For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் பஸ் அறிமுகமாகி 90 ஆண்டுகள் நிறைவு-நன்றி கூறுவோம் ஜிடி நாயுடுக்கு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

GD naidu
கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில் பேருந்து போக்குவரத்து தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

அரசுப் பேருந்தில் செல்லவே அச்சமடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே பேருந்துகளை இயக்கி அனைவரையும் அதிசயிக்கச் செய்தவர் தமிழ்நாட்டின் அறிவியல் மேதை ஜி.டி நாயுடு.

அவரது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஜி டி நாயுடு கோவையில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய பஸ் குறித்த சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே டிக்கெட் கேட்கும் நடத்துநர். தானியங்கி கதவுகள் இருந்தும மூடாத பரிதாபம், சைட் ஜன்னல்கள் போக காலுக்குக் கீழேயும் ஏகப்பட்ட ஓட்டைகளுடன் இருக்கும் பஸ், பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் என்று பாட்டுப் பாடாத குறையாக ஓட்டையான மேற்கூரையுடன் மழைக்காலத்தில் பயணிகளை நனைத்தபடி ஓடும் பல பஸ்கள் என்பதுதான் இன்றைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நிலை.

ஆனால் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.

கோவையில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான பேருந்துகள் ஓடினாலும் முதன் முதலாக ஓடிய பேருந்துகளை இன்றைக்கு இருக்கும் பெரியவர்கள் ஆர்வத்துடன் நினைவு கூர்கின்றனர்.

மூக்கு வண்டி

1921ம் வருடத்தின் இறுதியில் கோவையில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயங்கி வந்தது. கோவையிலிருந்து உடுமலைபேட்டைக்கும், பின்னர் பழனிக்கும் சென்று வந்த அந்த பேருந்தில் முப்பதுக்கும் குறைவான இருக்கைகளே இருந்துள்ளது.

பேருந்தின் மேல் தளம் இப்போது இருப்பதுபோல இல்லாமல், நான்கு ஓரங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. அதில் மரத்தினால் செய்யப்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பேருந்தின் முன்னால் என்ஜின் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் மூக்கு வைத்த வண்டி என்று பட்டப்பெயர் வைத்து மக்கள் கூப்பிட்டு வந்துள்ளனர்.

இந்த வண்டியின் ஓட்டுனர், நடத்துனர், உதவியாளர், உரிமையாளர் என எல்லா பொறுப்புகளையும் ஏற்று நடத்தியவர் கோபால்சாமி நாயுடுவின் மகன் துரைசாமி நாயுடு என்கிற ஜி.டி.நாயுடு தான். மிகப்பெரிய விஞ்ஞானியான அவர், இந்த பேருந்தை இயக்கியதே ஒரு தனி கதை.

யுனைடெட் மோட்டார் சர்வீஸ்

பருத்தி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தாமல் அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த வெள்ளைக்காரான ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார் ஜி.டி நாயுடு. அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன்முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு. தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார்.

அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனை படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க ‘வைப்ரேசன் டெஸ்டர்’ என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் .

பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அவர் இத்தகைய கருவிகளை கண்டறிந்து சாதனை படைத்தார். இவருடைய பேருந்தில் பயணிகளை கவர பேருந்தில் தேநீர் பழச்சாறு வகைகள் கொடுக்கப்பட்டதாகவும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் நினைவு கூர்கின்றனர்.

இலவசமாக கொடுத்தார்

ஆங்கிலேய அரசு வருமான வரி என்ற பெயரில் ஜி.டி.நாயுடுவின் சொத்தில் 90 விழுக்காடு தொகையை வரியாக கேட்டதால், 1938 ஆம் வருடம் தன்னுடைய யுனைட்டட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்திலிருந்த பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய பேருந்துகளை கோவை வட்டார போக்குவரத்து கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்துவிட்டார்.

மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்த ஜி.டிநாயுடு தனது 80 வது வயதில் 4 -1 -1974 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மிக எளிமையான அந்த விஞ்ஞானியின், அறிவியல் மாமேதையின் நினைவு நாளில் கோவையில் முதல் பஸ் ஓடியதன் 90வது ஆண்டு தினத்தை நினைவு நன்றியுடன் நினைவு கூர்வதே நாயுடுவுக்கு செலுத்தும் உணமையான மரியாதையாகும்.

English summary
G.D.Naidu named his Bus service as U.M.S (Universal Motor Service) service, Coimbatore, Tamilnadu and this service was offered in with the mind of People's goodness. Then he got several buses and made it to run in and around the Coimbatore City. He drove that bus service in between Pollachi and Palani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X