சென்னையின் வளர்ச்சி வரலாற்றைக் கூறும் கண்காட்சி
சென்னை: சென்னையின் பரிநாம வளர்ச்சியை எடுத்துரைக்கும் வகையில் கண்காட்சி ஒன்று சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சிங்காரச் சென்னை 371 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தான் தோற்றுவிக்கப்பட்டது.
கிழக்கிந்திய நிறுவனம் என்ற வணிக நிறுவனத்தின் மூலம் இந்தியாவிற்கு வாணிபம் செய்ய வந்த வெள்ளையர்கள் நாட்டையே ஆக்கிரமித்துக் கொண்டனர். அவர்கள் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மதராஸ் துறைமுகத்திற்கு அருகில் உள்ள மீனவ கிராமங்களை ஆண்ட குறுநில மன்னர் சென்னப்பநாயக்கரின் வாரிசுகளிடம் இருந்து பெரும் நிலப்பகுதியை வாங்கினார்கள்.
அந்த பகுதிக்கு மதராசப்பட்டினம் என்று பெயரிட்டனர். சென்னை மாநகரை அமைக்க நிலம் கொடுத்த சென்னப்பநாயக்கரின் நினைவாகத்தான் இந்த நகருக்கு சென்னை என்று பெயர் சூட்டப்பட்டது.
தென்னிந்தியாவிலும், வங்காளத்திலும் வெள்ளையர் ஆட்சியை நிறுவிய ராபர்ட் கிளைவ்வின் திருமணம் மதராசபட்டினத்தில் தான் நடந்தது. சென்னை அந்த காலத்திலேயே முக்கிய நகரமாகத் திகழ்ந்துள்ளது.
சென்னை தினத்தை கொண்டாடும் பொருட்டு சென்னை நாணயவியல் கழகத்தலைவரான வைத்திய நாதன் தனது சேகரிப்புகளை வைத்து கண்காட்சி நடத்துகிறார். இந்த கண்காட்சி மைலாப்பூர் அஷ்விதா ஆர்ட் கேலரியில் நடந்துக் கொண்டிருக்கிறது.
இதில் பல அரிய புகைப்படங்கள், பழமையான செய்தித்தாள்கள், 1760 முதல் 1947-ம் ஆண்டு வரை சென்னையை ஆண்டவர்கள் எழுதிய கடிதங்கள், குறிப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கடந்த 1760-ம் ஆண்டு கவர்னராக இருந்த ராபர்ட் கிளைவ் எழுதிய கடிதம் பத்திரிகையில் வெளிவந்தது. அந்த பத்திரிக்கை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
1783-ம் ஆண்டு திப்பு சுல்தான் சரண் அடைந்தது பற்றி அப்போதைய கவர்னர் ஜெனரல் கார்ன்வாலே கிழக்கிந்திய கம்பெனிக்கு எழுதிய கடிதம் உள்ளது.
முகலாய ஆட்சியின் கடைசி மன்னரான பகதூர்ஷா ஷபார் 1857-ம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி எழுதிய கடிதம் கூட உள்ளது. 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததை சென்னையில் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது குறித்த செய்தி வெளிவந்த பத்திரிக்கையின் பிரதி வைக்கப்பட்டுள்ளது.
முதன் முதலாக அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் அணியின் புகைப்படம் வெளியான பத்திரிகை உள்ளது.
சென்னைக்கு விஜயம் செய்துள்ள வி.ஐ.பி.க்கள், கடிதம் எழுதிய அரசியல் தலைவர்களின் ஆட்டோகிராப்புகளும் உள்ளது.
விக்டோரியா மகாராணி 1860-ம் ஆண்டு எழுதிய கடிதம், ஐந்தாவது ஜார்ஜ் மன்னர் எழுதிய கடிதம், மகாத்மா காந்தி, நேரு, சர்.சி.வி.ராமன், ராஜாஜி, ராதாகிருஷ்ணன், காமராஜர், பில் கிளிண்டன் ஆகியோர் எழுதிய கடிதங்களும், ஆட்டோகிராப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.