அமெரிக்காவுக்கு என்னதான் ஆச்சு? கடைகளில் பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்.. பின்னணியில் அதிர்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள மக்கள் தற்போது போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மொத்தம் மொத்தமாக அள்ளி செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகிலேயே பெரிய வல்லரசாக அமெரிக்கா உள்ளது. ஆனால் அந்த அமெரிக்காவே தற்போது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படுவதோடு, இணையதளங்கள் அடுத்தடுத்து முடங்கி வருகின்றன.

இதன் அடுத்தக்கட்டமாக தான் தற்போது அமெரிக்காவில் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளதோடு, தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் போட்டிப்போட்டு வாங்கி செல்கின்றனர்.
குறிப்பாக அமெரிக்காவின் மிகவும் பிரபலமாக இருக்கும் 'காஸ்ட்கோ ஹோல்சேல் கார்ப்பரேஷன்'-னில் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்கள் தங்களின் கைகளில் இருக்கும் பணத்தை மொத்தமாக கொண்டு சென்று உணவு பொருட்கள்,உள்பட பிற அத்தியாவசிய பொருட்கள், அவசரகால பயன்பாட்டுக்கான பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அமெரிக்காவில் தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சேவைகளில் அடுத்தடுத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 14ம் தேதி அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கான தகவல் தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டது.
அதன்பிறகு கடந்த 16ம் தேதி முன்னணி வங்கிகளான பேங்க் ஆஃப் அமெரிக்கா, சேஸ், ஜேபி மார்கன், யுஎஸ் வங்கி, வெல்ஸ் ஃபார்கோ, ஜெல்லே உள்ளிட்டவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் கூட அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. இதுதவிர இன்னும் பல முன்னணி நிறுவனங்களின் சேவைகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. ஆப்பிள் ஐபோன் பயன்பாட்டிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதற்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை என்று கூறினாலும் கூட பொதுமக்களுக்கு அதுதொடர்பான சந்தேகம் உள்ளது. இப்போது சில நாட்களாக தினந்தோறும் இதுபோன்ற பிரச்சனைகள் வருகின்றன. இது தொடரும் பட்சத்தில் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்க முடியாத நிலை கூட வரலாம். மேலும் நிறுவனங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவில் 90 நாட்கள் வரை 'பிளாக்அவுட்' ஆக உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 'பிளாக்அவுட்' என்றால் மின்சாரம், இண்டர்நெட் உள்பட தொலைதொடர்பு சாதனங்கள் பயன்படுத்த முடியாது என்று தகவல்கள் பரவுகிறது.
இதுபற்றி அமெரிக்க அரசு எதுவும் சொல்லவில்லை. தற்போது வரை வதந்தியாகவே உள்ளது. ஏனென்றால் பல நிறுவனங்களின் பிரச்சனைகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் அச்சமடைந்து தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
இதுபற்றி அனலிஸ்ட் டேவிட் பெலிங்கர் கூறுகையில், '' மைக்ரோசாப்ட் முடக்கம், விமானங்கள் பறக்க முடியாமல் போனது, வங்கி சேவைகளில் குழப்பம், சமூக வலைதளங்களில் பரவும் பல்வேறு தகவல்கள் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிகமான பொருட்களை வாங்கி செல்கின்றனர். சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிக்கின்றனர்'' என்றார்.


Click it and Unblock the Notifications
