விமான ஜன்னலில் இருந்து பார்த்தால் இப்படியா? பிரமிக்க வைக்கும் சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே!
பெங்களூர்: விமானத்தில் பறக்கும்போது அதன் ஜன்னல் வழியாகக் கீழே எட்டிப் பார்த்தால், பச்சைப் பசேல் வயல்வெளிகளுக்கு நடுவே நீண்ட, அகலமான ஒரு சாலை நேர்கோட்டில் செல்வதைப் பார்க்கும்போது யாருக்குத்தான் பிரமிப்பு ஏற்படாது? அப்படி, சென்னை - பெங்களூர் அதிவிரைவுச் சாலையின் விமான காட்சிகள் மற்றும் ட்ரோன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
மேகங்களுக்குக் கீழே, பிரமாண்டமான பாலங்கள், வளைந்து நெளியும் சந்திப்புகள் மற்றும் பசுமையான சுற்றுசூழலுக்கு இடையே இந்தச் சாலை ஒரு கோடு போட்டது போல மிக அழகாகக் காட்சியளிக்கிறது.

பயண நேரம் பாதியாகக் குறையும் அதிசயம்
தற்போது சென்னையில் இருந்து பெங்களூர்க்குச் சாலை வழியாகச் செல்ல வேண்டும் என்றால், போக்குவரத்து நெரிசலைப் பொறுத்து 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்தப் புதிய 4 வழி பசுமை வழிச் சாலை முழுமையாகத் திறக்கப்பட்டால், வெறும் 2.5 மணி நேரம் முதல் 3 மணி நேரத்திற்குள் சென்னையில் இருந்து பெங்களூரைச் சென்றடைய முடியும்.
மணிக்கு அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும் வகையில் இந்தச் சாலை சர்வதேசத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் டிராக்டர்களுக்கு இந்தச் சாலையில் அனுமதி கிடையாது என்பதால், தடையற்ற அதிவேகப் பயணம் சாத்தியமாகும்.
இந்தச் சாலை எந்தெந்த ஊர்கள் வழியாகச் செல்கிறது?
மொத்தம் சுமார் 262 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தச் சாலை மூன்று மாநிலங்களை இணைக்கிறது.
கர்நாடக ரூட்: பெங்களூர் அருகே உள்ள ஹோஸ்கோட்டையில் தொடங்கி, மாலூர், பங்காரப்பேட்டை வழியாக பெத்தமங்கலா வரை செல்கிறது.
ஆந்திரப் பிரதேசம் ரூட்: சித்தூர் மாவட்டத்தில் உள்ள பைரெட்டிபள்ளி, பங்காருபாலம், குடிபாலா ஆகிய பகுதிகள் வழியாகப் பயணிக்கிறது.
தமிழ்நாடு ரூட்: வாலாஜாப்பேட்டை, அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாகச் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வந்து இணைகிறது.
Infrastructure that looks impressive from above!Bengaluru Airport and the Bengaluru–Chennai Expressway. https://t.co/YMopsgqQZZ
— Kumar (@kumarpolitician) November 17, 2026
தற்போதைய நிலை என்ன? எப்போது முழுமையாகத் திறக்கப்படும்?
இந்தத் திட்டத்தில் மொத்தமுள்ள 262 கிலோமீட்டரில், இதுவரை சுமார் 230 கிலோமீட்டர் தூரத்திற்குப் பணிகள் முடிவடைந்துவிட்டன.
கர்நாடகா பகுதி: 71.7 கிலோமீட்டர் தூரமும் 100 சதவீதம் முடிவடைந்து, கடந்த 2024 டிசம்பர் மாதமே மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுவிட்டது.
ஆந்திரா பகுதி:* பெத்தமங்கலா முதல் பைரெட்டிபள்ளி வரையிலான 25 கிலோமீட்டர் சாலை 2026 ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதன் மூலம் பெங்களூர் ஹோஸ்கோட்டையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு இப்போது தடையின்றிப் பயணிக்க முடிகிறது. ஆந்திராவின் எஞ்சிய பகுதிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
தமிழ்நாடு பகுதி: தமிழகத்தில் உள்ள 106 கிலோமீட்டரில், 92 கிலோமீட்டர் சாலைப் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், அரக்கோணம் - காஞ்சிபுரம் இடையேயான 25.5 கிலோமீட்டர் பிரிவில் பழைய ஒப்பந்ததாரருக்கு ஏற்பட்ட நிதி மற்றும் சட்டச் சிக்கல்களால் சுமார் 14 கிலோமீட்டர் பணி மட்டும் பாதியில் நின்றது.
தற்போது நீதிமன்றத் தடைகள் நீங்கி, அந்த எஞ்சிய 14 கிலோமீட்டர் பணியை முடிக்க சுமார் 614 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய டெண்டர் விட்டுள்ளது. இதனால், சென்னை முதல் பெங்களூர் வரையிலான ஒட்டுமொத்த சாலையும் 2027-ஆம் ஆண்டில் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கும், பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்தச் சாலை ஒரு மிகப்பெரிய வரமாக அமையப்போவது உறுதி.


Click it and Unblock the Notifications
