For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சியில் நடந்த ”தமிழ்த் தேசியம் மாநாடு”!

By Staff
Google Oneindia Tamil News

தமிழினத்தின் தேசிய எழுச்சியை ஒரு எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஈழ உணர்வாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

ஓவியங்கள் மற்றும் புகைப்படக் காட்சி:

பாவலர் சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது. அடுத்து ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடந்தது. இதை தணிக்கை அறிஞர் மு.குமரசாமி தொடங்கி வைத்தார்.

இதில் ஓவியர்கள் கவிபாஸ்கர், ஆவுடி கண்ணன், திருமலை, க.ஆனந்த் ஆகியோரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கலைஞர் நியாஸ் அகமது ஆகியோரின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஈழத் தமிழர் படும் அவலங்களை காட்சிப்படுத்தும் படங்கள் அரங்கம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசிய அரங்கு:

அடுத்து தமிழ்த் தேசிய அரங்கு என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கினார்.

பின்னர் "உலகமயமும் தமிழ்த் தேசியமும்" என்ற தலைப்பில் பேசிய ம.செந்தமிழன், ஈழத்தில் நடந்த இன அழிவிற்கு உலக நாடுகள் எப்படி காரணமாக விளங்கின என்பது பற்றியும் உலக நாடுகளின் சதிகள் பற்றியும் விளக்கினார்.

பின்னர், "மொழிக் கொள்கை" குறித்துப் பேசிய முனைவர் அரசேந்திரன், தமிழ்த் தேசியத்தின் மொழிக் கொள்கை ஒரு மொழிக் கொள்கையே என்றும் இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவை மோசடிகள் என்றார்.

அதன் பின்னர், மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமன் "இழந்த நில, நீர் உரிமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கருப்புக் குரல் நாடகம்:

பிற்பகலில் தமிழீழத் திரைப்பட உதவி இயக்குநர்கள் அமைப்பு நடத்திய கருப்புக்குரல் கலை நிகழ்வு நடைபெற்றது. ஓவியர் புகழேந்தி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். பாடலுடன் தொடங்கிய இந்நாடகத்தில் அரசியல்வாதிகளின் முகத்திரைக் கிழிக்கும் வண்ணம் காட்சியமைப்புகள் இருந்தன.

நாடகத்தை ஐந்து கோவிலான் இயக்கியிருந்தார். வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்களின் நிலையை காட்சிப்படுத்தியிருந்த விதம் பார்வையாளர்களை துக்கத்தில் ஆழ்த்தியது.

கலை நிகழ்ச்சி:

இதன் பின்னர், அரியமங்கலம் லெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி நடந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “சங்கே முழங்கு" பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர்.

பாவீச்சு:

இந்நிகழ்விற்குப் பின்னர், பல்வேறு கவிஞர்கள் பங்கு கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வை “திருக்குறள்" முருகானந்தம் தொடங்கி வைத்தார். இதில் பாவலர்கள் தமிழேந்தி, கவித்துவன், கவிபாஸ்கர் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

படத்திறப்பு:

அதன் பின்னர், அண்மையில் காலமான புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் திருவுருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். திருமுருகனாரின் சிறப்பான குணங்களையும் தமிழ் இலக்கணத்தில் அவரது அறிவாற்றலையும் விளக்கி அவர் பேசினார். குடந்தைத் தமிழ்க் கழகத்தின் அமைப்பாளர் சா.பேகன் படத்தை திறந்து வைத்து உரை நல்கினார்.

இந்நிகழ்விற்குப் பின், போராட்டம் நடத்தி சிறைக்கு சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி சிறப்பித்தார்.

தீர்மானங்கள் முன்மொழிவு:

மாநாட்டுத் தீர்மானங்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் குழ.பால்ராசு படித்தார். முதல் தீர்மானத்தை த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து படித்தார். இரண்டாம் தீர்மானத்தை மதுரை மாவட்டச் செயலாளர் ஆனந்தன் வாசித்தார். மூன்றாம் தீர்மானத்தை சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் கு.சிவப்பிரகாசம் வாசித்தார். தீர்மானங்கள் பலத்த கருவொலியுடன் நிறைவேற்றப்பட்டன.

“தமிழீழ அரங்கு" - கருத்தரங்கம்:

இதன் பின்னர், தமிழீழப் பிரச்சினை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு “இப்படிக்கு" இதழின் ஆசிரியர் வீ.ந.சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

இதன் பின்னர், "ஈழத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் க.அருணபாரதி பேசினார். "தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலே ஈழத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்கும் உதவும் கருத்தியல்" என்பதை சாரமாகக் கொண்டு அவரது பேச்சு அமைந்திருந்தது.

“இந்தியமும் ஈழமும்" என்ற தலைப்பில் வழக்கறிஞர் த.பானுமதி அவர்கள் உரைநல்கினார்.“ஈழமும் உலகநாடுகளும்" என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் தோழர் கண.குறிஞ்சி ஈழத்தில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வாழ்நிலையை பற்றியும், உலக நாடுகள் ஈழப்பிரிச்சினையில் அக்கறை கொள்ளாதது பற்றியும் கருத்துரையாற்றினார்.

நிறைவரங்கம்:

மாலை 7 மணியளவில் நிறைவரங்கம் தொடங்கியது. இந்நிகழ்விற்கு பாவலர் பரணர் தலைமை தாங்கினார்.

தமிழக இளைஞர் முன்ணனி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை தமிழ்த் தேசியமே இனி எதிர்கால வரலாற்ரைறத் தீர்மானிக்கும் என்று பேசினார்.

லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத் தலைவரும், மார்க்சிய எழுத்தாளருமான அமரந்தா ஈழப்பிரச்சினையில் தவறான முடிவெடுத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அது குறித்து நடந்த கலந்துரையாடல்களைப் பற்றி பேசினார். மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா தமிழ்த் தேசியத்தில் பெண்களின் பங்கு குறித்து விளக்கிப் பேசினார்.

சிறப்புரையாக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி உரையாற்றினார். பின்னர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு தமிழ்த் தேசியம் சாத்தியமே என்ற சாரத்தில் உரை நிகழ்த்தி சிறப்பித்தார்.

மாநாட்டின் நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றினார். தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி கூறினார்.

மாநாட்டு ஏற்பாடுகளை திருச்சி மாநகர த.தே.பொ.க. அமைப்பாளர் தோழர் கவித்துவன் மற்றும் திருச்சி மாநகர தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் தோழர் இராசாரகுநாதன், தி.மா.சரவணன், பி.ரெ.அரசெழிலன் உள்ளிட்ட பலரும் முன்னின்று சிறப்புற செய்திருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X