ஆனி அமாவாசை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி - காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை
ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஜூலை 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனி மாத பிரதோசம், அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு நான்கு நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி புதன்கிழமை முதல் ஜூலை 10ஆம் தேதி சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காரையாறு சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. சித்தர்கள் பூமி என போற்றப்படும் இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பங்குனி அமாவாசை வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கவே பக்தர்கள் மலையேறவோ சாமி தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஜூலை 7ஆம் தேதி புதன்கிழமை முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொரிமுத்து ஐயனார் கோவில் செல்ல தடை
லாக்டவுனின் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று முதல் சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ள நிலையில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் செல்ல வனத்துறை தொடர்ந்து தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிப்பது குறித்து அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications