• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி

By Sridhar L
|

Sivathambi
-முனைவர் மு.இளங்கோவன்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டு பெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர். மற்றவர் கா.சிவத்தம்பி. தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள் அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள்.

மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருத மொழி இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி எனவும் இலக்கண, இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கிய மொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது, சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் நிறுவிக்காட்டிச் சங்க நூல்கள் மேற்குலகில் கவனம் பெற உழைத்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி எனும் இருவரும் என்றும் தமிழர்களால் நன்றியுடன் போற்றத்தக்கவர்களே.

க.கைலாசபதி கிரேக்க வீரநிலைக் கவிதைகளுடன் சங்க இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வுசெய்து 1966ல் Tamil Heroic Poetry (தமிழ் வீரநிலைக் கவிதை) என்னும் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கா.சிவத்தம்பி அவர்கள் 1970ல் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (Drama in Ancient Tamil Society) என்னும் தலைப்பில் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவ்விரு ஆய்வேடுகளும் உலக அளவில் அனைவராலும் மதிக்கப்படும் ஆய்வுத்தரத்தன. ஈழத்து இரட்டை அறிஞர்களான இவ்விரு அறிஞர்களுள் கா.சிவத்தம்பியின் வாழ்வையும் இலக்கியப் பணிகளையும் இக்கட்டுரை நினைவுகூர்கிறது.

கா.சிவத்தம்பி இளமை வாழ்க்கை:

கா.சிவத்தம்பி அவர்கள் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் 1932,மே பத்தாம் நாள் பிறந்தவர். பெற்றோர் கார்த்திகேசு, வள்ளியம்மை அவர்கள். தந்தையார் பண்டிதராகவும் சைவப் புலவராகவும் விளங்கியவர். எனவே சிவத்தம்பி அவர்களுக்கு இளமையில் கல்வியார்வம் தழைக்க வாய்ப்பு மிகுதியாக இருந்தது.கரவெட்டி விக்கினேசுவரா கல்லூரியில் தொடக்கக் கல்வியையும், கொழும்பு சாகிராக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றவர். இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(1956), முதுகலைப்(1963) பட்டங்களைப் பெற்றவர்.1970ல் பர்மிங்காம் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வேடு பலதுறைச் செய்திகளை உள்ளடக்கி வெளிவந்த ஆய்வேடாகும்.

தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றி விரிவாக ஆராயும் இவர்தம் ஆய்வேட்டில் கிரேக்க நாடகங்களின் தோற்றம், வளர்ச்சி, தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. அதுபோல் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் கல்வெட்டுகள், நாணயங்கள் உள்ளிட்ட தரவுகளை உட்படுத்தி தம் ஆய்வை சிவத்தம்பி நிகழ்த்தியுள்ளார். எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு ஆய்வுகளை எளிமைப்படுத்தி முனைவர் பட்டம் பெறும் இக்காலச்சூழலில் இவ்வாய்வேட்டின் தரவு தொகுப்பு, வகைப்படுத்தல், ஆய்வு செய்தல் ஆங்கிலத்தில் எழுதுதல் எனப் பல கட்டங்களைத் தாண்டியே இவர் ஆய்வு நிகழ்ந்துள்ளது. தமிழக வரலாறு, சமூக அமைப்பு உள்ளிட்ட பல தகவல்கள் இவ்வாய்வேட்டில் விளக்கப்பட்டுள்ளன.

கா.சிவத்தம்பியின் முனைவர் பட்ட ஆய்வுநூல்:

ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட ஆய்வேடு பத்தாண்டுகளுக்குப் பிறகு திருத்தங்களுடனும் கூடுதல் செய்திகளுடனும் 1980 அளவில் புது நூற்றாண்டுப் புத்தக நிறுவனத்தின் வழியாக வெளிவந்தது. அந்த நூல் தமிழக அரசின் சிறந்த பரிசினையும் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களால் (சிவத்தம்பி அவர்களின் மாணவர் இவர்) மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

சிவத்தம்பியின் ஆய்வேடு வெளிவந்த பிறகு தமிழின் மிகப்பெரிய துறைகளுள் ஒன்றாக இருக்கும் நாடகத்துறை பற்றிய விழிப்புணர்ச்சி ஈழத்தில் ஏற்பட்டது. பாடத்திட்டங்களில் நாடகம் முதன்மை இடம்பெற்றது. பல மாணவர்கள் நடிக்கவும் ஆராயவும் இத்துறையில் புகுந்தனர். தமிழ் நாடகம் இவ்வாய்வேட்டின் வருகைக்குப் பிறகு ஈழத்தில் மறுமலர்ச்சி பெற்றது எனலாம். தமிழகத்து அறிஞர்களும் நாடகத்துறையில் கவனம் செலுத்த இந்த நூல் ஒரு காரணமாக அமைந்தது.

சிவத்தம்பி தொடக்கத்தில் கொழும்பு சாகிராக் கல்லூரியல் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பதினேழு ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் கல்வி நிறுவனங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கல்வி நிறுவனங்களின் அழைப்பின்பேரில் சிறப்புரைகள் வழங்கித் தமிழாய்வுப் புலத்தில் ஆக்கப்பணிகள் புரியும் கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை வியப்பளிக்கிறது. தமிழ்ப் பேராசிரியராகவும், பன்மொழி அறிஞராகவும், கலை விமர்சகராகவும், சிந்தனையாளராகவும், அரசியில் அறிவு நிரம்பியவராகவும் விளங்குபவர்.

கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை:

கா.சிவத்தம்பி அவர்கள் மார்க்சிய நோக்கில் திறனாய்வு செய்பவர் என்பது ஆய்வுலகம் நன்கு அறிந்த ஒன்றாகும். ஆனால் அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதும், நாடக எழுத்தாளர் என்பதும் பல நாடகங்களை எழுதியவர், இயக்கியவர், நடித்தவர் என்பதும் தமிழுலகம் பரவலாக அறியாத ஒன்றாகும். இலங்கையின் நாடக மரபுகளை மீட்டெடுத்த வித்தியானந்தன், சிவத்தம்பியின் பணிகளை ஈழத்து அறிஞருலகம் நன்றியுடன் நினைவு கூர்கிறது.

தமிழ் நாடக வளர்ச்சியில் கா.சிவத்தம்பியின் பங்களிப்பு மிகப்பெரியது என மௌனகுரு குறிப்பிடுவார். கூத்து, நாடக, அரங்கியல் சார்ந்த செய்திகளைப் பாடத் திட்டத்தில் கொண்டு வந்தவர் கா.சிவத்தம்பி அவர்கள்.பல கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்களில் இவர் இடம்பெற்ற பொழுதெல்லாம் இவர் தரமான பாடத்திட்டங்கள் அமைய உதவியுள்ளார். பல்கலைக்கழகப் பணிக் காலத்தில் பல மேடை நாடகங்களில் நடித்தவர். வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இலங்கையர்கோன் எழுதிய 'விதானையார் வீட்டில் ' தொடர் நாடகத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். இவரின் நடிப்பு இவருக்கு நல்ல புகழை ஈட்டித்தந்தது. கைலாசபதியும் இந்நாடகத்தில் நடித்ததாக அறியமுடிகிறது.

நாட்டார் இயல் ஆய்வுகளில் கா.சிவத்தம்பி அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். முல்லைத் தீவில் இவர் ஏற்பாடு செய்திருந்த நாட்டாரியல் விழா அனைவராலும் நினைவு கூரத்தக்கது. நாடகம்,கூத்து இவற்றின் ஊடாகத்தமிழ் மக்களை, தமிழர்களின் பண்பாட்டை அறிய முனைந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இவர் நுண்கலைத் துறைத்தலைவராகப் பணிபுரிந்தபொழுது பல்வேறு நாடக முயற்சிகள் வளர்முகம் கண்டன. யாழில் புதிய நாடக மரபு உருவானது. ஈழத்துப் பகுதியில் நடிக்கப்பெற்ற கூத்துகளின் வழியாக புதிய நாடக மரபுகளைக் கட்டமைக்கும் முயற்சியில் சிவத்தம்பி முன்னின்றார். வன்னிப் பகுதியில் வழக்கத்தில் இருந்த கூத்துகள் உள்ளிட்ட பிற கலைகளை வளர்க்க மாநாடு, கருத்தரங்குகளை நண்பர்களின் துணையுடன் செய்தவர்.

மௌனகுருவின் இராவணேசன் என்னும் புகழ்பெற்ற நாடகம் சிறந்தவடிவம் பெற்றதில் சிவத்தம்பிக்குப் பெரும் பங்கு உள்ளதை மௌனகுரு குறிப்பிடுவார். கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் இடம்பெறும் இராவணனின் பாத்திரப்படைப்பை விளக்கி, இராவணன் பாத்திரத்தைக் கோபம், வெட்கம், ஏளனச் சிரிப்பு இவற்றைக் கொண்டு மிகச்சிறப்பாக வடிவமைக்க சிவத்தம்பி உதவியதை மெளனகுரு நன்றியுடன் நினைவுகூர்வர். கா.சிவத்தம்பி மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதில் வல்லவர். இவர்தம் வகுப்புகள் நான்கு மணி நேரம்வரை நீண்டுவிடுமாம். அவ்வளவு நேரமும் மாணவர்கள் ஆர்வமுடன் அமர்ந்து படித்துள்ளனர்.

தொல்காப்பியம். அகத்திணை மரபுகள், நாடகம் பற்றி பாடம் நடத்துவதில் கா.சிவத்தம்பி அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டாம்.

தமிழ் இலக்கியம், சமய நூல்கள், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின்கலைகளில் நல்ல புலமைபெற்றிருந்த கா.சிவத்தம்பி அவர்கள் இத்துறை சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். இத்துறை சார்ந்து பல இடங்களில் பேசியுள்ளார். இவர் கட்டுரைகளை நூல்களைக் கற்றவர்களும் இவரிடம் நேரடியாகக் கற்றவர்களும் இவர் வழியில் ஆய்வுகளை மேற்கொள்வது ஒன்றே இவரின் அறிவுத் திறனுக்குச் சான்றாக அமையும். இவரின் மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளனர்.

தமிழகத்துப் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களுடன் நல்ல தொடர்பில் உள்ள கா.சிவத்தம்பி அவர்கள் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள், கல்வியளர்கள் இளைஞர்களுடன் நல்ல உறவுகொண்டவர். அவர்களின் நூல்களைக் கற்று நூல்குறித்த சிறப்புகளை எடுத்துரைத்துப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டவர். தமிழகத்தில் நடைபெறும் இசை விழாக்கள், கலை விழாக்களை நன்கு உற்று நோக்கி விமர்சிப்பவர். ஈழத்து அரசியல் எழுச்சியில் இவரின் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

சிவத்தம்பியின் தமிழ்ப்பணிகளை மதிக்கும் முகமாக இவருக்குத் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இலங்கை ஜப்பானிய நட்புறவுக்கழக விருது பெற்றவர். 2000ல் இவர் பெயர் உலக அளவிலான புலமைப்படியலில் இடம்பெற்றுள்ளது. பல அமைப்புகள் இவருக்குப் பரிசில்கள் பாராட்டுகள் வழங்கியுள்ளன. கா.சிவத்தம்பி அவர்களின் எழுபத்தைந்து அகவை நிறைவையட்டி அவரின் அன்பிற்கு உரியவர்கள் பல விழாக்களை எடுத்துக் கொண்டாடியும் அவர்களின் அன்பு வெளிப்படும்படி நூல்கள் வெளியிட்டும் கருத்தரங்குகள் நிகழ்த்தியும் அவரின் தமிழ்ப் பணிகளை மதித்தனர்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுடன் பழகியவர்கள் பயின்றவர்களின் பங்களிப்புடன் கானா பிரபா அவர்கள் பேராசிரியரின் பலதுறைப் பங்களிப்புகளை ஒலிப்பதிவு செய்து வானொலி வழியும் இணையம் வழியும் உலகம் முழுவதும் பரப்பியுள்ளது மற்றவர்களுக்கு அமையாத பெருஞ்சிறப்பாகும். இவ் வானொலி, இணைய ஒலிப்பதிவில் பேராசிரியரின் மாணவர்கள், அன்பிற்குரியவர்களான அம்மன்கிளி முருகதாசு, மௌனகுரு, பாலசுகுமார், வீ.அரசு ஆகியோரின் உரைகள் பேராசிரியரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.

கா.சிவத்தம்பி அவர்களின் பணிகள் செப்பமுடன் நடைபெறுவதற்குக் காரணம் அவரின் துணைவியார் ரூபவதி நடராசன் அவர்களாவார். பேராசிரியரின் பணிகளுக்கு ஒல்லும் வகையிலெல்லாம் உதவியது இவரே. எழுத்துப்பணிகள், ஆய்வுப் பணிகள், குடும்பப் பொறுப்புகளில் அம்மையார் பல வகையில் துணை நின்றவர்.இவர்களுக்கு கிரித்திகா, தாரிணி, வர்த்தினி என்னும் மூன்று மக்கள் செல்வங்களாவர். பேராசிரியரின் முதல் நூல் மார்க்கண்டன் என்பதாகும்.

தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்(1966) என்ற இவரின் நூல் அனைவராலும் பேசப்படும் ஒன்றாகும்.தமிழ்மொழி, இலக்கியம்,கவின்கலைகள், சமூகம், மானுடவியல், அரசியல் சார்ந்த பல நூல்களை மார்க்சியப் பார்வையில் எழுதியுள்ள சிவத்தம்பி அவர்கள் தமிழ் ஆராய்ச்சி உலகில் புதிய வீச்சுகளை வழங்கியவர் எனில் மிகையன்று.இவர்தம் ஆய்வுப் போக்குகளைத் தாங்கி அடுத்த தலைமுறை ஆய்வாளர்கள் சிவத்தம்பியின் பணிகளைத் தமிழுலகில் நிலைநாட்டுவர்.

கா.சிவத்தம்பி அவர்களின் நூல்களுள் சில:

1.இலங்கைதமிழர் -யார்,எவர்?

2யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு

3.தமிழில் இலக்கியவரலாறு

4.இலக்கணமும் சமூக உறவுகளும்

5.மதமும் கவிதையும்

6.தமிழ் கற்பித்தலில் உன்னதம்

7.தமிழ்ப்பண்பாட்டில் சினிமா

8.தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி

9.ஈழத்தில் தமிழ் இலக்கியம்

10.யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல்

11.சுவாமி விபுலானநந்தரின் சிந்தனைநெறிகள்

12.திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு

13.தமிழ் கற்பித்தல்

14.தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா(பாட விமர்சனவியல் நோக்கு)

15.தமிழின் கவிதையியல்

16.தொல்காப்பியமும் கவிதையும்

17.உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.1851-கி.பி.2000)

18.சசியாக்கதை

19.யாழ்ப்பாணம் சமூகம்-பண்பாடு,கருத்துநிலை

நனி நன்றி:

தமிழ் ஓசை நாளேடு,களஞ்சியம், அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் வரிசை

தட்ஸ்தமிழ் நன்றி: http://muelangovan.blogspot.com/

-முனைவர் மு.இளங்கோவன் (muelangovan@gmail.com)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more