சாமி தரிசனத்துக்கு தடை: பழனி திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள்...அரோகரா முழக்கம்
பழனி திருச்செந்தூரில் பாதயாத்திரையாக வந்த முருக பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு தரிசனத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து பழனி மற்றும் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதயாத்திரையாக வந்த முருக பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழனி மலைக்கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் புகழ்பெற்ற தலங்களில் இரண்டாம் படைவீடான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரும், மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி எனப்படும் பழனி மலையும் மிக முக்கியமான தலங்களாகும். இவ்விரு கோயில்களிலும் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், தைப்பூசத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் முருக பக்தர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதேபோல் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்றும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசிப்பதுண்டு.
தைப்பூசத் திருவிழாவுக்காக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாகவும் காவடி சுமந்து கொண்டும் பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதே போல் விருதுநகர் மாவட்டம் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.

பழனி தைப்பூச திருவிழா
இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா பழனியில் வரும் 12ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவமும் அதைத் தொடர்ந்து 18ஆம் தேதியன் தேர்த்திருவிழா வைபவமும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளைக் கண்டு தரிசிக்க வேண்டியே பல ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு திசைகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காவடிகள் எடுத்துக்கொண்டும் வருவதுண்டு.

பாதயாத்திரை
தற்போது நாடு முழுவதும் ஓமைக்ரான் என்னும் கொரானா நோய்த் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், முருகனின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பழனி மற்றும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நேற்று தமிழக அரசு கொரானா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதித்துள்ளது.

பழனிமலையில் குவிந்தனர்
ஞாயிற்றுக் கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் உத்தரவு பாதயாத்திரையாக வந்துகொண்டிருக்கும் பக்தர்களை குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பாதயாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள் பாதியில் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு, பேருந்துகளில் ஏறி பழனிக்கு வந்து, மலைக்கு படையெடுத்தனர்.

திடீர் கூட்டம் அதிகரிப்பு
இதனால் பழனி பேருந்து நிலையம் முதல், மலையடிவாரம், கிரிவலவீதி, சன்னதி வீதி, மலைப் பாதை மற்றும் படிப்பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் மலைக்கோயிலின் வெளிப்பிரகாரத்திலும், தரிசன பாதைகளைக் கடந்தும் பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது, சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பழனியில் திடீரென பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முருகபக்தர்கள்
அதே போல் திருச்செந்தூரிலும் நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது மார்கழி மாதம் என்பதால், தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதைத் தொடர்ந்து வழக்கமான கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது. மார்கழி மாதத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாகவும், ஐயப்ப பக்தர்களும் வருவதுண்டு.

பேருந்தில் பயணம்
இந்நிலையில், ஓமிக்ரான் கொரோன நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்களுக்கு வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், பாதயாத்திரையாக வந்துகொண்டிருந்த பக்தர்கள் செய்வதறியாது திகைத்தனர். வேறு வழியில்லாமல், உடனடியாக பெரும்பாலான பக்தர்கள் நடுவழிகளில் பேருந்துகளில் ஏறி திருச்செந்தூருக்கு விரைந்து வந்தனர். சில பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டும், அலகு குத்திக்கொண்டும் வந்தனர். இதனால் திருச்செந்தூர் கோயில் வளாகமே திருவிழாக்கோலம் பூண்டது. திருச்செந்தூர் முருகனை விரைவாக தரிசிக்க வேண்டி, ரூ.250, ரூ100 கட்டண தரிசனம் மற்றும் இலவச தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.












Click it and Unblock the Notifications