For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு நாவல் ஒரு கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

கலாச்சார மாத இதழ் - ஜூன் 2005

கோலம்

முனைவர் தொ.பரமசிவன்

கோலம் என்னும் வரைகலை வெளிப்பாடு தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்ததாகும்.

கோலம் என்ற சொல் சங்க இலக்கியங்களின் மிகப் பிற்பட்டதான பரிபாடலில்தான் முதன் முதலாகத் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்ககேழற் கோலம் என்ற தொடராகக் காணப்படுகிறது. பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தில் மூன்று இடங்களில் இத்தொடர் பயின்று வருகிறது."மாதவி தன் கோலம் தவிர்ந்திருந்தாள் "மணமகளைப்போல யாழ் கோலம் செய்யப்பட்டிருந்தது " மாதவி எழுதுவரிக்கோலம் என்றஆட்டத்திற்காகக் கோலம் செய்திருந்தாள் "பழங்குடிமக்கள் குமரிப்பெண்ணைத் தெய்வக்கோலம் செய்திருந்தனர். இவையே சிலப்பதிகாரத்தில் கோலம்என்ற சொல் வருமிடங்களாகும். ஆடுமகளுக்கும், மணமகளுக்கும், இசைக்கருவிக்கும் செய்யப்பட்ட ஒப்பனைகளையே -அதாவது கலைவெளிப்பாடுகளையே- சிலப்பதிகாரம் கோலம் என்றது.

இன்று கோலம் என்பது அரிசிமாவினாலும் சுண்ணாம்புப்பொடியினாலும், பல வண்ணப்பொடிகளாலும் தரையில் இடப்படும் கோலத்தைக் குறித்துநிற்கின்றது. தரையில் இடப்படும் கோலம், வீட்டின் தலைவாயில், வீட்டிற்குள் தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படும் இடம், கோயில்கள் ஆகியனவற்றில்இடப்படுகின்றது. எனவே கோலம் என்பது அழகுணர்ச்சி சார்ந்த வரைகலை வெளிப்பாடாக மட்டுமின்றி புனிதத்தன்மை அல்லது சடங்கியல்தன்மையுடையதாகவும் விளங்குகின்றது என்பதை உணரலாம்.

தொல் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று தரையைப் புனிதப்படுத்துவதாகும். தூய்மைப் படுத்தப்படாத தரை தெய்வங்கள் காலூன்றி நிற்பதற்குஏற்றதன்று. தெய்வங்களும் வானவர்களும் பூமிக்கு (மண்ணுலகிற்கு)வரும்போது தரையினை மிதிப்பதில்லை. அவதாரமான இராமனும் கிருஷ்ணனும்மட்டுமே வெறுங்காலால் பூமியை மிதித்தவர்களாவர்.

"மேலொரு பொருளுமில்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி

கால் தரை தோய வந்து கட்புலக் குற்றதம்மா

என்பது கம்பராமாயணம். இதன் பொருள் பொதுவாகத் தெய்வங்கள் கால் தரைதோய வருவதில்லை என்பதாகும். தெய்வங்கள் வானுலகத்தில் அல்லதுமண்ணுலகத்தில் மரங்களில்தான் வாழும். தரையில் மனிதர்களைப்போல வாழ்வதில்லை. மனிதனின் விருப்பத்திற்கும், தேவைக்குமேற்ப மண்ணிற்கு வரும்தெய்வங்களுக்கு மனிதன் "புனித இடங்களை " உருவாக்குகிறான். தெய்வச்சிலைகள் அனைத்தும் கவிழ்ந்த தாமரையின் மீதே (பத்ம பீடத்தின்மீதே)அமைக்கப்படுவதன் காரணமும் இதுதான். நாட்டார் வழிபாட்டு மரபிலும் தெய்வத்தின் கால்கள் தரையிலே பதியக்கூடாது என்பதற்காகப்பூடங்கள் (பீடங்கள்) அமைத்துள்ளனர். பீடங்களின் உச்சிப்பகுதியில் கவிழ்ந்ததாமரை போன்ற வடிவம் காட்டப்பட்டிருப்பதனைக் கூர்ந்து கவனித்தால்அறிந்து கொள்ளலாம்.

படங்களோ, சிலைகளோ வீட்டுப்புழக்கத்தில் இல்லாத காலத்தில் வீட்டிற்குள் தெய்வத்தைத் திருநிலை கொள்ள வைப்பதற்கு குத்துவிளக்கு மட்டுமேஇருந்தது. குத்துவிளக்கும் கூட மணைப்பலகை அல்லது மண்ணால் செய்த சிறு பீடம் அல்லது கோலத்தின் மீதுதான் வைக்கப்படுகிறது. வெளியிலும் குத்து விளக்குஇல்லாத நிலையிலும் வீட்டிற்குள்ளும் தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படுவதுண்டு. அப்போதெல்லாம் அந்த இடங்களில் கோலங்கள் இடப்படுகின்றன.செம்மண் அல்லது பசுஞ்சாணத்தால் ஆன பிள்ளையாரும் கோலத்தின் பகுதியில்தான் வைக்கப்படுகின்றது.

கோலம் இடப்படுமுன் தரைப்பகுதி தண்ணீராலோ, சாணத்தாலோ தூய்மை செய்யப்படுகின்றது. இதன்மீதே கோலங்கள் இடப்படுகின்றன. இன்றளவும்தலைவாசல் கோலமும் தரையில் தண்ணீர் தெளித்தப்பின்னரே இடப்படுகின்றது. கோலம் இடப்பட்ட இடங்களையே சங்க இலக்கியங்கள் "களம் எனக்குறிப்படுகின்றன. குறிப்பாக முருகப்பூசாரி வெறியாடுமிடங்கள் களமாக அமைகின்றன. இக்களத்தின் மீதே வேலனாகிய முருகப்பூசாரி நின்றுஆடுகின்றான். கேரளத்தில் இம்மரபு இன்றும் உயிரோடுள்ளது. இதற்குக் களமெழுதுதல் அல்லது களமெழுத்து என்று பெயர்.

களமெழுத்து என்பது தூய்மை செய்யப்பட்ட இடத்தில் வரையப்பட்ட கோலத்தையே குறிக்கின்றது. சர்ப்பந்துள்ளல் போன்ற வழிபாட்டு நடனங்கள் பலவண்ணப்பொடிகளால் வரையப்பட்ட களத்தின் மீதே நடத்தப்பெறுகின்றன. வேலன் தை இய வெறி அயர் களனும் என்று திருமுருகாற்றுப்படை முருகப்பூசாரிவேலன் ஆடும் களத்தைக் குறிப்படுகின்றது.

இலக்கியங்கள் குறிப்படும் களன் இழைத்தல் என்ற சொல் தமிழ்நாட்டில் இன்று மறைந்து போய்விட்டது. அதற்கு மாற்றாகவே அழகு படுத்துதல்,ஒப்பனை செய்தல் என்ற பொருளுடைய கோலம் என்ற சொல் புழக்கத்தில் வந்துள்ளது. தலைவாசல் கோலம் என்பது மேலிருந்து இறங்கும் தெய்வம்மண்ணில் கால் பதிப்பதற்கு இடப்பட்ட முதல் களமாகும். வீட்டிற்குள் இடப்படும் கோலம் தெய்வத்தைத் திருநிலைப்படுத்தச் செய்யப்பட்ட இடமாகும்.

கோலம் என்பது ஏன் பெண்களுக்கு மட்டுமேயுரிய கலை, சடங்கியல் வெளிப்பாடாக அமைகின்றது என்பது எஞ்சி நிற்கும் கேள்வியாகும். மனிதகுலவரலாற்றில் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்பது மானிடவியல் காட்டும் உண்மையாகும். சங்க இலக்கிங்களில்முருகனுக்கு வேலனைப்போலவே புலைத்தியும் பூசாரியாக இருந்துள்ள செய்தி காணப்படுகின்றது. அதனால்தான் இன்னமும் தெய்வத்தின் ஆற்றலைத் தன்உடலில் இறக்கி ஆடும் சாமியாட்டம் பெண்களுக்கு விலக்கப்பட்டதாக அமையவில்லை.

கோலம் என்னும் வரைகலையின் தோற்றம் பெண்களைச் சார்ந்தது என்பதையே மனிதகுல வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. கோலம் வரைதல் ஒருகடமையாகவும் உரிமையாகவும் பெண்களுக்கு அமைந்தது இப்படித்தான். எனவேதான் வறுமைப்பட்ட குடும்பங்களில் கூட கோலமிடுவதற்கு ஒருபிடிச்சுண்ணாம்புப்பொடி இன்னமும் இருக்கின்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X