For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஆயிரம் கரங்கள் நீட்டி...' திரை நட்சத்திரங்கள் இல்லாமலேயே திரண்ட ஆயிரம் ரசிகர்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்: திரைப்படங்களை பார்க்க தியேட்டருக்கு மக்கள் குறைந்து வரும் வேளையில், எந்த திரை நட்சத்திரமும் இல்லாமல் ஆயிரம் பேரை வரவழைத்து இரண்டரை மணி நேரம் ஆரவாரமான நிகழ்ச்சி நடத்த முடியுமா? முடியும் என்று சாதித்துள்ளார்கள் அமெரிக்கத் தமிழர்கள்.

முதன் முறையாக தமிழிசைப் பாடல்களை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்ட, ஆங்கில ப்ராட்வேஷோவுக்கு இணையாக, 'ஆயிரம் கரங்கள் நீட்டி' என்ற தமிழிசை நாடக நாட்டிய விழா டல்லாஸில் நடைபெற்றது.

110 பேர் கொண்ட குழுவினர்.

110 பேர் கொண்ட குழுவினர்.

ராதிகா கணேஷின் தலைமையில் ஒன்றரை வயது ஸ்ரூஜனா முதல் கொள்ளுப்பேரன் கண்ட பாட்டி கேரக்டர் வரை சுமார் நூற்றி பத்து பேர் கொண்ட குழுவினர், இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டியுள்ளனர்.

முழுக்க முழுக்க உள்ளூர் நாட்டியக் கலைஞர்கள், நடன மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் பங்கேற்று, அமெரிக்காவில் நடைபெற்ற முதல் இயல் இசை நாடகம் என படைக்கப்பட்ட முத்தமிழ் விழா என்ற பெருமை படைத்துள்ளது. இதைப் போன்ற நிகழ்ச்சிகள் ஆங்கில வடிவில் அமெரிக்காவில் மிகவும் பிரபலம்.

திரையிசைப் பாடல்கள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சிக்கான தனிப்பாடல்களும் இயற்றி இசையமைத்து இணைத்திருந்தனர். தமிழ்க் குழந்தைகள் பாடியுள்ள அகர முதல எனஉயிர் எழுத்துக்களுக்கான புதிய பாடல், தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பாடலாக அமையும்.

3 மாதம் ஒத்திகை

3 மாதம் ஒத்திகை

பங்கேற்றவர்களில் பெரியவர்கள் முழு நேர வேலையில் இருப்பவர்கள். ஆனாலும் நேரம் கிடைக்கும் போதல்லாம் ஒவ்வொரு பகுதிக்கும் உரியவர்கள் ஒத்திகையில் முழு ஈடுபாட்டுடன் சுமார் மூன்று மாதங்கள் பங்கேற்றனர்.

எட்டுக்குள்ளே உலகம் இருக்கு

எட்டுக்குள்ளே உலகம் இருக்கு

எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமையா என்று வாழ்வின் ஒவ்வொரு முக்கிய பகுதிகள் குறித்து வைரமுத்து எழுதி, ரஜினி பாட்ஷாவாக நடித்தார். அதே போல் ஒரு குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளான பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, நட்பு, மணமுடிப்பு, புது உறவு, உழைப்பு-உயர்வு, ஊரும் உறவும், இறப்பு, மீண்டும் பிறப்பு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் திரைக்கதை அமைத்திருந்தார் பிரபல நடனக் கலைஞர் மற்றும் இயக்குனர் ராதிகா கணேஷ்.

பாட்டியும் பேரனும் உரையாடுவது போலவும், ப்ளாஷ்பேக்கில் பாட்டி குடும்பக் கதையை விவரிப்பது போலவும் அமைந்திருந்தது. அனிருத் என்ற சிறுவன் பேரனாகவும், பிரேமா வெங்கட் பாட்டியாகவும் அறிமுகமான முதல் காட்சியிலேயே அரங்கம் அதிர ஆரம்பித்து விட்டது.

வளர்ப்புக்கு கமல், படிப்புக்கு ரஜினி

வளர்ப்புக்கு கமல், படிப்புக்கு ரஜினி

வளைகாப்பு சீன்... மஞ்சள் முகம் நிறம் மாற என்ற கர்ணன் பட பாடலுக்கு, சரித்திர கால கட்ட உடையலங்காரங்களுடன் பெண்கள் நடனமாடினர். நிஜமான வளைகாப்பு போல் நடைபெற்றது.தொடர்ந்து கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான், அத்தை மடி மெத்தயடி போன்ற பாடல்கள் சிறந்த நடிப்பு மற்றும் பாவனைகளுடன், வீட்டில் நடப்பதை அப்படியே விவரித்தது.

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என பிள்ளைக்கு அம்மா கதை சொல்ல, சுவாராஸ்யமில்லாத பிள்ளையோ, மாமாவை வேறு கதை சொல்லுமாறு தொந்தரவு பண்ண, மாமன்காரரோ மூன்றாம் பிறை கமல் அவதாரம் எடுத்து நரிக்கதை சொல்ல, பக்கத்து வீட்டு குழந்தைகளும் வந்து சேர, மேடை ஒரே களேபரமாகியது. கமலுக்கு போட்டி போட்டு நடித்தார் மாமன்காரர்.

அடுத்து வந்த ஆசிரியரோ 'ஒன்றே ஒன்று உலகம் ஒன்று' என்று பாடம் எடுக்க, பாட்டு வாத்தியார் ராகவேந்திரர் ரஜினியாக, 'ம்ம் பாடு' என ராம நாமத்தில் ஆரம்பித்து 'ஆடல் கலையோ தேவன் தந்தது' என படிப்பு சொல்லிக் கொடுத்தார். இடையிடையே, குழந்தைகள் வளர்வதுக்கு ஏற்றவாறு நடனங்களும் இடம் பெற்றிருந்தன.

மேடையில் நடந்த திருமணம்

மேடையில் நடந்த திருமணம்

நட்பு பரிமாணத்தில் கிராமம், நகரம் என அனைத்து விதமான காட்சிகளையும் டோண்ட் ஒர்ரி முஸ்தபா உள்ளிட்ட உரிய பாடல்களுடன் அமைத்திருந்தனர். வயது வந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது என்ற நிகழ்வையும் மேடையிலேயே நடத்திக்காட்டினர். தாத்தா பாட்டி, அண்ணன், அண்ணி, தாய்மாமன், அத்தை, சம்மந்திகள், மாப்பிள்ளை தோழர்கள், பெண்ணுக்கு தோழியர், குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், சமையல்காரர், போட்டோக்ராபர் என மேடை நிறைய திருமணக் கூட்டம். ஒவ்வொருவரும் வெகு இயல்பான நிலையில் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமண மண்டபத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் பாலா, மீரா, சங்கீதா ஆகியோர் கொண்டு வந்து குவித்து விட்டனர். சமீபத்தில் திருமணமான இளம் தம்பதிகள் மீண்டும் மேடையில் புதிய சொந்தங்கள் சூழ தாலி கட்டினர். அட, டல்லஸ் மேடையிலேயே ஊட்டிக்கு தேனிலவு கூட போனாங்கன்னா பாத்துக்கங்க!!

தொடர்கதையாகும் குடும்ப உறவுகள்

தொடர்கதையாகும் குடும்ப உறவுகள்

தாத்தாவின் மறைவு, பேரனுக்கு பிள்ளை பிறந்து கொள்ளுப்பாட்டியான பாட்டி என ஒரு குடும்பத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளிலும் முத்தாய்ப்பானவற்றை இரண்டரை மணி நேரம் மேடையில் நிகழ்த்திக் காட்டி, பார்வையாளார்களை கட்டிப்போட்டு விட்டனர். அரங்கத்தில் பலருடைய கண்களில் கண்ணீரும் எட்டிப்பார்த்தது.

இயக்குனர் ராதிகா கணேஷுக்கு பக்கபலமாக, மணமகளாக நடித்த அன்னபூரணி, புவனா மற்றும் வந்திதா உள்ளிட்ட நடன ஆசிரியர்களும் சிறப்பாக பணியாற்றியிருந்தனர். அவர்களுடைய நடனப்பள்ளி மாணவ மாணவிகளும் காட்சிகளுக்கேற்ற நடனமாடினர்.

நூற்றுக்கணக்கான அரங்கப் பொருட்கள் மூலம் காட்சிகளில் நிஜமான சூழலை உருவாக்கி விட்டனர். அரங்கப்பொருட்களை அடுக்கி வைத்திருப்பதை பார்க்கும் போது தமிழகத்தில் ஏதோ ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்து விட்டது போலிருந்தது. அம்மிக்கல் முதல் பார்க் பெஞ்ச் வரை அனைத்துமே கனமான ஒரிஜினல் பொருட்கள்.

ஆயிரம் கரங்கள் நீட்டி ஒருங்கிணைந்த தமிழர்கள்

ஆயிரம் கரங்கள் நீட்டி ஒருங்கிணைந்த தமிழர்கள்

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதியாக 65 ஆயிரம் டாலர்கள், திருவண்ணாமலையில் 'உதவும் கரங்கள்' அமைப்பின் மனவளர்ச்சி குன்றிய பெண்கள் காப்பக கட்டிட நிதிக்கு வழங்கப்பட்டது. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் வேலு, தமிழ்மணி, டாக்டர்.பிரபாகர், விஸ்வநாதன் மற்றும் கணேஷ் ஆகியோர், உதவும் கரங்கள் அமெரிக்க அமைப்பின் தலைவர் டாக்டர் பத்மினி ரங்கநாதனிடம் காசோலையை வழங்கினர்.

நல்ல நோக்கத்திற்காக நிதி திரட்டுவது தான் பிரதான எண்ணம் என்றாலும், வருகை தரும் பார்வையாளர்களுக்கு தரமான, மனநிறைவான இனிய தமிழ் நிகழ்ச்சியை தரவேண்டும் என்பதில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கூடவே தமிழ் சமுதாயத்தை ஒருங்கிணைப்பதையும் முக்கிய பணியாக கருதுகிறது. டல்லாஸில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சஸில் பயிலும் தமிழ் மாணவர்களையும் இணைத்து, இந்த உயர்ந்த நோக்கத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பையும், தமிழ் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது,. ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை தந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

எஸ்.பி முத்துராமன் சொன்னது பலிக்குமா?

எஸ்.பி முத்துராமன் சொன்னது பலிக்குமா?

திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஹூஸ்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, 'உள்ளூரிலேயே திறமைகள் கொட்டிக்கிடக்கும் நிலையில் தமிழகத்திலிருந்து கலைஞர்களை அமெரிக்காவுக்கு ஏன் அழைக்க வேண்டும். மாறாக அமெரிக்கத் தமிழ்க் கலைஞர்கள், தமிழகத்திற்கு வந்து நிகழ்ச்சிகள் நடத்தித் தரவேண்டும்' என்று அழைப்பு விடுத்தார்.

அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை ஆயிரம் கரங்கள் நீட்டி நிகழ்ச்சி காட்டியுள்ளது!

படங்கள் :சுஸ்ருத்தா சாட்டர்ஜி

English summary
Aayiram Karangal Neetti is an interesting stage drama that held in Dallas US recently organised by Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X