For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கொல்லன் பட்டறையில் ஊசி'-கொச்சியைக் கலக்கும் தமிழ் டீ!

By Staff
Google Oneindia Tamil News

கொச்சி: நிலவில் போய் பார்த்தால் அங்கும் ஒரு நாயர் டீக் கடை இருக்கும் என்று ஹாஸ்யமாக கூறுவார்கள். அந்த அளவுக்கு இந்தியாவின் எந்தப் பகுதியில் போய் பார்த்தாலும் ஒரு மலையாளியின் டீக் கடை இல்லாமல் போகாது. ஆனால் மலையாளிகளுக்கே டீ போட்டுக் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் - கொச்சியில்.

இந்த டீக் கடை நிரந்தரமான கடை இல்லை. மாறாக நடமாடும் டீக் கடையாக நடத்தி வருகிறார்கள் தமிழர்கள். ஒரு சைக்கிள், ஒரு டீ கேன், முன்பக்க ஹேன்டில் பாரில் ஒரு பை, அதில் யூஸ் அன்ட் த்ரோ டீ கோப்பைகள். அவ்வுளவுதான் இந்த டீக்கடையின் பொருட்கள். ஆனால் இந்த சிறு வியாபாரிகள் தரும் டீக்கு கொச்சியில் பலரும் அடிமையாகிக் கிடக்கிறார்களாம்.

ஜஸ்ட் நான்கு ரூபாய்க்கு இந்த டீயை வி்ற்கிறார்கள். ஆனால் அத்தனை டேஸ்ட் ஆக உள்ளது என்று சப்புக் கொட்டுகிறார்கள் டீயை வாங்கிச் சாப்பிட்டு ஆனந்தித்த மலையாளிகள்.

இந்த நடமாடும் டீக் கடைகள் கொச்சியில் ரொம்பப் பிரபலம். எங்கு பார்த்தாலும் இந்த சைக்கிள் டீ கடைகளைப் பார்க்க முடியும்.

இதுகுறித்து பனம்பிள்ளி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பைஜு தாமஸ் என்பவர் கூறுகையில், இந்த டீயும், காபியும் ரொம்ப டேஸ்ட்டாக உள்ளது. நான்கு ரூபாய்க்கு ஒரு கோப்பை தருகிறார்கள்.

சிலர் ரெடிமேடாக டீயைப் போட்டே கொண்டு வந்து விடுகின்றனர். சிலர் பால், டீ டிகாக்ஷன் ஆகியவற்றை தனித் தனியாக கொண்டு வந்து நமது விருப்பத்திற்கேற்ப கலந்து தருகிறார்கள்.

காபி வேண்டும் என்றால் இன்ஸ்டன்ட் காபி பவுடருடன் அதற்கும் தயாராக வருகிறார்கள் இந்த வியாபாரிகள். வாடிக்கையாளர்களின் விருப்பம், சுவைக்கேற்ப டீ, காபியைத் தருவதுதான் இவர்களின் சிறப்பம்சம் என்றார்.

இந்த டீ வியாபாரிகள் அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாம். அவர்களில் சுப்பையா என்பவர் பனம்பிள்ள நகர் பகுதியில் ஒரு ரவுண்டு அடித்து டீ விற்கிறார். கண்ணன் என்பவர் தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலையைக் கலக்குகிறார்.

பைஜு தொடர்ந்து கூறுகையில், எங்களது பகுதிக்கு இரண்டு பேர் வருகிறார்கள். ஒருவர் காலை 10 மணிக்கும், பிற்பகல் 2.45 மணிக்கும் வருகிறார். இன்னொருவர் 11 மணிக்கும் மாலை 5 மணிக்கும் வருகிறார் என்றார்.

நடமாடும் டீக் கடை அதிபரான கண்ணன் கூறுகையில், அதிகாலையிலேயே எழுந்து விடுவேன். டீ தயாரிப்புப் பணிகளைத் தொடங்கி விடுவேன். ஒரு நாளைக்கு 300 முதல் 400 கோப்பை வரை விற்பனையாகும். சில நேரம் குறையலாம், சில நேரம் கூடலாம். ஆனால் இந்த அளவுக்குள் கண்டிப்பாக டீ விற்பனையாகும்.

தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலை முழுவதும் நான்தான் செல்கிறேன். முதலுக்கு மோசமில்லாமல் தொழில் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

சிலர் 600 முதல் 800 கோப்பை வரை விற்று விடுவார்களாம். இந்த டீ விற்பனை பிசினஸ் சிறப்பாக போகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் - விட்டில்லா என்ற பகுதியில் கண்ணன் வீடு ஒன்றை வாங்கியுள்ளதே சிறந்த சாட்சி.

கொச்சியில் நடமாடும் டீ பிசினஸ் என்றில்லாமல் பல்வேறு உணவு தொடர்பான தொழில்களையும் தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் இங்கு ஹோட்டல்களில் பணியாற்ற வருகிறார்கள். அங்கு தொழில் கற்றுக் கொண்ட பின்னர் தாங்களே சுயமாக தொழில் தொடங்கி விடுகிறார்கள்.

இவர்களின் வாயிலிருந்து வரும் மலையாள பாஷை அவ்வளவு சரளமாக இருக்கிறது- மலையாளிகளைப் போலவே பக்காவாக மலையாளம் பேசுகிறார்கள்.

நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி, அவற்றை முதலாகப் போட்டு தொழிலைத் தொடங்கி விடுகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது ரூ. 500 பார்த்து விடுகிறார்கள்.

மிக மிக சிக்கணமாக செலவு செய்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். வாங்கிய கடனை மிகச் சரியாக திருப்பித் தருகிறார்கள். எந்தவித பித்தலாட்டமோ, மோசடியோ, கலப்படமோ செய்வதில்லை. இதனால் இவர்களுக்கு கடன் தர நிதி நிறுவனங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனவாம். கஸ்டமர்களிடமும் படு நட்போடு பழகுவதால் இவர்களுக்கென்று தனி ரசிகர் கூட்டமும் உள்ளது.

இவர்களில் சிலர் தற்போது வேறு தொழில்களிலும் நாட்டம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம். முன்பு டீ பிசினஸில் பிசியாக இருந்த சுரேஷ் என்பவர் தற்போது தம்மனம் என்ற இடத்தில் ஒரு ஜவுளிக் கடையை திறந்துள்ளார்.

கொச்சி முழுவதும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நடமாடும் டீ வியாபாரிகள் உள்ளனராம்.

இத்தனைக்கும் கடந்த 4 ஆண்டுகளில்தான் இந்த நடமாடும் டீ பிசினஸ் கொச்சியில் களை கட்டியுள்ளதாம். இது விரைவில் மிகப் பெரிய தொழிலாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தமிழக வியாபாரிகள்.

கொல்லன் பட்டறைக்குள் புகுந்து ஊசி விற்பது என்பது இதுதான் போல..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X