
ஏழரை சனி,அஷ்டமத்து சனியால் பாதிப்பா.. இந்த ஒரு செயல்..சனியை சந்தோஷப்படுத்தும்..அள்ளித்தருவார்
சென்னை: ஏழரை சனியும் அஷ்டமத்து சனியும் ஒரு மனிதனை ஆட்டி படைத்து விடும். கண்டச்சனியும் அர்த்தாஷ்டம சனியும் மனிதர்களை அசர வைத்து விடும். சனியால் சங்கடத்திற்கு ஆளானவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால் போதும் சனிபகவானை சந்தோஷப்படுத்த முடியும்..அள்ளிக்கொடுப்பாராம் சனிபகவான்.
ஏழரை ஆண்டு காலம் சனிபகவான் ஒருவருக்கு பாதிப்பை தருவார். ராசிக்கு 12ஆம் வீட்டில் வரும் போது விரைய சனியாகவும் ராசியில் அமரும் போது ஜென்ம சனியாகவும், ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமரும் போது பாத சனியாகவும் மொத்தம் ஏழரை ஆண்டு காலம் உலகத்தின் உண்மை நிலையை உணர வைத்து விடுவார்.
அதே போல சனி பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமரும் போது கண்டச்சனியாகவும்..8ஆம் வீட்டில் அமரும் போது அஷ்டமத்து சனியாகவும் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்யும் போது அர்த்தாஷ்டம சனியாகவும் பலன்களைத் தருவார் சனிபகவான்.
இருக்கு இன்று குறும்படம் இருக்கு! கமல் முன்னிலையில் உடைய போகும் உண்மைகள் யாருக்கு சாதகம் தெரியுமா?

விரைய சனி
சனி பகவான் இப்போது மகர ராசியில் இருக்கிறார். வரும் ஜனவரி மாதத்தில் சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். இந்த இடப்பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனி காலமாகும். ஏழரை சனி மீன ராசிக்காரர்களுக்கு தொடங்குகிறது. முதலில் நிறைய பணம் வரும். அந்த வருமானத்தை செலவு செய்ய வைப்பார் சனிபகவான். உங்களுக்கு வரும் செலவுகளை சுப விரைய செலவாக மாற்றுங்கள். சனிக்கிழமைகளில் சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும். ஏழைகள்..இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் சனிபகவானை மகிழ்ச்சிப்படுத்தும்.

ஜென்ம சனி
சனி பகவான் மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசி மண்டலத்தை கடக்க 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்வார் சனி பகவான். கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் சனி பகவான் ஜென்ம சனியாக பயணம் செய்யப்போகிறார். ஏற்கனவே விரைய சனியில் நிறைய படிப்பினைகளை கற்றுக்கொடுத்திருப்பார். தலைமேல் அமர்ந்து பயணம் செய்யும் சனி பகவான் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று உணர்த்துவார். உங்களின் உண்மையான சொந்தம் யார் நண்பன் யார் என்று உணர்த்துவார் சனி பகவான். ஜென்ம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் எறும்புக்கு பச்சரிசி போட பாதிப்புகள் குறையும். இயலாதவர்கள் வயதானவர்களுக்கு செருப்பு.. குடை வாங்கித்தரலாம்.

பாத சனி குடும்ப சனி
ஏழரை சனியில் கடைசி இரண்டரை ஆண்டுகள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பாத சனியாக பயணம் செய்வார் சனி பகவான். குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் வரும். முக்கியமாக கால்களில் நிறைய பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி அடிபடும் பார்த்து பத்திரமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் சரியாக வீட்டு பெரியவர்களுக்கு பணிவிடைகள் செய்ய வேண்டும். கடன் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க காகத்திற்கு சனிக்கிழமை நாட்களில் தயிர் சாதம் எள் கலந்து வைக்க வேண்டும். பாத சனி காலத்தில் படிப்படியாக பொருளாதார சிக்கல்கள் குறைந்து நன்மைகள் நடைபெற ஆரம்பிக்கும். மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பாத சனியாக அமரப்போகிறார். கடந்த 5 ஆண்டு காலத்தில் பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது.

அர்த்தாஷ்டம சனி
சனி பகவான் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போவது அர்த்தாஷ்டம சனி. 2023ஆம் ஆண்டு முதல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி வரப்போகிறது. இந்த சனி அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அர்த்தாஷ்டம சனி காலத்தில் வீடு, நிலம், வாகனங்களில் சில பிரச்சினையை ஏற்படுத்தி அதற்கான தீர்வினையும் கொடுப்பார் சனி பகவான்.

கண்டச்சனி
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்வது கண்டச்சனி காலமாகும். கும்ப ராசியில் சனி பயணிக்கும் காலத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலமாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக கண்டச்சனி காலத்தில் குடும்பத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரும். வீண் வம்பு வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கண்டச்சனி இரண்டரை ஆண்டு காலம் என்றாலும் பிசினஸ், தொழில், வியாபார பார்ட்னர்களைப்பற்றிய உண்மையை உணர்த்துவார் சனி பகவான். இந்த கால கட்டத்தில் ஏழைகள், இயலாதவர்களுக்கு உணவு வாங்கித்தரலாம்.

அஷ்டம சனி காலம்
அஷ்டம சனி என்பது எட்டாம் வீட்டில் சனி பகவான் அமரும் காலம். கஷ்டங்களை அதிகம் கொடுக்கும் காலம் அஷ்டம சனி காலம். அசிங்கம்..அவமானம்..என படாதபாடு படுத்தி எடுத்து விடுவார் சனிபகவான். ஏழரை சனி காலத்தை விட அதிகம் கஷ்டப்பட வைப்பது அஷ்டம சனி காலமாகும். கணவன் மனைவி இடையே பிரச்சினை குடும்பத்தில் சிக்கல்..பண நெருக்கடி.. கடன் பிரச்சினை ஏற்படும். ஆளை விடுங்க சாமி என பலரையும் அலற வைத்து விடும். 2023ஆம் ஆண்டு முதல் கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி காலம் ஆரம்பிக்கிறது. எனவே அஷ்டம சனியால் அவதிப்படுபவர்கள் அரச மரத்தடியில் நீர் விட்டு, தீபம் ஏற்றி, மரத்தை சுற்றி வந்து வழிபடலாம். இதை தினமும் செய்யலாம் என்றாலும், சனிக்கிழமைகளில் செய்வது சிறப்பு நன்மைகளை அளிக்கும்.

சனியால் ஏற்படும் சங்கடம் நீக்கும் அனுமன்
ஆஞ்சநேயரின் பக்தர்களை சனி பகவான் தொல்லைப்படுத்துவதில்லை. ஆகையால் ஏழரை சனி காலத்தில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது நன்மை பயக்கும். சனி பகவானின் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். கோளறு பதிகம், சனி சாலிசா மற்றும் சனி பகவானின் மந்திரங்களை பாராயணம் செய்யலாம். சனி பகவான் தொடர்பான பொருட்களை தானம் செய்தால் சனி மகிழ்ச்சி அடைகிறார். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். தொழுநோயாளிகளுக்கு சேவை செய்யுங்கள். சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.