சனி பெயர்ச்சி பலன் 2023..ஏழரை சனி..யாருக்கு எப்போ? பதற்றம் வேண்டாம்..இதை செய்தால் தப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சனி பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் நிகழ உள்ளது. சனிபகவான் ஜென்மச்சனியாக கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பயணிக்கும் இடத்தை பொறுத்தும் பார்க்கும் இடத்தை பொறுத்தும் பலன்கள் கிடைக்கும். சனி பார்வை சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. நடப்பில் இருக்கும் திசை,புத்திகளில் பலம்/பலவீனத்தில் மாற்றம் இருக்கும். இந்த சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்றும் என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் கணித்துள்ளார் திருப்பூர் ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்,திருவருள் ஜோதிடகல்வி மைய மாணவர் ஜோதிட சாம்ராட் P.P.சதீஸ்குமார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சியானது இந்த வருடம் நிகழவுள்ளது. தை மாதம் 3 ம் தேதி ஜனவரி 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி 04 நிமிடத்தில் (28 நாழிகை 30 வினாடி) கர்மகாரனான சனிபகவான் கடந்த இரண்டரை வருடங்களாக மகர ராசியில் பயணித்துக் கொண்டிருந்தவர்,அடுத்து தன்னுடைய மூலத்திரிகோண ராசியாகிய கும்ப ராசியில் அவிட்டம் 3 ம் பாதத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார்

கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் சனிபகவான் அடுத்த இரண்டரை ஆண்டுகள் அதாவது 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி பங்குனி மாதம் 15 ம் தேதி இரவு 9.45 வரை பயணிக்க உள்ளார். சனிபகவான் கும்ப ராசியில் அவிட்டம் 3,4 ம் பாதங்களிலும்,சதயம் 4 பாதங்களிலும்,பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களிலும் நேர்கதியிலும்,வக்ரகதியிலும் பயணிக்க உள்ளார்.

அவிட்டம் 3 ம் பாதத்தில் 17/1/2023 முதல் 14/2/2023 வரை 29 நாட்கள் பயணிக்கும் சனி பகவான் அவிட்டம் 4 ம் பாதத்தில் 15/2/2023 முதல் 14/3/2023 வரை 28 நாட்களும்,15/10/2023 முதல் 23/11/2023 வரை 40 நாட்களும் சேர்த்து மொத்தம் 68 நாட்கள். மொத்தம் 97 நாட்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார் சனி பகவன்.

Sani Peyarchi Palan 2023 Tamil: Sani bhagavan Parvai palan and Parikaram

சதயம்

சதயம் முதல் பாதத்தில் 15/3/2023 முதல் 15/4/2023 வரை 32 நாட்களும்,23/8/2023 முதல் 14/10/2023 வரை 53 நாட்களும்,24/11/2023 முதல் 10/1/2024 வரை 48 நாட்களும் சேர்த்து மொத்தம் 133 நாட்கள்.சதயம் 2 ம் பாதத்தில் 16/4/2023 முதல் 22/8/2023 வரை 129 நாட்களும்,11/1/2024 முதல் 9/2/2024 வரை 30 நாட்களும் சேர்த்து மொத்தம் 159 நாட்கள். சதயம் 3 ம் பாதத்தில் 10/2/2024 முதல் 8/3/2024 வரை 28 நாட்கள். சதயம் 4 ம் பாதத்தில் 9/3/2024 முதல் 5/4/2024 வரை 28 நாட்களும்,3/10/2024 முதல் 27/12/2024 வரை 86 நாட்களும் சேர்த்து மொத்தம் 114 நாட்கள். மொத்தம் 434 நாட்கள் சதயம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார்.

பூரட்டாதி

பூரட்டாதி முதல் பாதத்தில் 6/4/2024 முதல் 11/5/2024 வரை 36 நாட்களும்,19/8/2024 முதல் 2/10/2024 வரை 45 நாட்களும்,28/12/2024 முதல் 1/2/2025 வரை 36 நாட்களும் சேர்த்து மொத்தம் 117 நாட்கள். பூரட்டாதி 2 ம் பாதத்தில் 12/5/2024 முதல் 18/8/2024 வரை 99 நாட்களும்,2/2/2025 முதல் 1/3/2025 வரை 28 நாட்களும் சேர்த்து மொத்தம் 127 நாட்கள். பூரட்டாதி 3 ம் பாதத்தில் 2/3/2025 முதல் 29/3/2025 வரை 28 நாட்கள். மொத்தம் 272 நாட்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார்.

2025 வரை சனியின் பயணம்

தை மாதம் 3 ம் தேதி செவ்வாய்க்கிழமை 17/1/2023 ல் கும்ப ராசிக்கு வரும் சனிபகவான் இரண்டரை ஆண்டுகள் சுமார் 803 நாட்கள் அதாவது 2025 பங்குனி மாதம் 15 ம் தேதி (29/3/2025) இரவு 9.45 வரை கும்ப ராசியில் பயணிக்க உள்ளார்.ஏற்கனவே அதிசாரப் பெயர்ச்சியாக 29/4/2022 சித்திரை மாதம் 16 ம் தேதி முதல் 12/7/2022 ஆனி மாதம் 28 ம் தேதி வரை 75 நாட்கள் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வந்து பயணித்துள்ளார்.ஆக கும்ப ராசியில் சனிபகவான் பயணிக்கும் காலங்கள் 803+75 = 878 நாட்கள்.அதிசாரப்பெயர்ச்சியான 75 நாட்கள் போக மீதம் 803 நாட்கள் இனிவரும் காலங்களில் பயணிக்க உள்ளார்.

Sani Peyarchi Palan 2023 Tamil: Sani bhagavan Parvai palan and Parikaram

சனியின் வக்ர சஞ்சாரம்

இந்த இரண்டரை வருடங்கள் கும்ப ராசியில் பயணிக்கக்கூடிய சனிபகவான் வக்ரம் அடையக்கூடிய காலங்கள்
2023 ல் ஆனி மாதம் 3 ம் தேதி (18/6/2023) சதயம் 2 ம் பாதத்தில் வக்ரமடைந்து சுமார் 140 நாட்கள் வக்ரநிலையிலிருந்து பின்பு ஐப்பசி மாதம் 18 ம் தேதி (4/11/2023) அவிட்டம் 4 ம் பாதத்தில் வக்ர நிவர்த்தி பெறுகிறார். 2024 ல் ஆனி மாதம் 15 ம் தேதி (29/6/2024) பூரட்டாதி 2 ம் பாதத்தில் வக்கிரமடைந்து சுமார் 140 நாட்கள் வக்ரநிலையில் இருந்து பின்பு ஐப்பசி மாதம் 30 ம் தேதி (15/11/2024) சதயம் 4 ம் பாதத்தில் வக்ர நிவர்த்தி பெறுகிறார்.

ஏழரை சனி

இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முழுமையாக விடுபட போகிறார்கள்.அடுத்து மகர ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி முடிவடைகிறது. அதாவது ஏழரை வருடங்களில் 5 வருடங்கள் முடிந்து கடைசி இரண்டரை வருடமான பாதச்சனி தொடங்குகிறது. அடுத்து கும்ப ராசிக்காரர்களுக்கு விரயச்சனி முடிந்து ஜென்மச்சனி தொடங்குகிறது. அதாவது ஏழரை வருடங்களில் முதல் இரண்டரை வருடங்கள் முடிந்து நடுப்பகுதி இரண்டரை வருடங்களான ஜென்மச்சனி நடப்பில் வருகிறது. அடுத்து மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை வருடகாலம் தொடங்குகிறது. அதாவது முதல் பகுதியான விரயச்சனி தொடங்குகிறது.

Sani Peyarchi Palan 2023 Tamil: Sani bhagavan Parvai palan and Parikaram

அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி

அடுத்து அர்த்தாஷ்டமச்சனி இரண்டரை வருடங்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு முடிந்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொடங்குகிறது. அடுத்து கண்டச்சனி இரண்டரை வருடங்கள் கடக ராசிக்காரர்களுக்கு முடிந்து சிம்ம ராசிக்காரர்களுக்கு தொடங்குகிறது. அடுத்து அஷ்டமச்சனி இரண்டரை வருடங்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு முடிந்து கடக ராசிக்காரர்களுக்கு தொடங்குகிறது. இதில் ஏழரை சனியின் ஆதிக்கத்திற்குள் வரும் மகரம்,கும்பம்,மீனம் ராசிக்காரர்களும்,அர்த்தாஷ்டமச்சனியின் ஆதிக்கத்திற்குள் வரும் விருச்சிக ராசிக்காரர்களும்,கண்டச்சனியின் ஆதிக்கத்திற்குள் வரும் சிம்ம ராசிக்காரர்களும்,அஷ்டமச்சனியின் ஆதிக்கத்திற்குள் வரும் கடக ராசிக்காரர்களும் உங்கள் சுய ஜாதகத்தில் நடப்பு திசை மற்றும் புத்திநாதனின் நிலையை ஆய்வு செய்து அதற்கேற்ப பரிகாரங்கள் மற்றும் இறைவழிபாடுகளை கடைபிடிப்பது நல்லது.

சனி தரும் சந்தோஷம்

இந்த சனிப்பெயர்ச்சியானது மேஷம்,கன்னி,தனுசு ராசிக்காரர்களுக்கு உபஜெயஸ்தானங்களில் (3,6,11) பயணிப்பதால் உங்கள் சுய ஜாதகத்தில் நடக்கும் திசை மற்றும் புத்தியின் சுப பலத்திற்கேற்ப நற்பலன்களை அனுபவிக்கலாம். உங்கள் சுய ஜாதகத்தில் இந்த இரண்டரை வருட காலங்கள் என்ன திசை என்ன புத்தி நடக்கிறதோ அதற்கேற்பதான் நன்மை,தீமைகளை நீங்கள் அனுபவிக்கப்போகிறீர்கள். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மேற்சொன்ன ராசிக்காரர்களுக்கு லக்ன யோகாதிபதியின் திசையோ,புத்தியோ சுபத்தன்மையுடன் பலம் பெற்று லக்னம் மற்றும் ராசியோடு தொடர்பு கொண்டு நடப்பில் வந்தால் பாதிப்புகள் குறையும். அதாவது பாதிப்புகள் உணர முடியாத அளவிற்கு இருக்கும். மாறாக பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி திசையோ,புத்தியோ நடப்பில் வந்தாலோ,அல்லது 6,8,12 ம் பாவகங்களோடு தொடர்பு கொண்ட கிரகங்களின் திசையோ,புத்தியோ நடப்பில் வந்தால் பாதிப்புகள் உண்டாகும். அதாவது உணரக்கூடிய அளவிற்கு பாதிப்புகள் இருக்கும்.

Sani Peyarchi Palan 2023 Tamil: Sani bhagavan Parvai palan and Parikaram

தசாபுத்தி தரும் பலன்

மேற்சொன்ன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் மற்றும் ராகுபகவான் திசையோ,புத்தியோ சுபத்தன்மை அடையாமல் நடப்பில் வந்தால் கெடுபலன்களை ஏற்படுத்தும். வருமானத்தை கொடுக்கும் 2 ம் அதிபதி மற்றும் லாபத்தை கொடுக்கும் 11 ம் அதிபதிகளின் திசையோ,புத்தியோ எவ்விதத்திலும் பலவீனப்படாமல்,பலம் பெற்று சுபத்தன்மையோடு இச்சமயத்தில் நடப்பில் வந்தால் மேற்சொன்ன காலகட்டங்களை பொருளாதார ரீதியான சிக்கல்களில் சிக்காமல் கடந்து விடலாம். ஏனென்றால் பெரும்பாலும் சனிபகவானின் ஆதிக்கம் பொருளாதாரம் சார்ந்துதான் இருக்கும். அனைத்திற்கும் அடிப்படை பொருளாதாரம் தானே.

நட்சத்திர தேவதை வழிபாடு

சுய ஜாதகத்தில் திசை மற்றும் புத்தி நடத்தும் கிரகங்களின் வக்ர நிலை மற்றும் பலம்/பலவீனத்தை ஆய்வு செய்து அதற்கேற்ப பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகளை கடைப்பிடிப்பதே மிகச்சிறந்த தீர்வாகும். திசை மற்றும் புத்தி நடத்தும் கிரகங்கள் நிற்கும் நட்சத்திரங்களின் அதிதேவதை வழிபாடுகளை மேற்சொன்ன ராசிக்காரர்கள் கடைபிடித்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். ஏனென்றால் எந்த கிரகமும் தனித்து இயங்காது. நட்சத்திரங்களின் துணையோடுதான் இயங்க முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நன்மை,தீமை எதுவாக இருந்தாலும் கிரகங்களை இயக்கும் நட்சத்திரங்களின் மூலம்தான் நிகழும் . ஏனென்றால் கிரகங்களை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக நிற்பது அது நிற்கும் நட்சத்திரம்தான். பலவீனமான நட்சத்திரத்தில் எவ்வளவு பெரிய பலம் பெற்ற கிரகம் நின்றாலும் பலன் இல்லை. அதேபோல் பலம் பெற்ற நட்சத்திரத்தில் பலவீனமான கிரகம் நின்றாலும் அந்த கிரகம் இயங்கும் நிலை வேறு.

Sani Peyarchi Palan 2023 Tamil: Sani bhagavan Parvai palan and Parikaram

கும்ப ராசியில் சனியின் பயணம்

உதாரணத்திற்கு சனிபகவான் ஜென்மச்சனியாக கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் என்றால் கும்பராசிக்காரர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நற்பலன்களையோ,கெடுபலன்களையோ சனிபகவான் கொடுக்கப் போவதில்லை. ஏனென்றால் ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. நடப்பில் இருக்கும் திசை,புத்திகளில் பலம்/பலவீனத்தில் மாற்றம் இருக்கும். கும்பராசி என்றால் அந்த ராசிக்குள் அவிட்டம்,சதயம்,பூரட்டாதி என மூன்று நட்சத்திரங்கள் அடங்கும். இரண்டரை வருடங்கள் கும்பராசிக்குள் பயணிக்கும் சனிபகவான் இந்த மூன்று நட்சத்திரங்களை தொட்டுத்தான் பயணிக்க போகிறார். இயங்கப் போகிறார்.இரண்டரை வருட காலத்திற்கும் மேற் சொன்ன மூன்று நட்சத்திரங்களிலும் நேர்கதி மற்றும் வக்ரகதி நிலைகளில் பயணிக்கப்போகிறார். இந்த இரண்டு நிலைகளில் சனிபகவான் பயணிக்கும் போது நன்மை,தீமைகளில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் திசை மற்றும் புத்திக்கேற்பவும்,கிரகங்களின் வக்ரம்,பகை,அஸ்தங்கதம்,ஆட்சி,உச்சம்,நீசம் என்ற நிலைகளுக்கு ஏற்பத்தான் நன்மை,தீமைகளை சனிபகவான் வழங்குவார்.

கும்ப ராசி - அவிட்டம்

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் என்றால் உங்கள் ஜாதகத்தில் நட்சத்திர அதிபதியான செவ்வாயின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும். உங்கள் ஜாதகத்தின் ஜென்ம லக்கினத்திற்கு செவ்வாய் யார்? எந்த பாவகத்தில்,எந்த நட்சத்திரத்தில் நிற்க்கிறார்? கும்ப ராசியில் பயணிக்கும் சனிபகவானுக்கும்,செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு என்ன? அசுபத்தன்மையா? சுபத்தன்மையா? லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு உள்ள தொடர்பு என்ன? இந்த நிலைகளில் ஆய்வு செய்தால்தான் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரத்தை உடையவர்களுக்கு சனிபகவான் இந்த இரண்டரை வருட காலங்களில் எந்த காலகட்டங்களில் என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்பதை கணிக்க முடியும்.

Sani Peyarchi Palan 2023 Tamil: Sani bhagavan Parvai palan and Parikaram

பார்வை பலம்

கும்ப ராசிக்காரர்கள் மட்டுமில்லாமல் கும்ப ராசியில் வேறு ஏதேனும் கிரகங்கள் மேற்சொன்ன நட்சத்திரங்களில் நின்றாலும் அந்த கிரகத்தை சனிபகவான் கடக்கும் போதும் அதற்குண்டான பலனையும் கொடுப்பார். இதே நிலையில்தான் மற்ற நட்சத்திரங்களுக்கும் ஆய்வு செய்ய வேண்டும். இதே நிலையில்தான் அஷ்டமச்சனி,அர்த்தாஷ்டமச்சனி,கண்டச்சனி நடப்பில் வருபவர்களுக்கும் ஆய்வு செய்ய வேண்டும். திசை,புத்தி நடத்தும் கிரகங்களுக்கும் பார்வை பலம் உண்டு. கும்பராசியில் பயணிக்கும் சனிபகவானுக்கும் பார்வை பலம் உண்டு .இந்த இரண்டும் சேர்ந்து ஏதாவது கிரகங்களை பார்வை செய்கிறதா? அல்லது கிரகங்கள் இல்லாத பாவகங்களை பார்வை செய்கிறதா? என்கிற ரீதியிலும் ஆய்வு செய்ய வேண்டும். கிரகங்கள் நேர்கதியில் பார்வை செய்வதற்கும்,வக்ரகதியில் பார்வை செய்வதற்கும் நன்மை,தீமைகளில் விதிவிலக்குகளை ஏற்படுத்தும்.

Sani Peyarchi Palan 2023 Tamil: Sani bhagavan Parvai palan and Parikaram

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுதல்,பிரதோஷ வழிபாடு செய்தல்,குறிப்பாக சனிக்கிழமை பிரதோஷம் வரும் நாட்கள்,தேய்பிறை அஷ்டமி காலங்களில் காலபைரவரை வழிபடுதல்,சனிபகவான் காயத்ரி மந்திரத்தை தினமும் 9 முறை உச்சாடனம் செய்தல்,அல்லது சனிக்கிழமை தோறும் 108 முறை உச்சாடனம் செய்தல்,தினமும் காகத்திற்கு அன்னம் வைத்தல்,சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளித்தல்,மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல்,பௌர்ணமியன்றோ, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளிலோ குலதெய்வ வழிபாடு செய்தல்,நட்சத்திரங்களின் அதிதேவதை வழிபாடு செய்தல்,உங்கள் சுய ஜாதகத்தில் நடப்பு திசை மற்றும் புத்தியை ஆய்வுசெய்து அதற்குண்டான வழிபாடுகளை செய்தல்.மேற்சொன்ன வழிபாட்டு முறைகளை ஆத்மார்த்தமாகவும்,இறை நம்பிக்கையுடனும் கடைபிடித்து வந்தால் சனிபகவானின் நட்பை பெறலாம் என்றும்,பாதிப்புகளை நாம் உணர முடியாத அளவிற்கு பாதுகாக்கும்.

ஜோதிட சாம்ராட் P.P. சதீஸ்குமார்
திருப்பூர்.

9842757275
9159751597

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+