1. சொல் அறியா மலர்
Visai
-Staff
கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005
| புனிதாவைப் பார்த்தாயா
என
பால்யனிடம் வினவினேன்
ஞாபகத்தின் மடிந்த பக்கங்கள்
கசியும் வாசனையால்
நீட்சி அடைய
சேர்ந்தே வருகிறது
பூக்களின் சுகந்தமும்
புனிதாவின் நினைவுகளும்
பனியில் பதுங்கும் சூரியன்
இவள் விரல்பட்டு விரியும்
மார்கழி முற்றங்கள்
வர்ணத்தின் துகள்களாய்
கைகளின் மாயத்தில்
முகம் பூசிக் கொள்ளும்
தூக்கக் கலக்கத்தில்
திறக்கும் விடியலில்
மலரின் வனத்தினுள்
இவளின் சுவடுகளே முதலில் பதியும்
ஒற்றைப் பூவுக்கே
கையறு நிலையில்
யாவரும் விழித்திருக்க
பரிச்சயமானவற்றை பரிசாக பகிர்ந்தளித்து
அதிசய அரும்புகளுடன்
வெளிப்படுவாள் வனத்தின் விளிம்புகளில்
ஊரையே
ஒற்றைப் பூவாக சுருட்ட
வாசனையின் வசீகரம்
நாசிகளில் ஒட்டிக் கொள்ளும்
ஏழ்நிற இதழ்கள் விரிந்த
சொல் அறியா மலரொன்று
இவள் வீட்டு முற்றத்தில்
வர்ணக் கோலங்களில் கொலு அமர
குழந்தைகளின் ஏக்கங்கள்
பூக்களில் படியும்
நிறங்களை அரசாளும்
அரும்பும் விருட்சம்
அறிய முடியா ரகசியமாய்
வனத்தினுள்
எங்கோ கிளைத்திருக்க
புனிதா எங்கே
என்ற
பால்யனிடம்
பறித்த மலரொன்று
நிறங்களை உதிர்த்துவிட்ட
ஒருநாளின் பின்
யாரும் பார்த்ததில்லை என விளம்ப
மலர் வனத்தினுள்
வாசனை விசித்த காற்றில்
பூவுக்கு இரஞ்சும்
குழந்தைகளின் அரூபஒலி
அங்கோர் புதிர்பாதையில்
கிளை தெரியா விருட்சத்தில்
பூக்காத மலரொன்றில்
மறைகிறாள்
பூக்களின் அரசியாக 2. கூந்தலின் வரிகளில் சுழற்றி வீசுகிறாள்
நெடிய இரவினை
விரி கூந்தலின்
ஒரு பூவென
கலந்த கனவுகளும்
கலையாத இருளும்
கூந்தலின் வரிகளாகி
சூரியனை சுற்றி இழுக்க
ஒளி திசை நோக்கி
ஆங்காரமாய் எழுகிறது
மென்கூந்தலில்
உதிரும் மலரில் மறைகிறது
மோனத்தின் நிலவு
யார் யாரோ
உதிர்வுகொள்ள
சிக்கலெடுக்கும் அதன் சிகையில்
சூன்யமாய் நீள்கிறது
பகல்
இருளின் ஊற்றுக்
கண்தேடி
சுருளும் குழலில்
கட்டுகிறாள் இரவையும்
மாயத்தில்
நட்சத்திரங்களையும். | |