதை பார்க்கும் பார்வைதான் முக்கியம்.

செம்மொழி குறித்து உங்கள் பார்வை என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த இலக்கியவாதி நோம் சாம்ஸ்க்கி ஒரு இடத்தில் கூறுகிறார், தொன்மையான, 2,000ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஒரு மொழி, இத்தனை காலமும் அதிக மாறுதல் அடையாமல், சீர்கெடாமல்இருக்கிறதென்றால் அது தமிழ் மட்டும்தான்.

Tamilanbanஇப்படிப்பட்ட தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததில் ஆச்சரியமில்லை. நிச்சயம் தமிழ் சிறப்பானமொழிதான். உலகில், பழமையான, அதிகம் மாறுதல்கள் அடையாத மொழிகள் இரண்டு மட்டும்தான். ஒன்று நம்தமிழ், மற்றொன்று தென் ஆப்பிரிக்காவின் சுவாஹி.

இவை இரண்டு மட்டுமே இத்தனை காலம் அதிக சிதைவு காணாத மொழிகள் என்றார் தமிழன்பன்.

விடைபெறும்போது, தட்ஸ்தமிழ்.காம் வாசகர்களுக்காக தமிழன்பன் தந்த ஒரு "இன்ஸ்டன்ட்" கவிதை:

இணையம் வழி

இணையும் தமிழர்கள்

இதயம் வழி

இணைவதோடு

இனிய தமிழ் வழியும்

இணைய என் வாழ்த்துக்கள்

தூரங்கள் என்பன,

சமீபங்களின் விரிவுகளே

தவிர,

பிரிவுகள் அல்ல!

பிரிவுகள் என்பன,

உறவுகளின் விரிவுகளே

தவிர

முடிவுகள் அல்ல!

- சுதா(ak.khan@greynium.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X