For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாமீனில் வெளிவந்த ‘கடவுள்’! - சுபவீ சிறப்புக் கட்டுரை

By Shankar
Google Oneindia Tamil News

- சுப. வீரபாண்டியன்

கடந்த இருபது நாள்களாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த அழுகைக் காட்சிகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. அழுகைக்கும், அழுகைக் காட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் அறிவோம். செயற்கை மழை முடிந்து, இயற்கை மழை தொடங்கியுள்ளது. இனிமேல் மகிழ்ச்சி ஆரவார, ஆர்ப்பாட்டங்கள் ஒருசில நாள்களுக்குத் தொடரும்.

அழுகைக் காட்சிகளுக்கிடையே, இதுவரை தமிழகம் கண்டிராத பல நிகழ்வுகளும் அரங்கேறின. ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்துத் தரக்குறைவான, கண்ணியமற்ற சொற்கள் சுவரொட்டிகளிலும், அ.தி.மு.க. தெருமுனைக் கூட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டன. கருமாந்திர நீதிபதியே, சட்டம் தெரியாத சனியனே, திருட்டு முண்டமே போன்றவை அவற்றுள் சில. மேலுள்ள தொடர்களைக் கொண்ட, அ.தி.மு.க. பொறுப்பாளர்களால், அ.தி.மு.க. கொடி வண்ணத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

‘அறப் போராட்டம்' என்னும் பெயரில், எவர் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எவ்விதமான முன் அனுமதியும் பெறாமல், சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் ஆகியவைகளை நடத்தினர். காவல்துறை கைகட்டி நின்றது. சென்னையில், தி.மு.கழகத் தலைவர் கலைஞர் வீட்டின் முன்பு திடீரெனச் சிலர் கூடித் தாக்குதல் நடத்தினர். கலிங்கப்பட்டியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கு மிக அருகில் கூட்டம் நடத்தி, அ.தி.மு.க.வினர் அவரைத் தாக்கிப் பேசினர்.

அன்று அண்ணா அசாரேக்கு ஆதவராகவும், ஊழலுக்கு எதிராகவும் அணி திரண்ட தமிழ்த் திரைப்பட உலகினர், இன்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு ஆதரவாகத் திரண்டு ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். ‘கடவுளை மனிதன் தண்டிக்கலாமா?' என ‘நீதி கேட்கும்' பெரிய பதாகையும் அவ்விடத்தில் காணப்பட்டது. ஜெயலலிதாவைக் கடவுளாகவே நம் திரை உலகினரில் சிலர் பார்க்கின்றனர் என்றால், ‘கடவுள் மனிதனிடம் ஜாமீன் கேட்கலாமா?' என்னும் இன்னொரு பதாகை வைத்திருக்க வேண்டும்.

இவை தவிர, பரப்பன அக்ரஹாரச் சிறை வாசலின் முன் தேங்காய் உடைத்தல், தமிழ்நாட்டில் மண் சோறு உண்ணல், மொட்டை அடித்துக் கொள்ளல் என்று பல்வேறுவிதமான ‘அறிவார்ந்த' போராட்டங்களும் நடைபெற்றன. அமைச்சர் அனைவரும் அழுதுகொண்டே பதவி ஏற்றனர். எனினும் அமைச்சர் பதவி வேண்டாம் என்று எவரும் கூறவில்லை. அழுதபடி உறுதிமொழி ஏற்பதில்தான் கவனமாக இருந்தனர்.

போகட்டும்...ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு மற்றும் அதன் மீதான தீர்ப்புக் குறித்து இன்று மக்கள் முன் வைக்கப்படும் சில செய்திகளை நாம் பார்க்கலாம்.

எவ்வளவோ பெரிய ஊழல்கள் எல்லாம் இந்நாட்டில் நடைபெற்றுவிட்டன. 66 கோடி ஊழல் என்பது ஒரு பொருட்டா?- இதற்காக ஜெயலலிதாவைச் சிறையில் அடைக்கலாமா? என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர். 66 கோடிக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால், 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு எவ்வளவு தண்டனை என்று கேட்டுச் சிலர் மகிழ்ச்சியடைகின்றனர்.

இப்படியெல்லாம் கேட்பவர்கள், படிக்காதவர்களோ, பாமரர்களோ இல்லை. ‘மெத்தப் படித்த' சிலரே இப்படி எல்லாம் பேசுகின்றனர். சிறந்த கவிஞரும், பேராசிரியருமான சிற்பி பாலசுப்பிரமணியம், ‘குற்றமும் தண்டனையும்' என்னும் தலைப்பில் தினமணியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சிற்பி, நிறையப் படித்தவரில்லையா...அதனால்தான், 1866ஆம் ஆண்டு வெளிவந்த, ரஷ்ய எழுத்தாளர் டாஸ்டாவ்ஸ்கி (Fyodor Dostoyevsky) யின் புகழ்பெற்ற நூலின் பெயரை (Crime and Punishment) த் தன் கட்டுரைக்குச் சூட்டியுள்ளார். ஆனால் அந்தக் கட்டுரை உலகளாவிய, நேரிய பார்வை கொண்டதாக இல்லை. ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா என்று கேட்கத் தோன்றுகிறது" என்கிறார் சிற்பி. அதாவது, உலகில் குற்றம் செய்யாதவர்கள் யாருமே இல்லை, அப்படியிருக்க ஜெயலலிதாவுக்கு மட்டுமே ஏன் தண்டனை என்னும் தொனியில் அக்கட்டுரை அமைந்துள்ளது. குற்றம் புரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பது உண்மைதான். அதற்காக இனிமேல் வழக்கு, காவல்துறை, நீதிமன்றம், தண்டனை என எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிடலாமா?

66 கோடி ஊழல் பெரிதா என்று கேட்கிறவர்கள், வயிற்றுப் பசிக்காகத் திருடிவிட்டுச் சிறையில் உள்ளவர்களை எண்ணி என்றைக்காவது வருத்தப்பட்டுள்ளார்களா? எல்லோரும் குற்றவாளிகளே என்று முடிவுக்கு வந்துவிடலாம் என்றால், ஏன் சிலரை மட்டும் சிறையில் அடைத்து வைக்க வேண்டும். இந்தியாவில், ஏன் உலகில் உள்ள எல்லாச் சிறைகளையும் திறந்து, அனைத்துக் கைதிகளையும் வெளியில் விட்டு விடலாமே?

இன்னொரு ‘மேதாவியும், காந்தியவாதியுமான' தமிழருவி மணியன், தன்னுடைய ‘ரௌத்திரம்' மாத இதழில், ஜெயலலிதா வழக்கு குறித்து எழுதியுள்ள திறந்த மடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளைப் பார்க்கலாம்:

"2ஜி ஊழல் நாயகர்களை ஒப்புநோக்க, உங்கள் தவறுகள் சாதாரணமானவை என்றே பொதுமக்கள் நினைக்கின்றனர்.

சகோதரி, எனக்கு ஒரு வருத்தம் உண்டு. நீங்கள் 66 கோடி ரூபாய் அதிகமாகச் சொத்து சேர்த்துவிட்டீர்கள் என்று ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தியவர்கள், ராஜாஜியோ, ஓமந்தூராரோ, காமராஜரோ, கக்கனோ இல்லை.

இங்கே யாரும் மகான் இல்லை, மகாத்மாவிலிருந்து மணியன் வரை என்றோ ஒரு தவறுக்குத் துணை போயிருக்கலாம்.

உங்கள் அரசியல் எதிரிகள் நினைப்பதுபோல் உங்கள் கதை முடிந்து போய்விடவில்லை. மேல் முறையீடு இருக்கிறத..."

இவைகளுக்கெல்லாம் விடை சொல்வதற்கு முன், திரு மணியன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... நீங்கள் உங்கள் கட்சியின் பெயரை, ‘காந்திய மக்கள் இயக்கம்' என்பதற்குப் பதிலாக, ‘ஜெயலலிதா மணியன் இயக்கம்' என்று மாற்றிவிடலாம். இனியும் உங்களின் ‘நடுநிலை' நாடகத்தை எவரும் நம்பமாட்டார்கள். மேலும் ஊழலை எதிர்ப்பதற்கும் இனி உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லாமல் போய்விட்டது. மகாத்மாவிலிருந்து மணியன் வரை என்றோ ஒரு தவறுக்குத் துணை போயிருக்கலாம் என்பதுதானே உங்கள் கருத்து. நண்பர் மணியன் அவர்களே, ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்காக, மகாத்மாவையே பலி கொடுக்கத் தயாராகி விட்டீர்களே... நியாயம்தானா இது?

சரி, ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கையும், 2ஜி வழக்கையும் அனைவரும் ஒப்பிட்டுப் பேசுகின்றனரே, அது சரியா என்று எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
தனி மனித சொத்துக் குவிப்பு வழக்கும், ஓர் அரசுக்கு ‘ஏற்பட்டிருக்கக்கூடிய' வருமான இழப்பு வழக்கும் ஒன்றாகுமா? எந்த ஓர் அரசும், மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்தும் போது, அரசுக்கு நட்டம் ஏற்படத்தான் செய்யும்.

‘அம்மா உணவகம்' அரசுக்கு வருமானமா, இழப்பா? திமு கழக ஆட்சியில், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டதே, அதனால் அரசுக்கு வருமானமா, இழப்பா? இலவசத் திட்டங்கள், விலையில்லாத் திட்டங்கள் எல்லாமே அரசுக்கு இழப்பைத்தானே கொண்டு வரும்? மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் எல்லாம் வருவாய் இழப்பிற்குத்தானே வழிசெய்யும்?

Subavee's special article on Jayalalithaa's release

அதற்காக, ஒரேயடியாக 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பா என்று கேட்கலாம். அந்தத் தொகை, தணிக்கையாளர் (CAG) வினோத் ராயின் அறிக்கையில் மட்டும்தானே உள்ளது. வழக்கின் முதல் தகவல் அறிக்கை (F.I.R), குற்றப்பத்திரிகை (Charge Sheet) என எவற்றிலாவது அந்தத் தொகை குறிப்பிடப்பட்டுள்ளதா? தணிக்கையாளர் குறிப்பிட்டுள்ள தொகையை, வழக்குத் தொடுத்த மத்தியப் புலனாய்வுத் துறையே வழி மொழியவில்லையே. அத்துறையின் அதிகாரி, விவேக் பிரியதர்சன், ராஜாவின் வீட்டிலோ, அவருடைய உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலோ, வருமானத்திற்கு மிஞ்சிய சொத்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று நீதிமன்றத்திலேயே (2013 மார்ச்) கூறியிருக்கிறாரே!

தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கில், மேல் முறையீடு இருக்கிறது என்று கூறுகின்றவர்கள், தீர்ப்பே இன்னும் வழங்கப்படாத வழக்கில், ராசாவையும், கனிமொழியையும் தண்டிக்கத் துடிக்கின்றார்களே!

பிறகு, பெண்ணைத் தண்டிக்கலாமா என்று ஒரு வாதம் எழுப்பப்படுகிறது. இதற்கு நாம் விடை சொல்ல வேண்டியதில்லை... கனிமொழி வழக்கில் ஜெயலலிதா விடுத்த அறிக்கையையே நாம் எடுத்துக் காட்டலாம்.

கனிமொழிக்குப் பிணை (ஜாமீன்) கோரியபோது, அவர் ஒரு பெண் என்பதையும் ஒரு காரணமாகக் காட்டியுள்ளீர்களே...பெண்ணுக்கு ஒரு நியாயம், ஆணுக்கு ஒரு நியாயமா, பெண்கள் மட்டும் தவறு செய்யலாமா என்று வினாக்களை அடுக்கியவர் ஜெயலலிதா.

அது இருக்கட்டும்... அவருடைய ஆட்சியில் பெண்கள் தண்டிக்கப்படவே இல்லையா? பார்வையற்ற, மாற்றுத் திறனாளிகளான பெண்களைக் கூட, ஈவு இரக்கம் இல்லாமல் தடியடிக்கு உள்ளாக்கிய ஆட்சிதானே, ஜெயலலிதாவின் ஆட்சி.

அன்று, ஜெயலலிதா ஆட்சியில், தான் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்பதை அண்மையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ‘நக்கீரன்' பேட்டியில் விளக்கியுள்ளார்.

சந்திரலேகா என்னும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முகத்தில் அமிலம் வீசப்பட்டது யாருடைய ஆட்சியில் என்பதும், யாருடைய தூண்டுதலால் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றுதானே!

ஆனால், இதற்காகவெல்லாம், ராஜாஜியோ, ஓமந்தூராரோ, காமராஜரோ, கக்கனோ வந்து வழக்குப் போட்டால்தான், நம் மணியன் ஏற்றுக்கொள்வார்... என்ன செய்வது, பார்வையற்ற நம் சகோதரிகளால் அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்து, ‘அவருடைய சகோதரி' மீது வழக்குப் போட முடியாதே!

(தொடர்ந்து பேசுவோம்)

English summary
Prof SP Veerapandian's Special blasting article on Jayalalithaa's bail release from wealth case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X