For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுழற்காற்று

By Staff
Google Oneindia Tamil News

சென்ற மாதம் புயல் அடித்ததால் மின்சாரம் போனது. இரவு மணி 8.00. சாப்பிடும் நேரம். மகனுக்குப் பசி. "இதோ சாப்பாடு ஆச்சு!" என்று மனைவிசொன்னாள். வீடு ஒரே கும்மிருட்டு. என் மகனுக்குப் பயம். இரண்டு வயது மகளுக்கும் தான். இருவரும் என்னைக் கட்டிக் கொண்டனர். வெளியே "உர் உர்'ரென்று அடித்த காற்றினால் கதவுகள் அடித்துக் கொண்டன. வெளியேறும்படி அரசாங்கம் ஆணையிட்ட போதே ஊரை விட்டு வெளியேறியிருக்கவேண்டும்.

இப்போது வெளியேறினால் பிரயோசனம் ஏதுமில்லை. வீட்டில் எமர்ஜென்சி விளக்கு மங்கத் தொடங்கியது. "மெழுகுவர்த்தி ஏற்றி வைய்யுங்கள்!" என்றுமனைவி கட்டளையிட சிரமேற்கொண்டுத் தட்டு தடுமாறி அவற்றை ஏற்றத் தொடங்கினேன். அப்பாவிடம் போட்டி போட்டுக் கொண்டு என் பத்துவயது மகன் தீக்குச்சியினை உரசினான். திரும்பத் திரும்ப உரசினாலும் பற்றவில்லை. மகனிடம் எப்படி பற்ற வைப்பது என்பதை விளக்கினேன். மிகமகிழ்ந்தான். பல்வேறு கேள்விகள் கேட்டுத் தன்னைத் திருப்தி படுத்திக் கொண்டான். மகளோ அவன் ஏற்றி வைப்பதை அணைப்பதில் குறியாயிருந்தாள்.இப்படியாகப் பொழுது ஊர்ந்தது.

சூடாக ரசமும், வாட்டிய அப்பளமும், சாதமும் தேவார்மிதமாகத் தோன்றியது. மெழுகுவர்த்தியின் ஆடும் தீபம் மற்றும் பேயாடும் நிழல்களில் உள்ளத்தைப்பறி கொடுத்தேன். கலகலப்பாகக் குடும்பம் இரவுச் சாப்பாட்டினுள் கவனம் செலுத்தியது. என் மகன் அவன் பள்ளியில் நடக்கும் சேட்டைகளையும், டீச்சர்மற்றும் பிற மாணவர்களின் கேலிப் பேச்சுக்கள் பற்றியும் பறைசாற்றிக் கொண்டிருந்தான். மகளோ மகனின் தட்டிலிருக்கும் அப்பளத்தை எடுக்க முயற்சிபண்ணி அப்பளத்தை நொறுக்கிக் கொண்டிருந்தாள். பிள்ளைககளின் விளையாட்டில் மனதைப் பறிகொடுத்தவாறு என் மனைவித் "தட்டைப் பார்த்து சாப்பிடுங்கள்"என்று அனைவருக்கும் அன்பு கலந்த எச்சரிக்கை விடுத்தாள்.

Cycloneகடைசியில் இவ்வாறு சேர்ந்துச் சாப்பிட்ட நாள், நேரம் எனக்கு ஞாபகமில்லை. சேர்ந்து உணவு அருந்த வாய்ப்புக் கொடுத்தப் புயலுக்கு நன்றி தெரிவித்தேன். என்மனைவி அதைக் கவனித்தாள். "புயல் வந்து அனைத்தும் நவீன வசதிகளும் பறி போனபோது, எங்கள் ஞாபகம் வருகிறதாக்கும்" என்று மெதுவாகஆரம்ம்பித்தாள். உண்மை உறைக்கவே அமைதி காத்தேன். "நீங்கள் இவ்வாறு தினமும் எங்களுடன் பேசினால், விளையாடினால் எவ்வளவு நல்லாஇருக்கும் ?".

சுழற்காற்று திரும்ப அடித்தது. வாரம் தோறும் பலநூறு மைல் கடந்து விமானத்தில் பறந்து, பல்வேறு நகரத்தில் வியாபாரம் பண்ணுவதில் மும்முரமாய்இருக்கும் போது, இம்மாதிரித் தருணங்கள் கிடைப்பது மிக அரிது. கிடைக்கும் தருணங்களிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும், தூங்குவதிலும் வெட்டியாகக்கழிப்பதால் மனைவியின் சொற்கள் இம் மாதிரித் தருணங்களில் கூர்வேலைப் போன்று செறிவுடன் பாயும்.

சுழற்காற்று சுழன்று அடிக்க ஆரம்பித்தது. மின்சாரம் இல்லாத வேளையினில், அனைவரும் என் பாதுகாப்பு வேண்டி என்னை வேண்டியிருப்பதை எண்ணி என் ஆண்மனது பெருமை கொள்ள ஆரம்பித்தது. "இயற்கை உபாதைகளால் மனிதன் தவிக்கும்போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பது இயல்பே" எனஎண்ணியவாறுச் சாப்பாட்டை அனைவரும் முடித்தோம். என் மகள் "காக்கா" கதை வேண்ட "காக்கா வடைக்" கதையினை 1000 வது தடைவையாகச்சொல்ல ஆரம்பித்தேன். காக்கா கதையும் முடிந்தது.

அடுத்துப் படுக்கப் போகும் போது எழும் குடும்ப ஆட்டங்கள். என் மகனுக்கு அலெக்சாண்டர் டூமாசீன் "த்ரீ மஸ்கிட்டீயர்ஸ்" கதைக் கூறத் தொடங்கினேன்.கல்லூரியில் சரியாகப் படிக்காததால் சரி வரக் கூறமுடியவிலை. வெக்கமாயிருந்ந்தது. எனது ஆங்கிலப் பேராசிரியர், "மார்க் எடுக்க இதைக் கற்றுகொடுக்கவில்லை. இவையெல்லாம் மனிதத் திறனின் வெளிப்பாடுகள். பிற்சமயம் ஒரு நல்ல நேரத்தில் இந்தக் கதையைப் படிக்கும், சொல்லும், ரசிக்கும்பக்குவத்தைப் பெறுவாய்" என்று சொன்னது சுழற்காற்றைப் போன்று சுழன்று போனது. என் மகனிடம் சில பகுதிகள் மறந்து விட்டேன் நாளைகூறுகிறேன் என்று சமாளித்தேன். அடுத்து வெகு நாள் கழித்து எனது சொந்தக் கற்பனைச் சிறகொடித்து பறக்க, அருமையான மாயாஜாலமிக்க கதையைப்புனைந்தேன். மனமும், மகனும், மகளும் அந்த மகிழ்ச்சியான சண்ட மாருதத்தினால் கனவுகள் சுழல வளைய வந்தோம்.

வெளியே சுழற்காற்றின் வீர்யம் அதிகரித்தது. எனது முன்னால் தொங்கப்பட்டிருந்த, ஆடிக் கொண்டிருந்த அம்மாவின் படத்தைப் பார்த்தேன். நான் அப்போதுபத்து வயது சிறுவன். "இன்று அனேகமாக புயல் கரை கடக்கக் கூடும். நான் கூட அதனால் தான் காலாகாலத்தில் பஸ்ஸைப் பிடிக்க ஓடுகிறேன்" என்றுகூறிய நண்பரின் மூலமாகக் கலவரப்பட்ட என் அம்மா அவசரமாகச் சமைத்துச் சாப்பாடு போட்டுப் பின், எங்களைப் (என்னுடன் பிறந்தவர் மொத்தம்நான்கு பேர்) படுக்கையில் தள்ளினாள். அம்மா வேறு கல்கி அவதாரம், ஊழிக்காலமென்று பயப்படுத்திக் கொண்டிருந்தாள். என் அக்கா ஒரு பொன்னியின்செல்வன் பைத்தியம். இரண்டாம் பாகமான 'சுழிக்காற்று' பற்றி எத்தனையோ முறைச் சொல்லியிருக்கின்றாள். அவள் விவரிக்கும்போது பூங்குழலிபடகோட்டி அனைவரையும் காப்பாற்றும் காட்சிகள் வந்து போகும். என் அக்காவைப் பூங்குழலியாகவே நினைத்தேன். அன்றும் அந்தக் கதையைச்சொன்னாள்.

அனைவரும் போர்வையில் தூங்கிப் போனோம். எனது கனவு முழுவதும் புயலும் மழையும் வெள்ளமுமாயிருந்தது. எப்படியோ கனவில் மட்டும் உயிருடன்இருந்தேன். குட்டிக் கண்ணன் ஆழிலையில் இருப்பதைப் போல. காலையில் கண் விழித்தவுடன் வெள்ளக் காடாக இருக்குமென நினைத்ததற்கு மாறாகப்பளீரென்று வெயில் அடித்தது. புயல் நம்மைப் பாதிக்கவில்லை என்று அம்மா பெருமூச்சு விட்டாள். அருகேயிருந்த கிராமம் தண்ணீரில் மூழ்கியதாகப் பிறகுசெய்தி கிட்டியது. ஆனால் அன்று கலவரப்பட்ட அந்தத் தருணத்தில் அம்மா அடைகாத்த அரவணைப்பின் சுகம் இப்போது தாக்க நான் என் குழந்தைகளைஅரவணைத்தேன். அடுத்த நாள் வெயிலில் கிரிக்கெட் கூட ஆடியதாக ஞாபகம். பள்ளிக்கூடம் வழக்கம் போல வெயில் அடிக்கும் போது லீவு விட்டது.அது போன்று நாளை இருக்கும். கவலையில்லை.

பத்து வயதில் அடித்த அந்தப் புயலால் எனது பள்ளிக்கூடத்தின் மேற்கூரைகள் காணாமல் போயிருந்தன. இப்போது எனது வீட்டின் மேற்கூரைத் தாங்குமா ?.என் மனது வினா கேட்க, வெளியே சுழற்காற்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. 'அப்பா, வெள்ளம் உள்ளே வருமா ?' என்ற மகனிடம், 'வராதுப்பா'என்று வருண பகவான் போன்று பதிலளித்தேன். ஆனால் வந்தால் என்ன செய்யவேண்டுமென்றும் சொன்னேன். 'உலகம் முழுவதும் புயலாப்பா ? என்றமகனிடம் புயலின் கண் பற்றியும், அதன் கண் கரையைக் கடக்கும் போது எப்படி வலுவிழக்குமென்பதைப் பற்றியும் விவரமாகச் சொன்னேன்.சாட்டிலைட்கள் எப்படி புயலைப் படம் பிடிக்கும், அறிவியலார் எப்படி ஆகாய விமானத்தில் ஏறிப் புயலை விரட்டி அதன் கண் பற்றி அறிகின்றனர் போன்றமன திடம் தரும் கருத்துக்களைக் கூறவும், என் மகன் நிம்மதியுடன், கையில் "டார்ச்சுடன்" தூங்கப் போனான்.

என் மகனுக்குப் பயம். மகளுக்கும் தான். எனக்கும் தான். இருவரும் என்னைக் கட்டிக் கொண்டனர். வெளியே "உர் உர்ரென்று அடித்த காற்றினால்கதவுகள் மீண்டும் அடித்துக் கொண்டன. வெளியேறும்படி அரசாங்கம் ஆணையிட்ட போதே ஊரை விட்டு வெளியேறியிருக்கவேண்டும். சரியாகத் திட்டமிட்டுக்குடும்பத்தை வெளியே அழைத்துச் செல்லவில்லையோ ?.

என்ன அறிந்து என்ன பயன்.? 'சரி! நாளைப் பிரச்சினை, நாளைக்கு ...'.

"ஏங்க! புழக்கடைக்கதவு அடிக்கிறது. கொஞ்சம் பாருங்க!". கதவைச் சார்த்தின போது, பின்புறம் நண்பர் நாய்களுக்காக கட்டிய மரத்திலான சிறு வீடுஅந்த இடத்தில் இல்லாத மாதிரி ஒரு பிரமை. சுழன்றடித்த மனக் காற்றுடன், சுழலும் நினைவுகளுடன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எனது டைரியைஎழுதிவிட்டுப் பிறகுத் தூங்கிப் போனேன்; எனது மொத்த வீட்டையையும் தூக்கியடிக்கப் போகும் அந்தச் சூறாவளிப் புயல் நெருங்குவதையறியாமல் ...???

- கிருஷ்ணக்குமார்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. அவசர உதவி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X