செஞ்சி சிறுமி மாயம்.. தாய் பவானியிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாகத் துருவிதுருவி விசாரணை! ஏன்?
விழுப்புரம்: செஞ்சி சிறுமியின் தாயார் பவானியை தனியாக அழைத்து, 8 மணி நேரத்திற்கும் மேலாக பல கோணங்களில் கேள்விகளை எழுப்பி சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

வழக்கின் ஆரம்பத்தில் காடுகள், மலைக் குன்றுகள், கிணறுகள், 14 நேஷனல் பெர்மிட் லாரிகள், ரவுடி ராஜதுரை, நாமக்கல் கோவில் சிசிடிவி எனப் பல திசைகளில் தேடிய சிபிசிஐடி தனிப்படை, இப்போது வெளியாட்கள் அல்லது வெளிமாவட்ட ஆட்கடத்தல் என்ற மற்ற கோணங்களை ஓரங்கட்டிவிட்டு, குடும்பத்தினரைச் சுற்றியே தனது முழு கவனத்தையும் குவித்துள்ளது.
அதன் உச்சகட்டமாக, சிறுமியின் தாயார் பவானியை மட்டும் தனியாக அழைத்து, 8 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பல்வேறு புதிய கோணங்களில் கேள்விகளை எழுப்பி சிபிசிஐடி அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 மணி நேரக் கிடுக்கிப்பிடி விசாரணை: நடந்தது என்ன?
ஏற்கனவே சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாகக் கிராமத்திற்கு வந்து வீட்டின் கதவை உள்ளே பூட்டி பாட்டி, தாய், தந்தையிடம் தனித்தனியாக விசாரித்ததனர். அதோடு அரசுப் பள்ளி முகாம் அறையில் தந்தை வடிவேலுவிடமும், தாய் பவானியிடமும் தலா 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் தாய் பவானியை விசாரணைக்கு அழைத்த சிபிசிஐடி அதிகாரிகள், இந்த முறை 8 மணி நேரத்திற்கும் மேலாக வரை அமர வைத்துத் தொடர்ந்து கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளனர். வழக்கமான கேள்விகளைத் தவிர்த்து, இந்த முறை முற்றிலும் மாறுபட்ட புதிய கேள்விகளைக் கொண்டு அதிகாரிகள் சல்லடை போட்டுள்ளனர்.
முரண்பாடுகளை உடைக்க அதிகாரிகள் கையாண்ட வியூகம்
வேறு எந்தத் திசையிலும் செல்லாமல், தாய் பவானியிடமே சிபிசிஐடி அதிகாரிகள் இவ்வளவு தீவிரமாகக் கேள்விகளைக் கேட்பதற்கு முக்கியக் காரணங்கள் உள்ளன:
கடந்த ஒரு மாதத்தில் பவானி அளித்த முந்தைய வாக்குமூலங்களுக்கும், தந்தை வடிவேலு மற்றும் பாட்டி தனித்தனியாக அளித்த வாக்குமூலங்களுக்கும் இடையே சில முக்கிய இடங்களில் முரண்பாடுகள் இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர். அந்த முரண்பாடுகளை உடைத்து உண்மையை வரவழைக்க, ஒரே கேள்வியை வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி 8 மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன்கள் மற்றும் வங்கி கணக்குப் புத்தகங்களில் இருந்து கிடைத்த அழைப்பு விவரங்கள், பணப் பரிமாற்றங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி, இந்த நபருடன் எதற்காகப் பேசினீர்கள்? இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? என ஆதாரங்களை வைத்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு வீட்டின் கதவு திறந்திருந்தது எப்படி? அண்டை வீட்டாருக்குக் கேட்ட குழந்தையின் அலறல் சத்தம் ஒரே அறையில் தூங்கிய தாய்க்குக் கேட்காமல் போனது எப்படி? எனச் சம்பவத்தன்று இரவு நடந்த ஒவ்வொரு நிமிடத்தையும் மீண்டும் மீண்டும் விவரிக்கச் சொல்லி அதிகாரிகள் துருவியுள்ளனர்.
ஆரம்பத்தில் கதறி அழுத பவானி, திடீரென என் மகள் உயிருடன் இருக்கிறாள்.. அவள் கண்டிப்பாக வருவாள் என்று உறுதியாகப் பேசியதன் பின்னணி என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரித்துள்ளனர்.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் உண்மை!
வெளியாட்கள் கடத்தியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை சிக்காத நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் வேறு எந்தக் கோணத்தையும் எடுக்காமல், தாய் பவானி மற்றும் குடும்பத்தாரின் வாக்குமூலங்களில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதிலேயே முழுமையாக இறங்கியுள்ளனர்.
8 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த அதிதீவிர விசாரணையின் மூலம், செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கின் உண்மை முகம் மிக விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
