சனிப்பெயர்ச்சி: 9இல் சனி கடகத்துக்கு ரூட்டு கிளியர்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும்.. இதில் மட்டும் கவனம்
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கடக ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு 9 ஆம் இடத்தில் சனி, பாக்கிய சனி. ஆலங்குடி குரு ஸ்தலத்தில் சுவாமி வழிபாடு செய்வது உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களைத் தரும். 1 கிலோ நெய், குங்குமம், விபூதி படைத்து, குங்குமம் விபூதியை வீட்டுக்கு எடுத்து வந்து தினமும் பயன்படுத்தி வருவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். சுறுசுறுப்பு உண்டாகும். பெரிய அதிர்ஷ்டங்கள் வரும் யோகம் உண்டு. அஷ்டம சனியிலும் உங்களுக்கு அனைத்து நன்மைகளுமே நடந்திருக்கும்.
சந்திரன் ஆட்சி பெற்றதால் எப்போதுமே குழப்பத்துடன் இருந்திருக்கும். மன அழுத்தம், வயிறு சார்ந்த பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 2 ஆம் இடத்தில் கேது உள்ளார். ராகு இரண்டாம் இடத்தைப் பார்க்கிறார். 8 ஆம் இடத்தில் ராகு வருவதால் வாகன விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேற்று மொழி பேசுபவர்களால் உங்களுக்கு அதிக ஆதாயம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம், பெரும் பொறுப்புகள் வந்து சேரும்.
அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால், அதனால் பெரும் ஆதாயம், மக்கள் செல்வாக்கு, கெளரவம் உண்டாகும். உங்களை நம்பி பெரியளவில் மக்கள் கூட்டம் உங்கள் பின்னால் வரும். அந்த அளவுக்கு ஏற்றம் பெறுவீர்கள். சினிமா துறை, படைப்பாளிகள், அரசியல்வாதிகள், தொழில் துறையினர், விஞ்ஞானிகள், பேராசிரியர்களுக்கு அங்கீகாரம், விருதுகள் போன்றவை கிடைக்கும்.
கடக ராசியினருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும், ராணுவம், கடற்படை, கப்பல் படையில் இருப்பவர்கள் நல்ல பொறுப்பிற்கு வருவார்கள், வார்த்தையில் கவனமாக இருப்பது நல்லது. கோபப்படுவது, திட்டுவது, சபிப்பது கூடாது. உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், ஹார்மோன் சமநிலையற்றது போன்ற விஷயங்களை சரிசெய்து கொள்வது நல்லது.
ஆரோக்கியத்தை தவிர அனைத்தும் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். 9 இல் சனி இருப்பதால் அதிர்ஷ்டம் கொட்டும். வண்டி, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. விலையுயர்ந்த இருசக்கர வாகனம், கார் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள். 8 இல் ராகு, 2 இல் கேது இருப்பதால் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications