For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேரு பாதையிலிருந்து விலகிய மன்மோகன்!

By Staff
Google Oneindia Tamil News

Nedumaran
-பழ.நெடுமாறன்

1938ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஸ்பெயின் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார ஆட்சியை நிறுவியிருந்த பிராங்கோவைக் கண்டித்தும், சீனாவின் மீது படையெடுத்து ஜப்பானிய ராணுவம் செய்துவரும் அட்டூழியங்களைக் கண்டித்தும் அந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஸ்பானியப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான திருமதி வாபாசி லோனாரா என்பவரும் ஜவகர்லால் நேரு அவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஐரோப்பாவில் இட்லர், முசோலினி ஆகியோர் தலைமையில் பாசிசம் படர்ந்து கொண்டிருந்த வேளை. அவர்களைப் பின்பற்றி ஸ்பெயின் நாட்டிலும் பிராங்கோ பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவியதற்கு எதிராக ஜனநாயக உணர்வு படைத்தவர்கள் போராடினார்கள்.

ஐரோப்பா முழுவதுமிருந்த ஜனநாயகவாதிகள் இப்போராட்டத்திற்கு ஆதரவாகத் திரண்டார்கள். பிரிட்டனில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளத் தொண்டர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டார்கள். ஜவகர்லால் நேருவின் வருங்கால மருமகனும் இந்திராவின் வருங்காலக் கணவருமான பெரோஸ் காந்தியும் அவர்களில் ஒருவராவார். ஸ்பெயின் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக நடைபெற்ற இப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஆதரவை அளிப்பதற்காக நேரு இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பாரிசிலிலிருந்து வெளிவந்த ரூடி பிராவோ எனும் பத்திரிகைக்கு ஸ்பெயின் போராட்டம் பற்றி உணர்ச்சிகரமான ஒரு நேர்காணலை நேரு அளித்தார்.

ஸ்பெயின் நாட்டு எல்லைக்குச் சென்று அங்கு முகாமிட்டிருந்த போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து ஊக்குவித்தார்.

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நவம்பர் 17ம் தேதி இந்தியா திரும்பிய நேருவுக்கு மும்பையில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உள் நாட்டுப்போரின் விளைவாக அம்மக்கள் உணவு, மருந்து இல்லாமல் படும் துயரம் குறித்து அக்கூட்டத்தில் நேரு உருக்க மாகப் பேசினார்.

அம்மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் திரட்டி அனுப்பி வைக்கும்படி மும்பை வணிகர்களை வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க உணவுப்பொருள்களும் மருந்துப் பொருள்களும் ஒரு கப்பல் நிறைய இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

1939ம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி சீனா சென்ற நேரு 13 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்தார். ஜப்பானியர் படையெடுப்பின் விளைவாக சீரழிந்து கிடந்த சீன மக்களின் துயரங்களைப் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்து திரும்பியவுடன் காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைச் சந்தித்து சீன மக்களின் துயரங்களை விளக்கினார். உடனடியாக காங்கிரஸ் சார்பில் மருத்துவ உதவிக்குழு ஒன்றினை அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டு டாக்டர் கோட்னீஸ் என்பவர் தலைமையில் குழு ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலக்கட்டத்தில்கூட பாதிக்கப்பட்ட மக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஓடோடிச் சென்று அவர்களுக்கு உதவுவதை அன்றைய காங்கிரஸ் கட்சி செய்தது. ஸ்பெயினுக்கும் சீனாவுக்கும் காங்கிரஸ் கட்சி செய்ய முன்வந்த மனித நேய உதவிகளை அன்றைய பிரிட்டிஷ் அரசே தடுக்கவில்லை.

ஆனால் இன்று என்ன நடக்கிறது? காங்கிரஸ் கட்சி பாரம்பரியத்திற்கு இழுக்கு நேரும் வகையில் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் சிங்கள இனவெறியரால் கொன்று குவிக்கப்படுவதைப் பார்த்தும் பாராமுகமாக இருக்கிறது. பசியும் பட்டினியுமாகக் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டிய இந்தியா அவர்களை அழிப்பதற்கு சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும் ஆள் உதவியும் செய்கிறது. இந்திய ராணுவத்தின் துணை தலைமை தளபதியே இதை உறுதி செய்திருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரில் சிங்களப் படைக்கு உதவியாக இந்தியப் படைவீரர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என இந்திய ராணுவத்தின் துணைத் தலைமை தளபதியான மிலன் லலித் குமார் கூறியுள்ளார்.

மண்டபத்தில் இந்து செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் அவ்வப்போது செல்கிறார்கள். சிங்கள ராணுவத்திற்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டு திரும்பி விடுகிறார்கள். இலங்கையில் ராடார் சாதனங்களை இயக்கிய இரண்டு இந்திய ராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. காயமடைந்தவர்கள் ஒருவேளை சிவிலியன்களாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் துணைத் தலைமை தளபதியாக இருக்கும் ஒருவருக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்தும் உலக நாடுகளின் சட்டங்கள் குறித்தும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

வெளிநாடொன்றில் நடைபெறும் போரில் இந்தியாவின் குடிமக்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால் அதற்கான அனுமதியை இந்திய அரசிடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் அவர்கள் சென்றிருப்பார்களேயானால் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராடார் சாதனங்களை இயக்கியவர்கள் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் சிவிலியன்கள். அவர்களாகவே சென்றிருக்கிறார்கள் என்பது உண்மையானால் இந்திய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதுமில்லை என்பதும் உண்மையானால் அதே உரிமை தமிழர்களுக்கும் உண்டு.

இலங்கையில் கொன்று குவிக்கப் படும் தமிழர்களைப் பாதுகாக்க, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் செல்வதையும் இந்திய அரசு தடுக்க முடியாது. இந்திய ராணுவத்தின் துணைத் தலைமை தளபதியின் கூற்று இதற்குத் தான் தமிழர்களைத் தூண்டுகிறது.

கடந்த 30 ஆண்டு காலத்தில் இலங்கையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். சுமார் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி இந்தியா உள்பட உலக நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.

ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து உண்ண உணவோ உறைவிட வசதிகளோ இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ தமிழ்நாட்டு மக்கள் திரட்டிய உணவு மருந்துப் பொருள்களை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுப்பி வைக்க அனுமதி தரக்கூட இந்திய அரசு மறுக்கிறது. தமிழக அரசும் வாய்மூடி மெளனம் சாதிக்கிறது.

இந்தியாவிலுள்ள வேறு எந்த மொழி பேசும் தேசிய இனமும் இப்படியொரு அவலநிலையை இதுவரை சந்தித்தது இல்லை. வங்காளி, பஞ்சாபி, குஜராத்தி, மராட்டி மற்றும் இந்தி மொழி பேசுகிற இனத்து மக்கள் வேறு எந்த நாட்டிலாவது வாழ்ந்து இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக நேர்ந்தால் அதைப் பார்த்துக்கொண்டு மேற்கண்ட மொழி பேசும் இன மக்கள் சும்மா இருந்திருப்பார்களா? இந்திய அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராடி இருப்பார்கள்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமரான நேரு எந்த நாட்டுடனும் ராணுவ உடன்பாடு செய்து கொள்ள மறுத்தார். அமெரிக்க வல்லரசு, நேட்டோ, சீட்டோ என பல்வேறு நாடுகளை ராணுவ ரீதியான கூட்டு உடன்பாடு நாடுகளாக உருவாக்கி சோவியத்து ஒன்றியத்திற்கு எதிராக அணி திரட்டியது. அதைப்போல சோவியத் ஒன்றியமும் தங்களின் தற்காப்புக்காக வார்சா உடன்பாடு நாடுகளின் அணியை உருவாக்கிற்று.

ஆனால் நேரு இந்த ராணுவ கூட்டுக்களைக் கண்டித்தார். அது மட்டுமல்ல புதிதாக விடுதலை பெற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை ஒன்றிணைத்து அணிசேரா நாடுகளின் குழு ஒன்றினை உருவாக்கினார். அவருடைய இந்த தொலைநோக்குப் பார்வையின் விளைவாக மூன்றாம் உலகப் போர் மூளுவது தடுக்கப்பட்டது.

ஆனால் நேருவின் வழி வந்ததாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் மன்மோகன் சிங் அரசு இலங்கையில் தமிழர்களை இனப் படுகொலைக்கு உள்ளாக்கி வரும் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித் தருகிறது.

அன்பு நெறியைப் போதித்த மகாவீரரும், புத்தரும், காந்தியடிகளும் பிறந்த மண்ணிலிருந்து ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. அந்த ஆயுதங்களின் துணை கொண்டு ஈழத் தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டு மீனவர்களையும் சிங்கள வெறியர்கள் கொலை செய்கிறார்கள். நமது குடிமக்கள் நமது எல்லைக்குள்ளேயே படுகொலை செய்யப்படுவதைப் பார்த்த பின்பும் மன்மோகன் அரசுக்கு பதைப்பு வரவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர் அமைப்புகளும் கூட்டாகவும் தனியாகவும் போராட்டங்கள் நடத்திய பிறகுகூட மத்திய அரசு தன்னுடைய தவறைத் திருத்திக் கொள்ள முன் வரவில்லை.

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திற்கும் நேரு பெருமகனாரின் தொலை நோக்கு சிந்தனைக்கும் கொஞ்சமும் தொடர்பற்ற அரசாக மன்மோகன் சிங் அரசு விளங்குகிறது. நேருவின் காலத்தில் சூயஸ் கால்வாய் பிரச்சினையில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் கைகோர்த்து எகிப்துக்கு எதிராக களம் இறங்கியபோது, இப்பிரச்சினையில் உலக நாடுகளின் கருத்தை திரட்டுவதற்காக வி.கே. கிருஷ்ணமேனன் அவர்களை நேரு தனது தூதுவராக அனுப்பினார். அதைப் போல, பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து சிங்கள அரசுடன் பேசுவதற்கு மூத்த ராஜதந்திரியான ஜி. பார்த்தசாரதியை அனுப்பினார்.

நேருவோ இந்திராவோ சர்வதேச பிரச்சினைகளுக்கு ஒருபோதும் அதிகாரிகளை அனுப்பியதில்லை. ஆனால் மன்மோகன் சிங் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் போன்ற அதிகாரிகளை இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண நம்பியிருக்கிறார். அவர்களைத்தான் அனுப்பி வைக்கிறார்.

ராஜதந்திர பார்வையும் தொலைநோக்குச் சிந்தனையும் அறவே இல்லாத இந்த அதிகாரிகள் இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டார்கள். இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட இலங்கையில் எது நடந்தாலும் அது இந்தியாவையும் பாதிக்கும் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் மன்மோகன் சிங் அரசு செயல்படுகிறது.

இந்த அரசின் தவறான அணுகுமுறைகளின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதோடு இந்தியாவுக்கு எதிரான நாடுகள் இலங்கையில் காலூன்றி நிற்கும் அபாயம் உள்ளது. நேருவும் இந்திராவும் சர்வதேச பிரச்சினைகளில் மிகவும் தேர்ந்த ராஜதந்திரிகளை தங்களுக்கு துணையாகக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் அணிசாரா நாடுகளின் தலைமை இந்தியாவைத் தேடிவந்தது.

ஆனால் இன்று சுற்றிச் சுற்றிவரும் செக்குமாடுகளைப் போல குறிப்பிட்ட சிந்தனை வளையத்திற்குள் சிக்கிக் கிடக்கும் அதிகாரிகள் தவறான ஆலோசனைகளை வழங்கி உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையைக் கெடுத்து விட்டார்கள்.

தமிழக மக்களின் கொதிப்புணர்வை இந்திய அரசுக்கு உணர்த்தி சரியான நடவடிக்கை எடுக்கும்படி தூண்ட வேண்டிய தமிழக முதல்வரும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்களும் ஒப்புக்காக ஏதோ பேசுகிறார்களே தவிர உண்மையில் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டார்கள். இவர்களின் இந்த மகத்தான தவறை வரலாறு பதிவு செய்துள்ளது. இன்றைய தலைமுறையும் நாளைய தலைமுறையும் இவர்களை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

நன்றி: தென் செய்தி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X