கள்ளக்குறிச்சி சிறுமிகளுக்கு பாம்பு கடித்த தடயம் இல்லையா? பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மூக்கனூர் கிராமத்தில் நேற்று உயிரிழந்த இரு குழந்தைகளின் உடலில் பாம்பு கடித்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை என சொல்லப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பல்வேறு சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரன்- புஷ்பா தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் தேவதர்ஷினி, 2 வயதில் தேவஜனனி ஆகிய இரு மகள்கள் இருந்தனர்.

கடந்த நவம்பர் 17ஆம் தேதி இவர்கள் 4 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் ஒரு பாம்பு நுழைந்துவிட்டது. அது தூங்கிக் கொண்டிருந்த புஷ்பாவின் மீது ஏறியுள்ளது. அவருக்கு ஏதோ நம் மீது ஊர்ந்து செல்வது போல் உணர்ந்ததை அடுத்து எழுந்தார். அப்போது அவர் மீது ஏறியது பாம்பு, சுதாரித்து எழுவதற்குள் அவரையும், அவரது இரு குழந்தைகளையும் கடித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா, கூச்சலிட்டுள்ளார்.
அலறல் சப்தம்
இவரது அலறல் சப்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து பார்த்தனர். உடனே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மூவரையும் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மூன்று பேருக்கும் சிகிச்சை அளித்தனர்.
உயிரிழந்த குழந்தைகள்
எனினும் சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தாய் புஷ்பாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாம்பு கடித்த அடையாளம் இல்லை
இந்த நிலையில் சிறுமி தேவதர்ஷினியின் உடலில் பாம்பு கடித்ததற்கான எந்த அடையாளம் இல்லை என்பதால் சிறுமிகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இரு குழந்தைகளும் பாம்பு கடித்ததால்தான் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன்
அந்த பாம்பு கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவீரியன் பாம்பு என சொல்லப்படுகிறது. இந்தியாவின் ஆபத்தான பாம்புகளில் ஒன்று கட்டுவிரியன். இதன் விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கும். நாகப்பாம்பின் விஷத்தை விட பன்மடங்கு வீரியமிக்கது. இதன் பற்கள் ஊசி போல் சிறியதாக இருக்கும் என்பதால் இது கடிக்கும் போது கடித்ததே தெரியாது. ஏதோ கொசு கடித்தது போல் இருக்கும்.
கட்டுவிரியன் பாம்பு கடித்த அறிகுறி
கடித்த இடத்தில் வீங்குவது, ரத்தம் கசிவது, வலி என எதுவுமே இருக்காது. பெரும்பாலும் தூங்குவோரை கடித்துவிட்டு சென்றுவிடும். இந்த பாம்பு கடித்தால் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதுதான் ஆரம்ப அறிகுறி. கண் இமைகள் தானாக மூடி, கண்களை திறக்கவே முடியாது, பார்வையும் மங்கி இரட்டை இரட்டையாக தெரியும். நாக்கு குழறும், எச்சில் கூட விழுங்க முடியாது. கடித்த 6 மணி நேரத்திற்கு விஷ முறிவு மருந்து கொடுக்காவிட்டால் முதலில் நுரையீரல் செயலிழக்கும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.
பாம்பு கடித்தால் என்ன செய்யக் கூடாது?
பாம்பு கடித்த இடத்தில் எந்த கட்டும் கட்ட கூடாது, வாய் வைத்து உறிஞ்சுவது கூடவே கூடாது. பாம்பு கடித்தால் பதற்றப்படவே கூடாது, அப்படி பதறினால் இதய துடிப்பு அதிகரித்து விஷம் உடல் முழுவதும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. பாம்பு கடித்தவர்கள் நடந்தோ, ஓடியோ, தனியேவோ மருத்துவமனைக்கு செல்லக் கூடாது. அவர்களை ஆசுவாசப்படுத்தி, எந்த பதற்றமும் இல்லாமல் விவேகமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications
