• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணைத் தாய்- நெல்லை சுதன்

By Staff
|

( அருளாளர் பட்டம் அறிவிக்கப்பட்ட இத்தருணத்தில்அன்பு தெய்வம் அன்னை தெரசாவிற்கு எனது இதய அஞ்சலி )

கருணை பொழிந்த மேகமின்று

கலைந்து சென்றதம்மா

கருத்தில் ஒளிர்ந்த தீபமொன்று

கண் மறைந்ததம்மா

காலம் கடமையைச் செய்திடினும்- - என்

கண்ணீர் சமாதானம் அடைவதில்லை

இயற்கை உனை வென்றிடினும்- - என்

இதயம் உனை இழப்பதில்லை

வாக்குறுதிகளை வாரியிறைத்து

வாக்குச் சீட்டுக்களைப்

பெறுதற்கு மட்டுமே

ஐந்தாண்டுகளுக் கொருமுறை

ஏழ்மையும் ஏழைகளும்

எங்கள் அரசியல்வாதிகளின்

நாவினிலே நர்த்தனமாடுகிறபோது

ஐரோப்பாவின் அல்பேனியாவில்

அவதரித்த உன்னை

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள்

ஈர்த்ததெப்படி? தாயே !

சாதி மதம் மொழியென்று

இரத்த இரணங்கள் மட்டுமே

சரித்திரச் சான்றுகளாய்

சார்ந்த பூமியில்

அன்புவிழி அன்புவழி

அன்புமொழி அன்புமதம்

அத்தனையும் அன்புமயம் !

வார்த்தையில் மட்டுமின்றி

வாழ்ந்தும் காட்டிய

வாழ்வின் அர்த்தமே, அவதாரமே

வணங்குகிறேன் அம்மா -- உன்

ஆன்மாவிற்கு என்றென்றும்

அடிமை நானம்மா !

மதங்களும் மார்க்கங்களும்

மலர்ந்தது ஒன்றுதானே

மனித நேயமெனும் மலர்கள்தானே

மலர்களைச் சிதைத்து நின்று

மரங்களைப் பாதுகாக்க

மண்ணின் மைந்தரிடை

மடமையின் மல்யுத்தம்

பிறிதொரு மண்ணில் பிறந்தாலும். . . .

புவியும் புவிவாழ் மாந்தர்களும்

ஒன்றுதானே !

புரிய வைத்தாய்

புவியியல் ஆராய்ச்சியால் அல்ல -- உன்

புண்ணியச் சேவையால்

ஐயிரண்டு திங்கள்

அடிவயிற்றில் சுமந்த

பெற்றவளும் பிள்ளையுமே

பிரிந்தொழுகும் வாய்ப்புண்டு

பேதைமையால்

திரை நடுவே விழுவதுண்டு

ஆனால்

அன்னையே என்று

உன்னை அழைத்த போதுதான்

என் அங்கத்தின் உயிரணுக்களெல்லாம்

இன்ப பிரளயத்தில்

ஏகோபித்துப் பாடின !

நாடி நாளங்களெல்லாம்

களிநடம் புரிந்தன !

இன்றோ. . .

கருணைத் தாயே !

உன் காலடியில்

என் கண்ணீர்ப் பூக்கள்

சென்ற இடமெல்லாம்

சிறப்பு உனக்குண்டு

பட்டம் பாராட்டுக்கள்

பெற்று மகிழ்ந்ததெலாம் எனக்கன்று !

ஏழை இனத்திற்கென்று - நீ

பகர்ந்ததெலாம் பகிர்ந்ததெலாம்

நாடறியும் இந்நானிலமறியும்

மெழுகுவர்த்திக்கு

ஏன் மேலாடை ?

எதிர்பார்த்து வந்ததல்ல

உன் பாதை !

உளம் இரங்கிச் செய்ததன்றோ

உன் சேவை !

புண்களும் புழுக்களும்

உழுது கொண்டிருந்த

உயிர்க் கூட்டினை - உன்

பூக்கரங்களில் ஏந்தி

அன்பெனும் புனுகு தடவி

அகம் மகிழ்ந்தாயே

அதற்கே

ஆயிரம் கோடிபெறும்

அம்மா !

ஆயிரம் கோடிபெறும் !

மோட்ச வாசலிலே - உனக்கு

சிவப்புக் கம்பள வரவேற்பாம்

சின்னக் குழந்தைகளும்

கண்ணீரோடு கலந்துரையாடினர்

உன் அன்பையே

சுவாசித்த எமக்கு-உன்

மூச்சு நின்று போனதால்

சுவாசம் தடைபடுகிறது தாயே !

இறுதியாக

உன்னிடம் ஓர் யாசகம். . . .

இன்னும் ஓர் தெரசா

எங்களுக்கு வேண்டும்

ஆம் !

அன்னை என்ற சொல்லுக்கு

அர்த்தம் கற்பித்த - அந்த

இன்னும் ஓர் தெரசா

எங்களுக்கு வேண்டும்

மனிதனும் தெய்வமாகலாம்

மார்க்கம் சரியென்றால் !

மனங்களை வென்ற மாதாவே

என் கண்களுக்குத் தெரிந்த

கடவுள் நீ !

எனவே

என் இதயக் கருவூலத்தில்

என்றென்றும் நீ !

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X