சுக்கிரனால் வரும் சுகர்... சர்க்கரை நோய் தீர்க்க பரிகாரங்கள் #Astrology
நோய்களுக்கும் ஜோதிடத்திற்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. ஜாதகத்தில் ராசிக்கட்டங்களில் அமர்ந்துள்ள கோள்களைப் பொருத்து நோய்கள் ஏற்படுகின்றன.
சென்னை: சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. ஜாதகத்தில் குரு, சுக்கிரன் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்து உங்களின் நோய்க்கான காரணத்தை படிங்க.
நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். மனிதர்கள் வசதியாக வாழும் யோகத்தை தருவது சுக்ரன் ஆகும். தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே.

கிரகங்களினால் நோய் பாதிப்பு
குருவும் சுக்கிரனும் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்து விட்டால் நல்லதே நடக்கும். அதே நேரத்தில் குரு, சுக்கிரன் மறைந்திருந்தாலோ மகரத்தில் குரு நீசமடைந்திருந்தாலோ கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைந்திருந்தாலோ ஜாதகருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

வீடு, வசதி, வாகனம்
உலக வாழ்கையில் இன்பமும் செளபாக்கியங்களையும் சுக போக செளரியங்களையும் தருபவன் சுக்ரன். வாகன வசதிகளை அளிப்பவர். சுக்கிரனின் அருள் யோகம் இருந்தால்தான் ஒருவருக்கு விதவிதமான வாகனங்கள், ஆடம்பரகார்கள் சொகுசு வண்டிகளில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். சொந்த வீடு அளிப்பவரும் இவர்தான், கலை உலகில் சிறப்பான நிலையை அளிப்பவர்.

யோகபலன்
ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற சுக்கிரன் கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, ஆண்களுக்கு வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார்.

ராஜயோக பலன்
சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

சுகவாசி வாழ்க்கை
அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுகவாழ்க்கை கிட்டும். குரு மற்றும் சுக்கிரன் இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள்.

நீரிழிவு நோய்
குரு ஆட்சி உச்சம் பெற்றவர்களுக்கும் நீசமடைந்தவர்களுக்கும் வக்ரம் பெற்றவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குருஆட்சி உச்சம் பெற்றவர்கள் சர்க்கரை நோய் வந்தாலும் எதிர்ப்பு சக்தி பெற்று மருந்து மாத்திரைகளுடன் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் குரு நீசமும் வக்ரமுமடைந்தவர்களுக்களுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் பாதிப்பு ஏற்படாது.

சுக்கிரன் மறைவு
எந்த லக்னமானாலும் அதன் ஆறாம் வீட்டில் குருவும் சுக்ரனும் ஆறு/எட்டு/பன்னிரெண்டு அதிபதிகளாகி அசுபத்தன்மை பெற்று நிற்பது. கால புருஷனுக்கு பன்னிரெண்டாம் வீடாகிய மீனத்தில் குரு ஆட்சி பெறுவது அல்லது சுக்கிரன் உச்சமடைவது சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது.

நவகிரகங்களுக்கு விளக்கு
சுக்கிரன் 12ல் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு ஏற்படும். சர்க்கரை நோயினால் ஏற்படும் கண்கள் சம்பந்தமான கோளாறுகள், மற்றும் சர்க்கரை நோய் நிவர்த்தியாகும். பரிகார ஸ்தலங்கள், விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம்.

பசுவிற்கு சப்பாத்தி
வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சர்க்கரை, பாசிப்பருப்பு, வாழைப்பழம் சேர்த்த இனிப்பு செய்து கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். வெள்ளை நிற பசுவிற்கு வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு சப்பாத்தி செய்து கொடுக்கலாம். இதன் மூலம் மரபு ரீதியாக ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

சுக்கிரபகவான்
ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். கஞ்சனூர் சென்று தேவியருடன் அருள்பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் திருமண தோஷங்களும் நீங்கும். சென்னை அருகே மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள வெள்ளீஸ்வரர் மற்றும் மயிலாப்பூரில் வெள்ளீஸ்வரர் ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை பிரார்த்தித்து வழிபட குடும்பத்தில் நலங்களும், வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும்.

வைத்தியநாதசாமி
செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய் கிழமையில் சென்று தரிசனம் செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும். இத்துடன் திருவாரூர் மாவட்டம் கோயில் வெண்ணியில் உள்ள அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும்.

மகிழ்ச்சியே நோய் தீர்க்கும் வழி
மகாலட்சுமி ஆலயத்தில் 9 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு வெள்ளை நிற ஆடை தானமாக அளிக்கலாம். நெய், சர்க்கரை ஆகியவைகளை கோவிலுக்கு தானமாக அளிக்கலாம். சரியான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, எதற்கும் கலங்காத மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும் எந்த நோயையும் எதிர்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications