For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலாறு பாழான துயர வரலாறு

By Staff
Google Oneindia Tamil News

- பழ.நெடுமாறன்

Nedumaranவட ஆற்காடு மாவட்டம், காஞ்சி மாவட்டம் ஆகியவற்றில் உள்ள சுமார் இரண்டு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் பாலாற்று நீர் மூலம் பாசனம் செய்யப்படுகிறது.

இராணிப்பேட்டைக்கு அருகில் ஒர் அணை கட்டப்பட்டு இந்த அணையில் இருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கர மல்லூர், தூசி ஆகிய நான்கு கால்வாய்கள் மூலம் பாசனத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

பாலாறு அணைத்திட்டத்தின் மூலம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வாலாஜா, செய்யாறு வட்டங்களைச் சேர்ந்த சில கிராமங்களுக்கும் இந்தக் கால்வாய்களின் மூலம் பெரும் பயன் கிடைக்கிறது.

மொத்தத்தில் 317 ஏரிகளுக்கு இந்தக் கால்வாய் மூலம் நீர் கிடைக்கிறது. இந்த ஏரிகளுக்கு ஆண்டு தோறும் முறையாக நீர் கிடைக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பாலாறு அணைப் பாசனப்பகுதியில் மேல் பக்கம் இருக்கும் சுமார் 124 எரிகள் ஆண்டிற்கு ஒரு முறை தான் நிரம்புகின்றன.

இதில் எட்டில் ஒரு பங்கு ஏரிகளே ஆண்டிற்கு 3 முறை நிரம்புகின்றன. பாலாறு அணைப் பாசனத்தின் கீழ் பகுதியில் இருக்கும் பல ஏரிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

பாலாறு அணைப் பாசனம் என்பது மிகப் பழமையானது. 1850ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணால் ஆன தற்காலிகமான அணையை எழுப்பி பாலாற்றுத் தண்ணீரை காவேரிப்பாக்கம் ஏரிக்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். 1815ஆம் ஆண்டில், இந்த இடத்தில் நிரந்தரமாக அணை ஒன்றினை கட்ட வேண்டும் என்ற அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

ஆனால் 40 ஆண்டுகள் கழித்து 1855ஆம் ஆண்டில் இந்த அணையைக் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்தது. மூன்று ஆண்டு காலத்தில் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது.

1858ம் ஆண்டு முதல் இந்த அணையின் மூலம் பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டது. 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக அணையின் ஒரு பகுதி பெரும் சேதமடைந்தது. ஆனாலும் இந்த அணை மறுபடியும் சீரமைக்கப்பட்டது.

1870--77ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் விளைவாக மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக பாலாறு அணையை அகலப்படுத்திச் சீரமைக்கும் பணி செய்யப்பட்டது. இந்தப் பணி சுமார் 20 ஆண்டு காலத்திற்கு நடைபெற்றது.

இந்த அணை மீண்டும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்தது. 1930களில் இந்த அணையில் மராமத்துப் பணிகள் நடைபெற்றன. இதற்கிடையில் ஏற்கனவே தங்களுக்குக் கொடுத்து வந்த நீர் குறைவதாக விவசாயிகள் புகார் செய்தனர்.

1920ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாலாற்றில் வரும் நீரே குறைந்துவிட்டதாகவும், கர்நாடக மாநிலம் புதிய ஏரிகளைக் கட்டி பாலாற்று நீரைத் தேக்கிக் கொண்டதால் தான் ஆற்றில் நீர்வரத்து குறைந்தது எனவும் விவசாயிகள் புகார் செய்தனர்.

1892ஆம் ஆண்டில் சென்னை அரசும் மைசூர் அரசும் செய்து கொண்ட உடன்பாட்டை மீறி பல புதிய ஏரிகளை மைசூர் அரசு அமைத்திருப்பதாக புகார் செய்யப்பட்டது. 1920களின் தொடக்கத்தில் சென்னை மாகாண கவுன்சிலில் இப்பிரச்சினை குறித்து கடும் விவாதம் நடந்தது. இதன் விளைவாக 1931ம் ஆண்டில் மூன்று அதிகாரிகளையும், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

பாலாற்றில் வந்து கொண்டிருந்த நீர் குறைந்ததா என்பதைப் பற்றி இக்குழு விசாரணை நடத்தி பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டது.

தற்போது இந்த ஆற்றின் மூலம் பாசன வசதி பெரும் நிலத்தின் பரப்பளவை விட அதிகமான பரப்பளவுக்கு உண்மையிலேயே பாலாற்று நீரை அளித்திருக்க முடியும். பாலாறு படுகையில் 2,15,000 ஏக்கரிலிருந்து 2,45,000 ஏக்கர் வரை பாசன வசதி அளிக்கப்படுகிறது.

ஆனால், உண்மையில் 3,50,000 ஏக்கர் முதல் 3,75,000 ஏக்கர் வரை பாசன வசதி அளிக்க முடியும் என்பதை இந்தக் குழு கண்டறிந்தது.

1885, 1904ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாலாற்றில் பெருகி ஓடி வந்த நீரின் அளவை விட 1905, -24ஆம் ஆண்டுகளில் ஓடி வந்த நீரின் அளவு பெருமளவு குறைந்திருப்பதாகவும் இந்தக் குழு கண்டறிந்தது. பாலாற்று அணைக் கால்வாய்கள் மூலம், விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட நீரின் அளவு இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெருமளவு குறைந்து விட்டது என்பதையும் இந்தக் குழு கண்டறிந்தது.

இது குறித்து சென்னை மாகாண அரசு மைசூர் அரசிடம் புகார் செய்தது. புதிய பெரிய ஏரிகள் அமைக்கப்பட்டு மைசூர் பகுதியில் பாலாறு பாசன வசதிகளை விரிவாக்கியதின் விளைவாகவே தமிழகத்திற்கு வந்த தண்ணீர் கணிசமாக குறைந்துவிட்டது என்பதை சென்னை மாகாண அரசு தெரிவித்தது.

புள்ளி விவரங்கள் கூறும் திடுக்கிடும் உண்மைகள்:

1864ம் ஆண்டில் இருந்து, 1880ம் ஆண்டுகள் வரை 15 ஆண்டு காலத்திற்கு பாலாற்றின் நீரோட்டத்தைப் பற்றிய புள்ளி விவரங்கள் சில உண்மைகளைத் தெரிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் 4 ஆண்டுகள் பாலாற்று அணையின் மேலாக நீர் செல்லவில்லை. அதாவது மிகக் குறைந்த அளவு நீரே ஆற்றில் வந்துள்ளது. அதில் ஒரு வருடத்தில் ஆற்றில் நீரே வரவில்லை.

சராசரியாக ஆண்டுக்கு 273 நாட்களில் பாலாற்றில் தண்ணீர் வரவே இல்லை. இப்படி பாலாறு வறண்டதற்கு மைசூர் பகுதிகள் ஏரிகள் வெட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டதே காரணமாகும்.

நந்தி மலையில் பாலாறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து சிறிது தொலைவில் நங்குலி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து தமிழக எல்லை 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஏரிக்கு கீழே செட்டிக்கல் ஏரி அமைந்துள்ளது. இதன் துணை ஏரிகளாக மேலும் 5 ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

செட்டிக்கல் ஏரிக்கும் தமிழக எல்லைக்கும் இடையே உள்ள தூரம் 16 கிலோ மீட்டர் ஆகும். இதைத் தொடர்ந்து மல்லிநாயக்கன்அல்லி என்னும் உப நதி நீரைத் தேக்குவதற்கு 4 ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக எல்லையில் இருந்து 10.4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஏரிகள் அமைந்துள்ளன. மற்றொரு உப நதியான பெட்மடு என்பதின் நீரைத் தேக்குவதற்கு 4 ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் எல்லையில் இருந்து 37 கிலோமீட்டர் இவை தொலைவுக்குள் உள்ளன. மேலே அமைக்கப்பட்ட அத்தனை ஏரிகளும் நிரம்பிய பிறகே வழியும் தண்ணீர் பாலாற்றில் விடப்படுகிறது.

1954ஆம் ஆண்டில் வட ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்ட விவசாயிகளின் மாநாட்டில் மீண்டும் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது.

கிட்டதட்ட 100 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழக விவசாயிகள் இந்த அநீதியை எதிர்த்துப் போராடி வந்த போதிலும் அவர்களுக்குப் பரிகாரம் கிடைக்கவில்லை. கர்நாடக அரசு தமிழகத்தின் ஆட்சேபனையை கொஞ்ச¬ம் சட்டை செய்யவில்லை.

நீரளவு குறைந்தது ஏன்?:

1933ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதியிட்ட சென்னை மாகாண கவுன்சிலில் நடைபெற்ற விவாதங்கள் பல தகவல்களை நமக்கு தெரிவிக்கின்றன. வி.எம்.இராமசாமி முதலியார் என்ற உறுப்பினர் அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட வினாவை எழுப்பினார்.

பாலாற்றில் ஓடி வந்த நீரின் அளவு குறைந்தது பற்றி விவசாயிகளால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் சென்னை மாகாண அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இந்தக் குழுவை மறுபடியும் கூட்டி நிலைமையை ஆராயும் நோக்கம் அரசுக்கு உள்ளதா? இதற்கு அரசு தரப்பில் பின்வரும் பதில் அளிக்கப்பட்டது.

மைசூர் அரசாங்கத்திற்கு நாங்கள் எழுதிய கடிதத்திற்கு இன்னும் பதில் எதுவும் வரவில்லை. இரண்டு அரசாங்கத்திற்கு இடையேயுள்ள பாசனத் தகராறுகள் குறித்து இரண்டு அரசுகளின் பிரதிநிதிகளும் கூடி விவாதிக்கலாம் என்ற யோசனையை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அப்படி பேச்சு வார்த்தை நடக்கும் போது பாலாற்றுப் பிரச்சினையையும் முழுமையாக விவாதிக்கப்படும். இதற்குப் பின்னர் விவசாயிகளின் குழுவின் கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கப்படும்.

திரு. வி.எம்.இராமசாமி முதலியார் இத்துடன் விடவில்லை. சென்னை மற்றும் மைசூர் அரசுகளுக்கிடையே பேச்சு வார்த்தை எப்போது தொடங்கும் என்று கேட்டார். அதற்கு அரசு தரப்பில் பதில் தரப்படவில்லை.

கர்நாடகத்தின் அத்துமீறல்:

1802ம் ஆண்டு சென்னை மாகாண அரசு மற்றும் மைசூர் அரசுகளுக்கிடையே ஒரு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றிய உடன்பாடே அது என்பதும், அந்த உடன்பாட்டில் இரண்டாவது பிரிவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது என்பதும் முக்கியமானவையாகும்.

சென்னை மாகாண அரசின் சம்மதமில்லாமல் மைசூர் அரசு எத்தகைய புதிய அணைகளையோ, நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எந்தெந்த ஆறுகளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பதற்கான பட்டியலில் 15 முக்கிய நதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் 8ஆவது நதியாக பாலாறு இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த உடன்பாட்டை கர்நாடகம் மதிக்கவில்லை. மீறி பல ஏரிகளை அமைத்து பாலாற்று நீரைத் தேக்கிக் கொண்டது.

ஆந்திரம் இழைக்கும் அநீதி:

பாலாற்றில் மேலும் மூன்று தடுப்பணைகள் விரைவில் கட்டப்படும். இதற்காக ஆந்திர மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கணேசபுரம் பகுதியில் இரு மலைகளுக்கு இடையில் ரூ. 250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அணை கட்டுவதற்கான அனைத்து பணிகளையும் ஆந்திர அரசு செய்து வருகிறது.

இதற்காக ஆந்திர மாநில நீர்வளத்துறை பொறியாளர்கள் ஆலோசனை கூட்டம் சித்தூரில் கடந்த 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆந்திர நீர்ப் பாசனத்துறை தலைமைப் பொறியாளர் வெங்கட் நாராயணராவ் தலைமையில், அணை கட்டத் திட்டமிடுதல் துறையின் தலைமை பொறியாளர் மதுசூதனன், குப்பம் பகுதி தலைமைப் பொறியாளர் வெங்கட்ராமையா, கணேசபுரம் அணை கட்டும் தலைமைப் பொறியாளர் சிவசங்கரராவ் உட்பட 25க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அணை கட்டுவது பற்றிய இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது பற்றிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது பின், அணை கட்டுவதற்கு டெண்டரும் விடப்பட்டது.

இதுகுறித்து அணை கட்டும் தலைமைப் பொறியாளர் சிவசங்கரராவ் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில் 57 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலாறு ஓடுகிறது. இதன் குறுக்கில் அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு முழு உரிமை உள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது. அணை கட்ட 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடைசியாக கணேசபுரத்தில் இரு மலைகளுக்கு இடையில் அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்கான இறுதி திட்ட அறிக்கையும், மதிப்பீட்டு அறிக்கையும் ஆந்திர அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அணை கட்டுவதன் மூலம் 0.6 டி.எம்.சி., கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் குப்பம், பலமனேர் மற்றும் 120 கிராமங்கள் பயன்பெறும். மேலும், இங்கிருந்து கால்வாய்கள் அமைக்கப்பட்டு சித்தூர், திருப்பதி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

இதன் மூலம் சித்தூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை தீரும். 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணை கட்டுவதால் கணேசபுரம், மகமதுபுரம் உட்பட 10 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடும். இங்கு வாழும் மக்களுக்கு உரிய நிவாரணம், மாற்று இடம் வழங்கப்படும். அணை கட்டுவதற்கு வசதியாக தங்கள் வீடுகளை காலி செய்ய இப்பகுதி மக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அரசுக்கு ஒப்புதல் கடிதம் கொடுத்து வருகின்றனர். வனப்பகுதியில் அணை கட்டப்படவில்லை. ஆந்திர அரசுக்கு சொந்தமான இடத்தில்தான் அணை கட்டப்படுவதால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. அணை கட்டும் பணிகள் பிப். 15ஆம் தேதி முதல் தொடங்கும்.

அணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குறிப்பாக பாலாற்றை ஒட்டியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

பாலாற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுக்கவும், குப்பம், சித்தூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்ககவும் இந்த அணை கட்டப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு ¬ன் இந்த அணை கட்ட திட்டம் வகுக்கப்பட்டது.

அப்போது அணை கட்ட தேவையான நிதி ஒதுக்காததால், அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதே திட்டத்தில் சில மாறுதல்களை செய்து மீண்டும் இந்த அணை கட்ட திட்ட மதிப்பீடு ரூ. ஐந்து கோடி மட்டுமே. இப்போது அணை கட்டுவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது. மேலும், இதுவரை ஆந்திர மாநில பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், மூன்று தடுப்பணைகள் விரைவில் கட்டப்படும். இதற்கான ஒப்புதல் ஆந்திர அரசிடம் பெறப்பட்டுள்ளது. அணை கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு இறுதி முடிவு செய்யப் பட்டுள்ளது. பெரிய வேலைகளுக்கு 12 பேரும், சிறிய வேலைகளுக்கு 102 பேரும் டெண்டர் எடுத்துள்ளனர்.

பகுதி, பகுதியாக அணை கட்டப்படுகிறது. அணையிலிருந்து செல்லும் கால்வாய் கட்டுவதற்கு மட்டும் டெண்டர் அடுத்த வாரம் விடப்படுகிறது. இவ்வாறு சிவசங்கரராவ் கூறினார்.

ஆந்திர நீர்ப் பாசனத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. அணை கட்டடுவதைத் தடுக்க தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தால், ஆந்திர அரசு பதிலுக்கு வழக்குத் தொடுக்க தயாராக இருக்கிறது.

அணை கட்ட தடை விதித்தாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப் படமாட்டோம். தொடர்ந்து அணை கட்டிக் கொண்டிருப்போம். ஆந்திர மாநிலத்தில் 35க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். இந்த திட்டத்தில் பாலாற்றில் அணை கட்டும் திட்டம் வருகிறது.

மத்திய அரசு அணை கட்டும் திட்டத்துக்கு நிதி அளிப்பதாக கூறும்போது அதைத் தடுக்க தமிழக அரசு நினைப்பது தவறு. இந்த அணையின் மூலம் 0.6 டி.எம்.சி., தண்ணீரைதான் சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் அணை கட்டுவதைத் தடுக்க போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால், அதே கட்சிகளைச் சேர்ந்த பலர் அணை கட்டுவதற்கு டெண்டர் கேட்கின்றனர். இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அணை கட்டுவதை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அரசியலாக்கி வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X