For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரபுச் செல்வங்களை பாதுகாக்கும் முனைவர் நா.கண்ணன்

By Staff
Google Oneindia Tamil News

Kannan
-முனைவர் மு.இளங்கோவன்

இணையத்தில் உலா வருபவர்களுக்குத் தமிழ்மரபு அறக்கட்டளை என்னும் பெயரும் அவ்வமைப்பு செய்யும் பணியும் நன்கு அறிமுகமாகி இருக்கும். தமிழ் மரபுச்செல்வங்களை அழியாமல் மின்வடிவப்படுத்திப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு தமிழ் மரபு அறக்கட்டளையாகும். இவ்வமைப்பின் சார்பில் TAMIL HERITAGE.ORG என்னும் இணையத் தளம் உள்ளது. இத்தளத்தில் அரிய தமிழ்நூல்கள்,ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், படங்கள், ஒலிவடிவங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகு தழுவிய அமைப்பாக இவ்வமைப்பு செயல்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலர் இத்தளத்திற்குச் செய்திகளை மின்வடிவப்படுத்தி வழங்கினாலும் இதன் மூளையாக இருந்து செயல்படுபவர் முனைவர் நா.கண்ணன் அவர்கள் ஆவார்.

கொரியாவில் இருந்தபடி தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்யும் நா.கண்ணன் அவர்களின் பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பூவணம் என்னும் ஊராகும்.இவ்வூர் சைவ சமய நாயன்மார்களால் பாடல்பெற்ற ஊராக விளங்குவது. இச்சிற்றூரில் வாழ்ந்த நாராயணன், கோகிலம் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். தம் இளமைக் கல்வியைத் தமிழ்வழியில் பயின்றவர். மானாமதுரையில் ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் பள்ளியில் பயின்றவர். பின்னர் திருப்பூவணத்தில் படித்துப் பள்ளியிறுதி வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர். கண்ணனுக்குத் தமிழ் மொழியில் இயல்பிலேயே ஈடுபாடு இருந்தது.

கல்லூரிக் கல்வியை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர். உயிர் அறிவியல் பாடத்தைப் பட்டப் படிப்பிற்கும் முது அறிவியல் பட்டத்திற்கும் படித்தவர். அமொரிக்கன் கல்லூரியின் சூழல் கண்ணனைத் தமிழ்க் கவிதைகளின் பக்கம் இழுத்தது. சாலமன் பாப்பையா நடத்தும் திருவாசகப் பாடத்திலும் பேராசிரியர் நெடுமாறன் அவர்களின் திராவிட இயக்கப் பேச்சிலும் ஈடுபாடு கொண்டவர். கோவையை மையமிட்டு வளர்ந்த வானம்பாடிக் கவிதை இயக்கம் வழி கவிஞர் மீராவின் கவிதைகளில் கண்ணன் ஈடுபாடு கொண்டிருந்தார்.பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது புத்திலக்கியப் படைப்பாளிகளின், திறனாய்வாளர்களின் தொடர்பு அமைந்தது. சிறுகதைகள் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். இதனால் பின்னாளில் கி.இரா, தி.சா.ரா, இந்திரா பார்த்தசாரதி, தீபம் பார்த்தசாரதி, ஆதவன் உள்ளிட்டவர்களின் தொடர்புகிடத்துப் படைப்புகள் அறிமுகமாயின.

கண்ணன் ஜப்பான் நாட்டிற்கு உயர் கல்விக்குச் சென்றார். ஜப்பான் பல்கலைக்கழகத்தின் உதவித் தொகையில் நான்காண்டுகள் ஆய்வுசெய்தார். இவ்வாய்வின் பயனாகத் தொழில் துறைகளில் பயன்படுத்தும் வேதிப்பொருள் சிக்கலுக்கு உரியது எனவும் இதனால் சூழலியல் சீர்கேடு உருவாகிறது எனவும் கண்டுபிடித்தார். இவ்வாய்வை உற்றுநோக்கிய ஜெர்மனி நாட்டினர் அழைக்க,விருந்துப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். KIEL UNIVERSITYயில் பணி. நீண்டநாள் பேராசிரியராகப் பணிபுரிந்து அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றார்.

சிறப்பு அழைப்பின் பெயரில் கொரியாவுக்கு அழைக்கப்பெற்று இப்பொழுது கொரியாவில் ஆசிய பசிபிக் நாடுகளின் கடலாய்வுப் பயிற்சி மையத்தை (ABEC) மேலாண்மை செய்து வருகிறார்.

சூழலியல் சார்ந்த பயிற்சி பெற இவரிடம் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள், சூழலியல் வல்லுநர்கள் வருகின்றனர். ஆண்டிற்கு இரண்டுமுறை 3 வாரப் பயிற்சி தருகிறார். இவ்வகையில் இவரிடம் கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, பெரு, மலேசியா, பர்மா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலர் வந்து பயிற்சி பெறுகின்றனர். இச்சூழலியல் பேரறிவால் உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

உலகப் பயணங்களில் தமிழுக்கு ஆக்கமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். கல்வெட்டு , ஓலைச்சுவடிகள், தமிழின் அரியநூல்கள், பண்பாட்டுகூறுகளை அறிந்து தமிழகத்திற்கு வழங்கியவர். ஜப்பான் நாட்டில் ஆய்வு செய்தபொழுது ஜப்பானிய மொழி பேசும் ஆற்றல் கிடைத்தது. இதனால் ஜப்பானின் கவிதை வடிவமான ஐகூ பற்றி நிறைய அறிந்தார். இவர் கவிஞர் விச்வநாதன் அவர்களின் நூலுக்கென வரைந்த ஐகூ குறித்த முன்னுரையைக் கவிஞர் மீரா ஓம்சக்தி இதழில் வெளியிட்டார்.

இம் முன்னுரைக் கட்டுரை ஜப்பானிய ஐகூ வடிவை விளக்கும் அரிய கட்டுரையாகும் இதனை http://www.angelfire.com/ak/nkannan/haiku.html தளத்தில் காணலாம்.

அடுத்த பக்கம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X