‘‘அம்மாவுடன் போய் படுனு’’ மனைவி சொல்வது கொடுமை! கணவரின் விவாகரத்தை உறுதி செய்த மதுரை ஹைகோர்ட்
மதுரை:'' 'அம்மாவுடன் போய் படுனு' மனைவி கூறியதை ஏற்க முடியாது. அது உண்மையில் ஒவ்வொரு மகனுக்கும் மனவேதனையை ஏற்படுத்தக்கூடியது'' எனக்கூறி தூத்துக்குடி தம்பதிக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உறுதி செய்துள்ளது. இதன்மூலம் அவர்களின் 24 ஆண்டுகால திருமண பந்தம் முறைப்படி முடிவுக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் உள்ள தூய சவேரியர் தேவாலயத்தில் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

திருமணமான புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன்பிறகு இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் 24 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்தனர். இறுதியாக மனைவி கடந்த 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் தாய் வீட்டிற்கு சென்றார்.
தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை அவரது கணவர் திரும்ப அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். மனைவியுடன் சேர்ந்து வாழ எடுத்த முடிவு பலன் அளிக்காத நிலையில் அவரது கணவர் சார்பில் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் (அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பநல நீதிமன்றம் இல்லை -2019ல் தான் வந்தது) விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ''கணவர் என்று கூட பாராமல் என்னுடைய மனைவி மற்றவர்களின் முன்னிலையில் அவமானப்படுத்தினார். நடத்தையில் சந்தேகப்பட்டார். நான் இறந்த பிறகு என்னுடைய சொத்துகள் மற்றும் நகைகளை அவரது சகோதரரின் குழந்தைகளின் பெயரில் எழுதி வைப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக எனது தாயை தவறாக பேசியதோடு, தட்டிக்கேட்ட என்னை குடும்ப உறுப்பினர்களை கொண்டு தாக்கி உள்ளார். தாயுடன் சென்று படுனு மிகமிக தரக்குறைவான வார்த்தைகளை பேசி மனஉளைச்சலை கொடுத்தார். இதனால் விவாகரத்து வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. மனைவி மனரீதியாக தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இந்த விவாகரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழங்கப்பட்ட விவாகரத்து உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்த பெண் மனுவில் கோரியிருந்தார்.
அதில், ''என்னுடைய கணவர் எனக்கு பல்வேறு கொடுமைகளை கொடுத்தார். நிலம் வாங்குவதாக கூறி என்னுடைய நகைகளை விற்பனை செய்துவிட்டார். நான் தான் கணவரால் கொடுமைகளை அனுபவித்தேன். இதனால் விவாகரத்து வழங்கிய தூத்துக்குடி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி பி முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி பி முருகன் தீர்ப்பு வழங்கினார். அப்போது தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை அவர் உறுதி செய்தார். அதோடு அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் கணவன் - மனைவி இடையேயான 24 ஆண்டுகால வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தீர்ப்பின்போது நீதிபதி பி முருகன் முக்கிய கருத்துகளை கூறினார். அப்போது அவர், ''கணவன் - மனைவி என்றால் சில நேரங்களில் சண்டைகள் நடக்கலாம். விரும்பத்தகாத பேச்சுகள் கூட வரலாம். ஆனால் ''உன் அம்மாவுடன் போய் படுனு'' ன மனைவி கூறியதை ஏற்க முடியாது. அது உண்மையில் ஒவ்வொரு மகனுக்கும் மனவேதனையை ஏற்படுத்தக்கூடியது.
இந்த வழக்கு விசாரணையின்போதும் கூட மேற்கூறிய வார்த்தைகளை சொல்லவில்லை என்று மனைவி தரப்பு மறுக்கவில்லை. நகைகளை கணவர் விற்றதாக கூறியதற்கும் சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ தனி மனுவும் தாக்கல் செய்யவில்லை. இதனால் தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உறுதி செய்கிறது'' என்றார்.


Click it and Unblock the Notifications
