Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருட வாகனத்தில் அழகர்... மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் - விடிய விடிய தசாவதார கோலம்

மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சியை வைகை கரையோரம் புதிய சாலையில் நின்று பக்தர்கள் தரிசித்தனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்றைய தினம் வண்டியூர் அருகே உள்ள தேனூர் மண்டபத்தில் 62 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இதனை வைகை கரையோரம் புதிய சாலையில் நின்று பக்தர்கள் தரிசித்தனர்.

மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிப்பதை மையமாகக்கொண்டு தான் சித்திரைத் திருவிழா நடக்கிறது. சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' அதாவது தவளையாக போகக் கடவாய்! என சாபமிட்டார்.

உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர்.

அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

வைகையில் இறங்கிய கள்ளழகர்

வைகையில் இறங்கிய கள்ளழகர்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கள்ளழகர் தங்கப்பல்லாக்கில் கடந்த 14ஆம் தேதி மதுரைக்கு வந்தார். அவருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. இரவு தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கினார். அதிகாலையில் நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனையடுத்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான மக்கள் கோவிந்தா முழக்கமிட்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

மண்டூக மகரிஷி சாப விமோசனம்

மண்டூக மகரிஷி சாப விமோசனம்

சாப விமோசன நிகழ்ச்சியானது, வண்டியூர் வைகை ஆற்றின் நடுவில் உள்ள தேனூர் மண்டபத்தில் நடப்பது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த மண்டபம் காலப்போக்கில் சிதிலமடைந்தது. இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேனூர் மண்டபம் வைகை ஆற்றின் நடுவே காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. இந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடப்பதில்லை.

62 ஆண்டுகளுக்குப் பிறகு தேனூர் மண்டபத்தில் விழா

62 ஆண்டுகளுக்குப் பிறகு தேனூர் மண்டபத்தில் விழா

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த மண்டபத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.40 லட்சம் செலவில் தேனூர் மண்டபம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 62 ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள பழமையான தேனூர் மண்டபத்தில் இன்று கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு தீப ஆராதனை நடந்தது.

பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் தரிசனம்

இதன்பின் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அதன்பேரில் நாரை பறக்கவிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள், வழக்கமாக வைகை ஆற்றுக்குள் கும்பல் கும்பலாக நிற்பார்கள். இதுவரை தேனூர் மண்டபத்தின் அருகில் வைகை கரையானது, புதர்மண்டிக்கிடக்கும். ஆனால் இந்த ஆண்டு, வைகை வடகரையில் அகலமான சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாப விமோசன நிகழ்ச்சியை பக்தர்கள் இந்த சாலையில் நின்று கண்டு களித்தனர்.

தசாவதார காட்சி

தசாவதார காட்சி

நேற்றைய தினம் இரவு ராமராயர் மண்டபத்தை வந்தடைந்த அழகர், அங்கு விடிய, விடிய தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மச்சம், கூர்மம், வராகம், வாமனன், நரசிம்மம், உள்ளிட்ட பத்து வித அலங்காரங்களில் காட்சி கொடுத்த அழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பின்னர் மோகினி அவதாரத்திலேயே மண்டகப்படிகளில் தங்கியபடி இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்தார். அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து புஷ்ப பல்லாக்கில் கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+