ஃபெட்னா 2017: வடஅமெரிக்க தமிழ்ப்பேரவை விழாவில் பங்கேற்கிறார் பண்ணிசை நல்லசிவம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக பண்ணிசை நல்லசிவம் கலந்துகொண்டு தமிழரின் பாரம்பரிய இசை வரலாறுகள் பற்றிப் பேசுகிறார்.

முனைவர் கோ.ப.நல்லசிவம் அவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மொழிப்புல மெய்யியற்துறையின் உதவிப் பேராசிரியர் என்பதோடு பன்முகத்திறன் கொண்ட தனியாளுமையாகத் திகழ்ந்து வருகிறார்.

FETNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Pannisai Nalla Sivam is a Chief guest.

யோகா, கல்வெட்டியல், சுவடியியல், மூலிகை மருத்துவம், பக்தி இலக்கிய ஆய்வாளர், பண்ணிசை ஆய்வாளர், பேச்சாளர், எழுத்தாளரென விளங்குவதோடு, தேவார இசைமணி, சைவச்செம்மல், இலக்கிய இசையரசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.

திருவாசகம், திருமந்திரம், பெரியபுராணம், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்கள் யாவினையும் தெள்ளியபாங்கில் சுவையின்பத்தோடு இயம்பக்கூடியவர். இலக்கியப் பாடல்களானாலும், நாட்டுப்புறப் பாடல்களானாலும் அதனதன் மெட்டு, சந்தமென அதற்கேவுரிய இலக்கணங்களை விரித்துரைத்துப் பாடி, கேட்போரை இன்பச்சோறுண்ண வைப்பவர்.

நவீன இலக்கியத்திலும் நாட்டம் கொண்டு மிகச் சிறப்பாகப் பேசி கூட்டத்தினை நகைச்சுவையின்பத்தில் ஆழ்த்திச் சிரிக்க வைக்கும் திறன் கொண்டவர்.

'கழுத்துக்குக் கயிறு ஏறாததால், கயிற்றுக்குக் கழுத்து ஏறியது!', 'மரத்தை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்; மந்திரியின் மரம்நடு விழாவிற்கு! அவர்களை விட்டு வைப்பதை விட நட்டு வைப்பது மேல்', 'விளைநிலங்களைப் பட்டா போடும் மனிதா எச்சரிக்கை, வரும்காலத்தில் உன் மண்டையில் மட்டுமே எஞ்சியிருக்கும் மண்!','மழலைகட்கு நாவில் சொட்டு, மக்கட்கு விரலில் சொட்டு, இரண்டுமே போலியோ!', 'கண்ணே உன்னை என் மனச்சிறையில் வைத்தேன்; நீ உன் அப்பாவிடம் சொல்லி என்னை மத்தியச் சிறையில் வைத்துவிட்டாயே?' போன்ற துணுக்குக் கவிதைகளையும் தன் போக்கில் எடுத்தியம்பிப் பேசுகிறார்.

அதனதன் அணிக்கொப்ப, நடவுப்பாட்டு, ஏர்ப்பாட்டு, ஏற்றப்பாட்டு, உழவுப்பாட்டு, பக்திப்பாட்டுயென எல்லாவிதமான பாடல்களையும் பாடிக்காட்டுகிறார்.

ஜூன் 1, 2 தேதிகளில், மினியாபொலிசு, மின்னசோட்டாவில் நடைபெறவிருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2017ஆம் ஆண்டுக்கான திருவிழாவின் போது, சிறப்புரை, பண்ணிசை, இலக்கியக்கூட்டம் முதலானவற்றில் தன் பங்களிப்பை நல்கவிருக்கிறார்.

அனைவரும் வருக, முனைவர் நல்லசிவம் அவர்களின் வாயிலாக தமிழ் மரபினைக் கற்று இன்புறுவோம்; விழுமியச் சிறப்பெய்துவோம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Pannisai Nalla Sivam is a Chief guest at Minneapolis Convention Center in Minnesota
Please Wait while comments are loading...