நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருதுக்கு மயிலை பாலு தேர்வு
கோவை: நல்லி- திசை எட்டும் மொழிபெயர்ப்பு - 2010-ம் ஆண்டிற்கான மொழியாக்க விருதிற்கு தீக்கதிர் ஆசிரியர் மயிலை பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை கேரள கிளப்பில் நல்லி திசை எட்டும் காலாண்டிதழ் ஆசிரியர் குறிஞ்சிவேலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருதிற்கு நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள படைப்பாளிகளில் பலர் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளனர்.
படைப்புகளை தமிழிலிருந்து இதர மொழிகளுக்கும், இதர மொழிப் படைப்புக்களை தமிழுக்கும் மொழி பெய்ர்ப்பவர்களுக்குத் தான் இந்த விருதுகளை வழங்கி வருகின்றோம்.
வாழ்நாள் சாதனையாளர்களாக தேர்ந்தெடுக்கப்படும் இருவருக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசும், பாராட்டிதழும் வழங்கப்படும். பிற படைப்பாளிகளுக்கு ரூ. 10,000 ரொக்கமும், பாராட்டிதழும் வழங்கப்படும்.
இந்தாண்டிற்கான விருது வழங்கும் விழா பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் வரும் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். அதற்கு முன்பு காலை 10 மணி முதல் படைப்பாளிகளுடன் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறும்.
சாதனையாளர் விருதிற்கு மயிலை பாலுவை ( தீக்கதிர் செய்தி ஆசிரியர்) தேர்வு செய்துள்ளோம்.
ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழி பெயர்ப்பு விருதுகள் பெறுபவர்களில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு என்ற ஜான் பெர்க்கின்ஸின் நூலை மொழி பெயர்த்த எழுத்தாளர் அசோகன் முத்துச்சாமியும் ஒருவர் என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, கோவை நல்லி சில்க்ஸ் மேலாளர் டாக்டர் நடராஜன், மாத்ருபூமி நிர்வாகி விஜயக்குமார் குன்னிசேரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.