For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமிக்கு ரூ.1 லட்சம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ராஜா சர் முத்தையா செட்டியாரின் 104-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவு அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமிக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் தமிழறிஞர் விருதினை ஐகோர்ட்டு நீதிபதி ஆ.குலசேகரன் வழங்கினார்.

ராணி சீதை மன்றத்தில் நடந்த இவ்விழாவில் ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை புரவலரும், அண்ணாமலை பல்கலைக்கழக இணை வேந்தருமான எம்.ஏ.எம்.ராமசாமி எம்.பி. வரவேற்றார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆ.குலசேகரன் விழாவுக்கு தலைமை தாங்கி அறக்கட்டளையின் சார்பில் தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமிக்கு ஒரு லட்ச ரூபாய் மற்றும் விருதினை வழங்கினார். வா.செ.குழந்தைசாமியை அறக்கட்டளையின் தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா அறிமுகப்படுத்தினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி. சிட்டிபாபு சிறப்புரையாற்றினார்.

விழாவில் நீதிபதி ஆ.குலசேகரன் பேசியதாவது:

ராஜா முத்தையா செட்டியார் வாழ்க்கை வரலாறு ஒரு சரித்திரம் என்றால் மிகையாகாது. சிதம்பரத்தில் ரூ.25 லட்சம் செலவில் 700 ஏக்கரில் 7 கல்லூரிகளை உருவாக்கியினார் அப்போதே. அது பல்கலைக்கழகமாக விசுவரூபம் எடுத்தது. இந்த பல்கலைக்கழகம் உருவாக சட்டமன்றத்திலேயே ஒரு தனி சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள். அது இந்தியாவிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பெற்றுள்ளது இன்று, என்றார்.

விருது பெற்ற தமிழ் மொழி மேம்பாட்டு வாரிய தலைவர் வா.செ.குழந்தைசாமி பேசியதாவது:

நான் பல விருதுகள் பெற்றிருந்தாலும் இந்த விருதை பெறுவதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். பணிவுடமை, விருந்தோம்பல், மனிதநேயம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் ராஜா முத்தையா செட்டியார்.

இந்தியாவில் முதன்முதலில் ஏற்பட்ட தனியார் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தான். இந்தியாவில் உள்ள 3 பெரிய பல்கலைக்கழகங்களில் இந்த பல்கலைக்கழகமும் ஒன்றாகத் விளங்குகிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு வளமோ, நிதியோ தடையாக இருக்காது. மனித வளம் தடையாக இருந்துவிடுமோ என்ற நிலையில் நாம் இருக்கிறோம்.

இந்தியாவில் 2001-ல் எழுத படிக்க தெரிந்தவர்கள் 65.3 சதவீதம். சீனாவில் 90 சதவீதம். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எந்த தொழிலிலும் பயிற்சி பெறாதவர்களாக இருக்கிறார்கள். இந்த அளவுக்கு புறக்கணித்துவிட்டோமே என்று இப்போது வருந்துகிறார்கள்.

இன்னும் பல்கலைக் கழகங்கள் வேண்டும்

சீனாவில் 5 லட்சம் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. இந்தியாவில் இப்போது 400 பல்கலைக்கழகங்கள் தான் உள்ளன. ஒரு லட்சம் பயிற்சி நிலையங்களாவது இருக்க வேண்டும். உயர் கல்விக்கு செல்பவர்கள் நூற்றுக்கு 10 பேர்தான். இதை 2020-ல் 20 பேராக உயர்த்த வேண்டும். அதற்கு 2015-ல் 1500 பல்கலைக்கழகங்களையாவது உருவாக்க வேண்டும். இதை அரசால் மட்டுமே செய்ய முடியாது. தனியாரும் சேர்ந்துதான் செய்ய வேண்டும்.

எனவே தனியாரின் முயற்சிகளை கட்டணம் அதிகமாக இருந்தாலும் வழிநடத்தி, ஆதரவு தெரிவிக்க வேண்டும். 84 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். இவர்களுக்காக இந்தியா அமெரிக்காவுக்கு கொடுக்கும் அந்நிய செலாவணி ரூ.12 ஆயிரம் கோடி. இதில் பாதி தொகையை இங்கே செலவழித்தால் கூட தரமான கல்வியை உருவாக்க முடியும்.

இந்தியாவின் இன்றைய சூழ்நிலையில் நல்ல முறையில் யார் கல்வி கொடுக்கிறார்களோ அவர்கள் தான் சிறந்த தேசபக்தர்கள். இவ்வகை தேசபக்திக்கு அடிக்கல் நாட்டியவரின் அறக்கட்டளை சார்பில் இவ்விருதை பெறுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன், என்றார் குழந்தைசாமி.

விழாவில் முன்னாள் நீதிபதிகள் பு.ரா.கோகுலகிருஷ்ணன், பி.பாஸ்கரன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராசன், கா.பா.அறவாணன், டி.சி.மோகன், முத்துக்குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X