For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகேஷ் இறக்கவில்லை - தமிழ் சினிமாவின் சிரிப்பு இறந்து விட்டது வைரமுத்து

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் நாகேஷ் மறையவில்லை. தமிழ் சினிமாவின் சிரிப்புதான் இறந்து போய் விட்டது என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார்.

மறைந்த நகைச்சுவைத் திலகம் நாகேஷுக்கு திரையுலகினர் நேற்று பெரும் திரளாக அவரது இல்லத்திற்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நாகேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறுகையில், இந்திய திரையுலகில் நாகேஷ் சாரின் பங்கு மிகப்பெரியது. சினிமாவில் அவர் உழைத்தது போல் யாரும் உழைத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு இரவு-பகலாக நடித்தவர்.

அவர், காமெடியன் மட்டுமல்ல. மிகப்பெரிய குணச்சித்ர நடிகர். அவருடைய இழப்பு, ஈடு செய்ய முடியாதது.

அவருடைய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என்றார்.

கமல்ஹாசன் கூறுகையில், நாகேஷ் சாரை பற்றி சிரித்து பேசாத நாட்களே கிடையாது. இன்று அந்த நாள் இல்லை. தமிழ் திரையுலகுக்கும், மக்களுக்கும் அவர் செய்த சேவை, மகத்தானது. எல்லோரையும் சிரிக்க வைத்தார்.

எனக்கு அவர் மூத்தவர். நண்பர். தனிப்பட்ட முறையில், எனக்கு மிகப்பெரிய இழப்பு. நாகேசை, இந்தி நடிகர் மெகமூத் குருவாக நினைத்து, காலில் விழுந்து வணங்கியதை நான் பார்த்து இருக்கிறேன்.

எனக்கும் அவர் குருதான். கலைவாணருக்குப்பின், தமிழ் திரையுலகில் இருந்த மிகப்பெரிய நகைச்சுவை கலைஞர், நாகேஷ்.

இப்போது அவர் படுத்திருப்பது போன்ற வேடத்தில் கூட, என் படத்தில் நடித்து இருக்கிறார். சிவாஜியிடம் கற்றுக்கொண்டது போல் நாகேசிடமும் நான் நடிப்பை கற்றுக்கொண்டேன் என்று கண் கலங்கியபடி கமல் கூறினார்.

நகைச்சுவை நடிகரும், எழுத்தாளருமான சோ கூறியதாவதுஎம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு பெரும் நடிகர்கள், நாகேசின் வருகைக்காக காத்திருப்பார்கள். ஒரு படத்தில் நாகேஷ் 2 மணி நேரம்தான் நடிப்பார். அந்த அளவுக்கு அவர், பிஸியாக இருந்தார். நகைச்சுவை நடிப்புக்கு இலக்கணம், நாகேஷ்தான் என்றார்.

நாகேசுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர், மனோரமா. நாகேஷ் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், மனோரமா கதறி அழுதார். அவர் கண்ணீர்விட்டு அழுதபடி, நாகேஷ் வீட்டுக்கு வந்தார். நாகேஷ் உடலைப் பார்த்து தேம்பி தேம்பி அழுதார்.

அவருக்கு, கமலஹாசன் ஆறுதல் கூறினார்.

மனோரமா கூறுகையில், நாகேசுக்கு இணை, நாகேஷ்தான். அவர் மாதிரி நடிக்க இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்.

அவருடன் சர்வர் சுந்தரம், அனுபவி ராஜா அனுபவி உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறேன். அவருடைய மறைவு, தமிழ் பட உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறுகையில், எல்லோரையும் சிரிக்க வைத்த மாபெரும் நடிகர், நாகேஷ். இன்று எல்லோரையும் அழ வைத்துவிட்டு போய்விட்டார்.

எதிர்நீச்சல் படத்தில் நடித்த மாடிப்படி மாதுவும், திருவிளையாடல் படத்தில் நடித்த தர்மியும், தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்த வைத்தியும் நாம் என்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.

நாகேசின் மறைவு, கலையுலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றார்.

நடிகர் சூர்யா கூறுகையில், இன்று தமிழக சினிமாவுக்கு ஒரு துக்க நாளாகும். எங்கள் குடும்ப இனிய நண்பர் அவர். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றார்.

கவிஞர் வைரமுத்து கூறுகையில், நாகேஷ் இறந்துபோகவில்லை. தமிழ் சினிமாவின் சிரிப்பு தான் இறந்து போய்விட்டது என்று குறிப்பிட்டார்.

நாகேஷை வைரமாக பட்டை தீட்டிய இயக்குநர் கே.பாலச்சந்தர் கூறுகையில், நாகேஷ் ஒரு சகாப்தம். அவருடைய இழப்பு தமிழக சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும். மேடை நாடகம் முதல் நான் அவருடன் இருந்ததை மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.

நான் அவர் மூலம் சிந்தித்தேன். அவர் என் வழியில் நடித்தார். எனக்கு பத்மஸ்ரீ விருது' கொடுத்ததுபோல், அவருக்கு கடைசிவரை கொடுக்காதது எனக்கு மிகப்பெரிய வருத்தமாகும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X