மம்முட்டிக்கு ஈகோ அதிகம் தான்.. ஆனால், மனசு அப்படி அல்ல! ஆர்கே செல்வமணி சொன்ன விஷயம்
சென்னை: நடிகர் மம்முட்டியை பற்றி பேசும்போது அவருடைய நடிப்பு, படங்கள் தேர்வு செய்யும் விதம், இப்போதும் அவருடைய பிட்னஸ் என பல விஷயங்கள் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் அவருடன் பழகியவர்கள் சொல்லும் அனுபவங்கள் சில நேரங்களில் அவருடைய வேறொரு குணத்தை காட்டும். அப்படித்தான் இயக்குனர் ஆர்கே செல்வமணி மம்முட்டி பற்றி பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது. மம்முட்டிக்கு ஈகோ அதிகம், அவரிடம் நேரடியாக பேசிவிடலாம், வேலை என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பானவர் என்று ஆர் கே செல்வமணி கூறி இருப்பது ரசிகர்களை பேச வைத்திருக்கிறது.

ஆர்கே செல்வமணி பேட்டி
ஆர்கே செல்வமணி சாய் வித் சித்ரா யூடியூப் சேனலில் பேசுகையில், "மம்முட்டி மாதிரி ஈகோ உள்ள நபரை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் அவரை போல நேர்மையான ஒருவரையும் பார்க்க முடியாது. மனதில் பட்டதை நேரடியாக பேசி விடுவார். ஆனால் படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் தன்னுடைய வேலையில் சரியாகவும், தெளிவாகவும் இருப்பார். இந்த விஷயத்தில் விஜயகாந்த் எப்படி இருந்தாரோ அதே மாதிரியான குணம் மம்முட்டி இடமும் இருக்கிறது.
மறுப்பு தெரிவித்த மம்முட்டி
மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் வேலை செய்வதற்கான சூழல் வந்த போது அவரிடம் எப்படி வேலை பார்ப்பது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த கட்டத்தில் மம்முட்டியே, "இந்த கிராக்குடன் என்னால் வேலை பார்க்க முடியாது" என்று சொல்லிவிட்டார். அதனால் நான் அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன். இருவருக்கும் அப்போது ஒத்துப்போகாத சூழ்நிலைதான் இருந்தது. அதற்கு பிறகு நான் எடுத்த சில படங்கள் தோல்வியடைந்துவிட்டது. நான் ஒரு தோல்வி அடைந்த இயக்குனர் என்று பெயரில் இருந்தேன்.
மம்முட்டியின் பெருந்தன்மை
அந்த சமயத்தில் மம்முட்டியிடம் ஒரு கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டுவிட்டு நாம சேர்ந்து பண்ணலாம் என்று சொன்னார். அப்போது நான் அவரிடம் அட்வான்ஸ் எவ்வளவு வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், "இப்போதைக்கு அட்வான்ஸ் உங்களால் கொடுக்க முடியாது. அதனால இருக்கட்டும், பிறகு பார்த்துக்கலாம்" என்று படத்தை முடித்து கொடுத்தார். அடுத்தவங்க கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியும் அவர் செய்து வருவார்" என்று அந்த பேட்டியில் செல்வமணி பேசி இருக்கிறார்.
ஓம் பிரமோஷனில் பேசியது
இந்த சம்பவம் இப்போது பேசப்படுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீபத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி நடிக்கும் ஓம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மம்முட்டி பேசிய சில விஷயங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பற்றி அவரே வெளிப்படையாக கிண்டல் செய்து பேசி இருந்தார். "சாய் பல்லவிக்கு படத்தில் சண்டை காட்சிகள் இருக்கிறது. ஆனால் எனக்கு அடிஆட்களை டேய் வாங்கடா என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கும் மாதிரியான காட்சிதான் இருக்கிறது. இதெல்லாம் ஒரு ரோலா? இதுக்காக என்னை 6 மாசமாக நடிக்க வைத்துவிட்டார்கள். 45 நாள் ஷூட்டிங் கூப்பிட்டு 6 மாசமாக டேய் வாங்கடா போய் அடிச்சிட்டு வரலாம் என்பது போலவே நடிக்க வச்சுட்டாரு" என்று பேசி இருந்தார்.
இந்த பேச்சு வெளியான போது மம்முட்டிக்கு ஈகோ அதிகம் தனுஷுக்கு ட்ரெய்லரில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் தான் இப்படி பேசுகிறார் என்று பலரும் விமர்சித்தனர். இப்போது ஆர் கே செல்வமணி பேசிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் மம்முட்டியின் குணத்தை பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒருவரிடம் ஈகோ இருக்கிறது என்பதற்காக அவர் மோசமான மனிதர் என்று சொல்லிவிட முடியாது. வேலை விஷயத்தில் அவருக்கு இருக்கும் பிடிவாதம், நேரடியாக பேசும் குணம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அதை புரிந்து கொண்டு உதவும் மனதும் இருக்கிறது என்பதை செல்வமணி சொன்ன சம்பவம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
