வைகுண்ட ஏகாதசி கதை: பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பது ஏன் தெரியுமா?

ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விரத மகிமை பற்றியும் சொர்க்கவாசல் திறப்பது ஏன் என்பது பற்றியும் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளார். ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில்தான். ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படும் நேரத்தில் ஏகாதசி விரத மகிமை பற்றியும் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறப்பது ஏன் என்பது பற்றியும் பார்க்கலாம்.

மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும். மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி.

கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று நினைத்தார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார்.

பெண்ணால் அழிந்த அசுரன்

பெண்ணால் அழிந்த அசுரன்

பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான். அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், 'ஹூம்' என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.

உற்பத்தி ஏகாதசி

உற்பத்தி ஏகாதசி

அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார்.

மகாவிஷ்ணுவிற்கு வரம் தந்த அசுரர்கள்

மகாவிஷ்ணுவிற்கு வரம் தந்த அசுரர்கள்

இதே போல மற்றொரு புராண கதையும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

கொடுத்த வாக்கு

கொடுத்த வாக்கு

மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக்கொண்டு, ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார்.

சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார்.

வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல்

வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல்

அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். எனவேதான் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம்

வைகுண்ட ஏகாதசி விரதம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளை தரிசிக்க பக்தர்கள் தசமி அன்றும், ஏகாதசி முழுவதும் விரதம் இருப்பார்கள். ஏகாதசி பகல், இரவில் தூங்காமல் கண் விழித்து பெருமாளின் பாசுரங்களை பாடுவார்கள். வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகாலையில் பரமபத வாசல் வழியாக வரும் பெருமாளை தரிசித்து, சொர்க்க வாசல் வழியாக நுழைந்து தரிசிக்க மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

துவாதசி பாரணை 21 காய்கறிகள்

துவாதசி பாரணை 21 காய்கறிகள்

இரண்டு நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள், துவாதசி தினத்தன்று பாரணை செய்ய வேண்டும். பாரணை என்பது 21 காய்கறிகளை வைத்து சமைத்து சாப்பிட வேண்டும் என்பார்கள். ஏகாதசியிலும் உணவு உண்ணாமல், இரவு முழுவதும் விழித்திருக்கிறோம் எனவேதான் வயிறுக்கு இதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டக்காய். அகத்திக் கீரை பொரியலாகவும், நெல்லிக்காய் துவையலாகவும், சுண்டக்காய் வறுவலாகவும் சாப்பிட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+