அக்.31 முதல் அதிர்ஷ்டம் தேடி வரும்.. குரு அதிசாரப் பெயர்ச்சியால் பணமழை, தொழில் வளர்ச்சி பெறும் 3 ராசிகள்
குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு எதிரிகள் எல்லாம் விலகி ஓடக்கூடிய காலகட்டமாக இருக்கும். 6 ஆம் அதிபதியான குருவே 11 ஆம் இடத்தில் அமர்ந்து அதிசாரமாக வருவதால் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள் உங்களிடம் பணத்தை மீண்டும் கொண்டு வந்து கொடுப்பார்கள். எதிரிகள் செய்யும் கெட்டது கூட உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.
கடன் அடைவதற்கான அமைப்பு உள்ளது. நெருங்கிய உறவினர்களின் பிரச்சனைகள் தீரும். நல்லவர்கள் போல உங்களுடன் இருந்தவர்கள் தன்னால் விலகுவார்கள். நல்லவர்கள் உங்களுடன் மீண்டும் சேரும் அமைப்பு உள்ளது. நேர்காணல்களில் வெற்றி பெறுவீர்கள். எதை முயற்சி செய்தாலும் அதை பெரியளவில் செய்வது நல்லது. தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் சார்ந்த கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
பாட்னர்ஷிப்பில் இருக்கும் பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். வெளிநாட்டு கிளைன்டுகள் மூலமாக லாபம், யோகம் நிச்சயமாக கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்து பெரிய பிரச்சனைகள், விவாகரத்து போன்ற விஷயங்கள் இருப்பினும் கூட மீண்டும் சேரக்கூடிய அமைப்பு உள்ளது. கணவன், மனைவி பேசி சமாதானமாக இந்த 3 மாதங்கள் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும் யோகம் உண்டாகும். விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து பொருள்களை வாங்குவது நல்லது. பொருளாதார தேவை, முக்கியத்துவத்தைப் பற்றி குடும்பத்திடம் தெளிவாக பேசிக் கொள்வது நன்மை பயக்கும். வரும் 3 மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று லட்சுமி குபேர பூஜையை முறையாக செய்வது நல்ல பொருளாதார முன்னேற்றத்தையும், தன லாபத்தையும் கொடுக்கும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு குரு 10 ஆம் இடத்துக்குச் செல்கிறார். நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும். யோகாதிபதி குரு என்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலுக்கான கடன்கள், இடம் கிடைக்கும். திட்டங்களை செயல்படுத்தக்கூடிய காலகட்டமாக இந்த 3 மாதமாக இருக்கும். தொழில் மூலமாக நல்ல தன லாபங்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.
படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பிதுர் தோஷம் எல்லாம் நிவர்த்தியாகும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை செய்ததெல்லாம் போது தொழில் தொடங்கலாம் என்கிற எண்ணம் ஏற்படும். தொழில் தொடங்குபவர்களுக்கு எடுத்த உடனேயே நல்ல வெற்றிகள் கிடைக்கும்.
இந்த 3 மாத காலகட்டத்தில் முயற்சி செய்தால் நிச்சயமாக திருமணம் நடக்கும் அமைப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். காசு புழக்கம் அதிகமாக இருக்கும். கையில் காசு வைத்து செலவு செய்வீர்கள். தொழில், வேலை மூலமாக நல்ல மாற்றம், முன்னேற்றம் காணப்படும். வேலையில் நல்ல சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் அமைப்பு உள்ளது. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள். சம்பாதியத்தை அதிகப்படுத்தக்கூடிய நல்ல காலகட்டம்.
பல் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆண்கள், பெண்கள் இருவரும் சஷ்டி திதியில் விரதம் இருப்பது நன்மை பயக்கும். பொருளாதார முன்னேற்றம், குழந்தை பாக்கியத்திற்கு வளர்பிறை சஷ்டியிலும், நோய் நொடிகள், கடன் தீர விரும்புவோர் தேய்பிறை சஷ்டியிலும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். முருகப் பெருமான் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு குரு பகவான் 9 ஆம் இடத்துக்கு வருகிறார். இதுவரை படாத துன்பங்களை, வெளியில் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். தற்போது, பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் வருவதால் வயதிற்கு தகுந்த நல்ல பலன்கள் கிடைக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்கள் வாழ்க்கைக்கான முன்னேற்றங்களும் அனைத்தும் நடக்கும் காலகட்டம்.
மாணவர்களுக்கு படிப்பு நன்றாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் ஏற்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத் தொழிலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கு அதனைத் தொடங்குவதற்கான காலகட்டமாக இருக்கும். புதிய தொழிலிலும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். அப்பாவின் மூலமாக பொருளாதாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பார்ட்னர்ஷிப்பை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ஆன்மிகம், கல்வி, நகை, நிதி சார்ந்த தொழில்களில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. இ-காமர்ஸ் பிசினஸில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை அமைப்புகளில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும். 9க்கு குரு பகவான் வருவதால் பூர்வ புண்ணிய பலன்களால் நல்ல கணவன், மனைவி அடைவதற்கான வாய்ப்பு ஏற்படும். நீண்ட காலமாக உறவில் இருப்பவர்கள் வீட்டில் சொல்லி திருமணம் செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
அபிராமி அந்தாதியை தினமும் கேட்பது, படிப்பது ஏற்றத்தைத் தரும். தினந்தோறும் குங்குமத்தை நெற்றியில் வைப்பது நன்மை பயக்கும். அப்பாவின் முன்னோர் படங்களை வைத்து வழிபாடு செய்வது, பரிகாரத் தலங்களுக்குச் செல்வது தெய்வத்தின் பரிபூரண அருளைக் கொடுக்கும். வியாழக்கிழமை தோறும் மெளன விரதம் இருப்பது நல்லது. யானை, குதிரைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது மேன்மையைத் தரும். ஸ்ரீ முஷ்ணம் சென்று வழிபாடு செய்வது பூர்வ ஜென்ம பாவங்களை நீக்கும்.


Click it and Unblock the Notifications
