For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரித்து உலகத் தமிழர் பேரமைப்பு தீர்மானம்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர் ஈழத் தமிழர்களின் வாழ்வின் ஒளி வட்டுக்கோட்டைத் தீர்மானமே என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் தஞ்சையில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பின் 7வது ஆண்டு நிறைவு விழாவில் இயற்றப்பட்டது.

உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாவது ஆண்டு நிறைவு மாநாடு டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் தமிழரசி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

மாநாட்டிற்கு பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். வை.கோ., புலவர் காசி ஆனந்தன், நல்லக்கண்ணு, மற்றும் பல கட்சி முதன்மையானவர்கள், பேராசிரியர்கள், வெளிநாட்டுத் தமிழர்கள், ஈழத்தினர், என்று பல்லாயிரம் பேர் இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் முகப்பு வாயிலில் முள்ளிவாய்க்காலிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணானது ஒரு கண்ணடிப் பேழையில் வைக்கப்பட்டு மாலைகளால் வீர வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.

முதல்நாள் மாநாட்டில் காலை நேரத்தில் சுமார் 1,500 பேராக இருந்த பார்வையாளர்கள் அன்று இரவில் 4,000 பேராக பெருகினர். இரண்டாம் நாள் பகலில் சுமார் 3,000 பேர் இருந்தனர். அன்று இரவில் 6,000 க்கும் அதிகமான பேர் மாநாட்டரங்கம் முழுதும் நிறைந்திருந்தனர்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரங்கத்தை சுற்றிலும் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை கவனித்தனர். இடையில் வந்து வந்து செல்வோர் தொகையை தோராயமாக கூட்டிக் கழித்து ஒவ்வொரு நாளிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்ற மாநாடாக இது நடந்தது.

இந்த மாநாட்டின் போதே அதே நாட்களில் தஞ்சை நகரில் மேலும் இரண்டு 'வேறு' மாநாடுகள் நடைபெற்றன. இருப்பினும் இந்த மாநாட்டில் பங்கேற்பாளர்கள் உட்கார இடமில்லாத அளவுக்கு நின்று கொண்டு பங்கேற்றது துரோகிகளுக்கு பெருத்த அதிர்ச்சியாகத்தானிருக்கும்.

காலத்தின் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த மாநாட்டின் இரண்டாம் நாளன்று மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை வருமாறு:

1) இரங்கல்

அணமையில் இயற்கை எய்திய தமிழறிவர் வ.ஐ.சுப்பிரமணியன், தமிழ் சிலபலு, மருத்துவர் இந்திர குமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் முதலில் நிறைவேறியது. தீர்மான வரிகள் படிக்கப்பட்டதும் அனைவரு ம் எழுந்து நின்று ஒருமணித்துளி அக வணக்கம் செலுத்தினர்.

2) உலகத் தமிழர் கடமை

மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டியது இன்று உலகத் தமிழர்களின் கடமையாக உள்ளது.

நாள் தோறும் தமிழ்மக்கள் சிங்கள இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் வாழ்வு அவலக் காடக இருக்கிறது. அடிப்படை மனித உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. அறவழியிலும், மற வழியிலும் போராடி இரண்டு லட்சம் பேர் இறந்தனர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஏதிலிகளாயினர். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர் 5 லட்சமாயினர்.

தாய்மண்ணில் கலாசார மாற்றம் வேகமாக புகுத்தப்பட்டு வருகிறது. தமிழர் அடையாளங்கள், கோவில்கள், ஊர்கள் அழிக்கப்பட்டு சிங்கள அடையாளங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இவை யாவும் சிங்களப் பேரினவாத அரசு இழைக்கும் கடும் குற்றங்களாகும்.

அன்று இரண்டாம் உலகப்போரில் இரண்டு லட்சம் ஸ்லாவியர்கள் கொல்லப்பட்டது பற்றி ஆராய அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் குற்றவாளிகளை அம்பலப்படுத்தின. அதுபோல சிங்களப் பேரினவாத குற்றவாளிகளையும் அம்பலப்படுத்தி தண்டிக்க வேண்டும்.

இதற்கு உலக நாடுகள் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போர் முடிந்த 90 நாளில் இலங்கையரசின் மீது குற்றம்சுமத்தி ஐக்கிய நாட்டவை தீர்மானம் கொணர்ந்தது. இந்தியா அதைத் தோற்கடித்து இலங்கையைக் காப்பாற்றியது. இதனை நாம் முறியடிக்க வேண்டும்.

ஈழத்தமிழர்கள் அளப்பரிய தியாகம் செய்திருக்கின்றனர். உலகத் தமிழர்களாகிய நாம் அணியமாகி அவர்களுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது. பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக ஏற்பட்டிருக்கும் இன்றைய பின்னடைவு தற்காலிகமானது என்றும் இதனை சரிசெய்ய அனைத்து ஜனநாயக ஆற்றல்களையும் இம்மாநாடு அழைக்கிறது.

3) வழிகாட்டும் வட்டுக்கோட்டை

ஈழத்தமிழர்களின் வாழ்வின் ஒளி வட்டுக்கோட்டைத் தீர்மானமே என்பதை இம்மாநாடு அங்கீகரிக்கிறது. 1976-ல் தந்தை செல்வா தலைமையில் நிறைவேறிய இத்தீர்மானம் ஈழமக்களின் ஏகமனதான ஆதரவை பெற்றுள்ளது. இதனையொட்டியே ஆயுதப்போர் தொடங்கியது. இப்போரில் செலுத்தப்பட்ட ஈகையின் பின்னே ஈழமக்களின் உறுதி உள்ளது. எனவே வட்டுக்கோட்டை தீர்மானம் செயல் வடிவமெடுக்க அனைத்து தமிக்ழர்களும் உறுதிபூண்டு செயல்பட இம்மாநாடு அழைக்கிறது.

இம்மூன்று தீர்மானங்களும் படிக்கப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டது.

அப்போது மாநாட்டரங்கிலிருந்த சுமார் 6,000 பேர் விண்ணதிர கைத்தட்டலோசை எழுப்பி தீர்மானங்களை வரவேற்று அதன்வழி செயல்பட உறுதிபூண்டனர்.

நன்றி:

முனைவர் மு.இளங்கோவன்
நிலவரசு கண்ணன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X